Friday 25 February 2022

தற்செயல்

சென்னையில் ஓர் இலக்கியக் கூட்டம் நடைபெற்றது. அங்கே ஓர் இளம் இலக்கிய வாசகரைச் சந்தித்தேன்.  பொறியியல் கல்லூரி மாணவர். ஏரோநாட்டிகல் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். சொந்த ஊர் செஞ்சி. நவீன தமிழ் இலக்கியம் வாசிக்கத் துவங்கியிருக்கிறார். தமிழ்ச் சூழலில் இலக்கிய வாசிப்பு நிகழ்வது என்பது அரிதினும் அரிதான ஒன்று. ஒரு வாசகன் பல்வேறு தடைகளைத் தாண்டியே வாசிக்க வர முடியும். வாசிப்பு என்பதை பொழுதுபோக்கு என்பதாகவே சராசரி தமிழ் மனம் புரிந்து கொண்டுள்ளது. எனவே வாசிக்கத் துவங்கும் வாசகன் வாசிப்பு குறித்து எதிர்மறை அபிப்ராயங்களையே எதிர்கொள்வான். அதையும் தாண்டி அவன் வாசிக்க வேண்டும். எந்த விஷயம் குறித்தும் சுயமாக சிந்தித்து அபிப்ராயங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அச்சு எந்திரத் தொழில்நுட்பம் காரணமாக ஒரு புத்தகம் குறைந்த பட்சம் 1000 பிரதிகள் அச்சடிக்கப்படுமானால் அது ஆக்கச் செலவுக்கு கட்டுபடி ஆகும் என்ற நிலை இருந்ததால் எந்த புத்தகமும் 1000 பிரதிகள் அச்சடிக்கப்படுவது என்பது வழக்கமாக இருந்தது. 120 ஆண்டுகளுக்குப் பின்னால் இப்போது பிரிண்ட் ஆன் டிமாண்ட் தொழில்நுட்பம் வந்த பின் புத்தக வெளியீட்டாளர்கள் ஐம்பது புத்தகம் எழுபத்து ஐந்து புத்தகம் என அச்சடிக்கின்றனர். இதுவே யதார்த்த நிலை. இவ்வாறான சூழ்நிலையைக் கடந்து ஒருவன் வருகிறான் என்பது பெரிய விஷயம். 

அந்த இளைஞர் என்னிடம் வாசிப்பு குறித்தும் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்தும் கேட்டார். ‘’தம்பி ! முதல் விஷயம் உங்களால வாசிக்க முடியுது. தமிழ்நாட்ல எழுத்தறிவு உள்ளவங்க 5 கோடி பேர் இருக்காங்க. அதுல இலக்கியம் வாசிக்கறவங்க 1000 பேருக்கு கீழ தான் இருப்பாங்க. அப்படின்னா இலக்கியம் வாசிக்கற ஒவ்வொருத்தரும் ஐயாயிரத்துல ஒருத்தர். உங்களுக்கு என்ன விஷய்ம் ஆர்வமா இருக்கோ அந்த விஷயம் பத்தி அடிப்படையா உள்ள புத்தகங்களைப் படிங்க. அதுவே சிந்திக்கறதுக்கு ஒரு நல்ல அடித்தளத்த உருவாக்கித் தரும். தினமும் ஒரு மணி நேரமாவது வாசிங்க. நான் சொல்றத நோட் பண்ணிக்கங்க. உங்களுக்கு தமிழோட தி பெஸ்ட் நாவல்களை சொல்றன்’’. இளைஞர் தனது அலைபேசி நோட் பேடில் குறித்துக் கொண்டார். 

‘’தம்பி ! உங்க சொந்த ஊர் செஞ்சி தானே ? உங்க ஊருக்குப் பக்கத்தில் கீழ்வாலைன்னு ஒரு ஊர் இருக்கு. அங்க போயிருக்கீங்களா?’’ இளைஞர் அந்த ஊரின் பெயரைக் கேள்விப்பட்டிருக்கவில்லை. 

’’அந்த ஊர்ல ஆதி மனிதர்கள் வரைஞ்சிருக்க குகை ஓவியங்கள் இருக்கு தம்பி. அதாவது அப்ப மனுஷங்க பேசவே ஆரம்பிக்கல. உலகத்துல எங்கயுமே மொழின்னு ஒன்னு உருவாகலை. ஆனா அவங்க ஓவியம் வரைஞ்சிருக்காங்க. ஆர்ட்டிஸ்டிக் இம்பள்ஸ் மனுஷனோட சுபாவத்துலயே இருக்குங்கறதுக்கு அது ஒரு உதாரணம். நீங்க ஒரு இலக்கிய வாசகர். அவசியம் அந்த இடத்தைப் போய் பாக்கணும்’’ அந்த இளைஞர் அதனையும் குறித்துக் கொண்டார். 

’’மத்தியப் பிரதேசத்துல பிம்பேத்கா-ன்னு ஒரு இடம் இருக்கு. அங்க எக்கச்சக்கமான குகை ஓவியங்கள் வரையப்பட்டிருக்கு. நார்த் இண்டியா போனா அந்த இடத்தை மிஸ் பண்ணாம பாருங்க’’ இளைஞர் கூகுள் தேடல் எந்திரத்தில் பிம்பேத்கா எனத் தேடி அதன் ஒளிப்படங்களை என்னிடம் காண்பித்தார். 

’’உங்க ஊருக்குப் பக்கத்துல தான் திருக்கோவிலூர் இருக்கு. திரிவிக்ரமப் பெருமாள் கோயில். உலகளந்த பெருமாள். அங்க போயிருக்கீங்களா?’’ இளைஞர் இல்லை என்றார். ‘’அவசியம் போய்ட்டு வாங்க’’

உணவு இடைவேளை முடிந்து இன்னும் சில நிமிடங்களில் மதிய அமர்வு தொடங்க இருந்த நிலையில் தான் எங்கள் உரையாடல் நடைபெற்றது. இந்த உரையாடல் முடிந்து சில வினாடிகளில் அடுத்த அமர்வு துவங்கி விட்டது. நானும் அந்த இளைஞரும் பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தோம். 

அமர்வில் பேசிய எழுத்தாளர் , ‘’தமிழ்நாட்டில் நீங்கள் ஒரு எழுத்தாளனைச் சந்தித்தால் அவன் உங்கள் ஊருக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய இடங்களைப் பற்றியும் அவற்றின் வரலாற்று பண்பாட்டு முக்கியத்துவம் குறித்தும் உங்கள் பிராந்தியத்தில் வசித்த வசிக்கும் படைப்பாளிகளைக் குறித்தும் தான் பேசுவான்.தமிழ் எழுத்தாளன் பண்பாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய  பணியை மேற்கொண்டவாறு இருக்கிறான்’’ என்றார். 

இளைஞர் பக்கத்தில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்தார். நான் புன்னகைத்தேன்.