இரண்டு மாதங்களுக்கு முன்னால், மயிலாடுதுறைக்கு அருகில் இருந்த ஒரு கிராமத்தில் கோவிட் தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டேன். கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் நன்மைகளை எடுத்துக் கூறிய துண்டுப் பிரசுரங்களைத் தயாரித்து எடுத்துக் கொண்டேன். அந்த கிராமத்தில் எனது நண்பரின் நண்பர் ஒருவர் எனக்கு நல்ல பரிச்சயம் உள்ளவர். அவரைச் சந்தித்தேன். அவர் அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவரிடம் அழைத்துச் சென்று எனது நோக்கங்களை எடுத்துக் கூறினார்.
கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் ஒருமுறையாவது நேரில் சென்று தடுப்பூசியின் அவசியம் குறித்து எடுத்துச் சொல்வது என்பதும் எல்லா வீடுகளையும் தொடர்பு கொண்ட பின் மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் ஒரு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்வது என்பதும் திட்டங்கள். நண்பர், நான் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் மூவரும் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து தடுப்பூசியின் அவசியம் குறித்து எடுத்துச் சொன்னோம்.
ஊராட்சித் தலைவர் துண்டுப் பிரசுர வினியோகத்தைத் துவங்கும் முன், அந்த ஊரின் மாரியம்மன் கோவிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். பணி எண்ணியவை எண்ணியவாறு நடக்க அம்மனிடம் வேண்டிக் கொண்டார். நாங்களும் வேண்டிக் கொண்டோம்.
அந்த கிராமத்தினை முழுமையாக தடுப்பூசி இடப்பட்ட கிராமமாக ஆக்க வேண்டும் என்பது எனது விருப்பம். எனது விருப்பத்தினை மாவட்ட ஆட்சியருக்கு எழுதினேன். எல்லா வீடுகளும் தொடர்பு கொள்ளப்படுவதால் கிராமத்து மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் ; ஆகவே அந்த ஊருக்கு 2000 தடுப்பூசிகள் வழங்குமாறு கேட்டுக் கொண்டேன்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நான்கு முறை சென்று அந்த கிராமம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று கேட்டேன். சுகாதாரத்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு சொன்னார்கள். அவர்களை தினமும் ஒருமுறை என இரண்டு வாரத்துக்கு சந்தித்தேன்.
பின்னர் அந்த கிராமத்தில் சுகாதாரத் துறை ஒரு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்தது. அதில் 330 டோஸ்கள் மட்டுமே வழங்கப்பட்டன. அது நான்கு மணி நேரத்தில் நிறைவு பெற்றது. அடுத்த நாளில் 40 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அவர்களை ஒரு வேன் மூலம் அழைத்து வந்து மீண்டும் ஊரில் கொண்டு போய் விட்டேன். 370 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் ஏற்பட்ட ஆர்வத்திலும் விழிப்புணர்விலும் மேலும் 100 - 120 பேர் மயிலாடுதுறைக்கு வந்து அடுத்த சில நாட்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
அந்த கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் வீட்டின் முன்னால் வைத்து பராமரிக்கக்கூடிய மலர்ச்செடியான ‘’அலரி’’யை 500 கன்றுகள் வழங்கினேன். ‘’அலரி’’யை ஆடு மாடு மேயாது என்பதால் வளர்ப்பதும் பராமரிப்பதும் எளிது. இந்த விபரத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன்.
2000 பேர் வரை முயற்சி செய்து 500 வரை மட்டுமே இலக்கு எட்டப்பட்டுள்ளதே ; இந்த கிராமத்துக்கு கூடுதல் கவனம் கொடுத்து சற்று அதிகமான டோஸ்கள் ஒதுக்கப்பட்டால் முழுமையை எட்டி விடலாமே என்ற எண்ணமும் விருப்பமும் எனக்கு. இருப்பினும் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வது தான் விவேகம் என்ற நிலை. அமைதி காத்தேன். அந்த கிராமத்தில் வேறு சில பணிகளில் உதவுமாறு ஆலோசனை சொல்லுமாறு உடன் இருக்குமாறு அந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களும் நண்பர்களும் கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறே செய்தேன்.
சில நாட்களில் மேலும் ஒரு முகாம் ஏற்பாடானது. அது மாற்றுத் திறனாளிகளுக்கானது. அதில் அந்த கிராமத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் சில நாட்களில் அந்த கிராமத்துக்கு உட்பட்ட குக்கிராமம் ஒன்றில் முகாம் ஏற்பாடானது. அதில் 200 பேர் வரை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மெல்ல மெல்ல கிட்டத்தட்ட ஊரில் பாதிபேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
நான் மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது அங்கு செல்வேன். அப்போது என்னைப் பார்ப்பவர்கள் தடுப்பூசி எங்கே போடப்படுகிறது என்ற விபரம் கேட்பார்கள். எனக்குத் தெரிந்த விபரத்தை கூறுவேன். அந்த கிராம மக்கள் பலர் என்னை ஒரு சர்க்கார் ஆசாமி என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நேற்று மாலை 5 மணி அளவில் மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கும் கிராமம் ஒன்றிலிருந்து இளைஞர்கள் அழைத்து இன்று ஏற்பாடாகி உள்ள சுதந்திர தின விழாவில் நான் உரையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். காலை 8 மணிக்கு விழா என்று சொன்னார்கள். நான் சரி என ஒத்துக் கொண்டேன்.
இரவு 10 மணிக்கு தடுப்பூசிக்காக பணி புரிந்த கிராமத்திலிருந்து அந்த ஊரின் ஊராட்சித் தலைவர் பேசினார். இந்த நேரத்தில் அழைக்கிறாரே என்ன விஷயமாயிருக்கும் என எண்ணியவாறு அலைபேசியை எடுத்தேன்.
அந்த கிராமம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் தடுப்பூசி விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி செலுத்துக் கொள்வதில் முதன்மை பெற்றுள்ளதாகவும் அதனால் மாவட்ட ஆட்சியரின் பரிசுக்குத் தகுதி பெற்றுள்ளதாகவும் இன்று நடைபெறும் விழாவில் பரிசளிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் சற்று முன் அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்கள் என்று கூறினார். மிகுந்த நெகிழ்வுடன் நன்றி தெரிவித்தார். தடுப்பூசி விழிப்புணர்வு செயல்பாடுகளுக்காக ராஷ்ட்ரபதி அளிக்கும் விருதுக்கும் அந்த கிராமம் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறினார். மிகுந்த நெகிழ்வுடன் என்னிடம் நன்றியைத் தெரிவித்தார்.
இந்த மாத இறுதிக்குள் அந்த கிராமம் முழுமையையும் தடுப்பூசி இடப்பட்ட கிராமமாகச் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
விழாவுக்கு நான் வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். இன்னொரு கிராமத்தில் சுதந்திர தின உரை ஆற்ற இருப்பதைத் தெரிவித்தேன். இன்று மாலை கிராமத்தில் நேரில் வந்து சந்திப்பதாகக் கூறினேன்.
இன்று காலை அந்த இன்னொரு கிராமத்துக்கு உரை ஆற்றச் சென்றேன். காலை 8 மணிக்கு அங்கே சென்று விட்டேன். அங்கே சென்றதும் அங்கே உள்ள மக்களும் நண்பர்களும் இளைஞர்களும் தேசியக் கொடியை நான் ஏற்ற வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.
பகவான் புத்தரின் அறவாழி பொறிக்கப்பட்ட மூவர்ணக் கொடி எத்தனையோ தியாகிகளின் குருதியாலும் வியர்வையாலும் இன்று விண்ணில் பறக்கிறது. தாயின் மணிக்கொடி என்றான் பாரதி. தாயின் மணிக்கொடி பாரீர் என்றான் பாரதி.
கொடியேற்றி ஒரு சிற்றுரை ஆற்றினேன்.
’’நாம் நம்மைப் புரிந்து கொள்ள தமிழ்நாட்டின் வரலாற்றை பிரிட்டிஷ் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட கொடும் பஞ்சங்களிலிருந்து ஆரம்பிப்பதே சரியான துவக்கமாக இருக்கும். ஈவிரக்கமற்ற பிரிட்டிஷ் அரசாங்கம் செங்கல்பட்டு , வடார்க்காடு, தென்னாற்காடு பகுதிகளில் மக்கள் லட்சக்கணக்கில் உணவின்றி செத்துக் கொண்டிருந்த போது சென்னைத் துறைமுகத்திலிருந்தே உணவு தானியங்களை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் அந்த பஞ்சத்தில் மடிந்தனர். பல குடும்பங்களின் பல கிராமங்களின் வாழ்க்கை அழிந்து போனது. இதைப் போல பல பஞ்சங்கள் இந்தியாவெங்கும் பிரிட்டிஷ் ஆட்சியில் அவ்வப்போது உருவாயின. இந்தியாவின் ஆன்மீக இயக்கங்கள் அதன் பின் தோன்றி பசியால் வாடும் மக்களுக்கு உணவளித்தன. பஞ்சத்தை எதிர்கொண்டதிலிருந்து சராசரி தமிழ் அகம் அரசாங்கத்தை அஞ்சத் துவங்கியது. அதன் மற்றொரு பக்கமாக தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் மக்களை துச்சமாக நடத்துவதையும் அச்சுறுத்துவதையும் தம் இயல்பாகக் கொண்டுள்ளனர். அரசாங்கத்தின் உறுப்பாக இருக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களின் சேவகர்கள். இந்திய சுதந்திரம் அதனை சாத்தியமாக்கியிருக்கிறது. இந்நிலையை உருவாக்க எத்தனையோ தியாகிகள் தங்கள் உதிரம் சிந்தி உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். நாம் அதனை என்றும் நம் நினைவில் இருத்த வேண்டும். இந்தியாவில் கிராமமே பொருளியல் - சமூக நுண் அலகு. கிராம மக்களின் விழிப்புணர்வும் ஒற்றுமையும் தன்னிறைவுமே நாம் சென்றடைய வேண்டிய இலக்கு. நாம் அதனை சாத்தியமாக்க வேண்டும்.
‘’யாதும் ஊரே; யாவரும் கேளிர்’’ என்பது தமிழ் மரபு. நான் உங்கள் ஊரைச் சேர்ந்தவன் அல்ல. எனினும் உங்கள் அன்பால் என்னை உங்களில் ஒருவனாக உணரச் செய்துள்ளீர்கள். உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். உங்கள் அன்புக்கு நான் தகுதியுடையவனா என்பது எனக்குத் தெரியவில்லை. தகுதியுடையவனாக இருக்க முயற்சி செய்கிறேன். ஜெய்ஹிந்த்’’ என்று உரையாற்றினேன்.
நிகழ்வில் 30 பேர் பங்கெடுத்தனர்.