Saturday 26 February 2022

வண்ணங்கள்

எனக்கு நெருக்கமான நண்பர் ஒருவர். இலக்கிய வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவர். ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார். இருப்பினும் இன்னும் தீவிரமான வாசிப்பு தேவை என்ற எண்ணம் அவர் மனதில் மேலோங்கியிருக்கிறது. எனவே எழுதத் தொடங்காமல் இருக்கிறார். ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் அவரும் நானும் இது குறித்து உரையாடினோம். மதிய அமர்வுகள் நிறைவு பெற்று இரண்டு மணி நேர இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மாலை அமர்வுகள் தொடங்கும் என்ற நிலையில் சிறு நடை உலாவல் ஒன்றை மேற்கொள்ள நேரம் கிடைத்தது. நாங்கள் உரையாடியவாறு உலவத் துவங்கினோம். 

நான் சொன்னேன். ‘’நண்பரே ! வாசிப்பு என்பது முக்கியமானது. மிகவும் முக்கியமானது. ஓர் இலக்கிய வாசகனாகத் தன்னை உணர்பவனோ அறிவுஜீவியாக தன்னை உணர்பவனோ நிச்சயம் வாசிக்க வேண்டும். வாசிப்புக்கு தனது ஒரு நாளில் குறிப்பிடத் தகுந்த அளவு நேரத்தை அளிக்க வேண்டும். இவை மறுக்க முடியாத உண்மைகள். ஆனால் படைப்புச் செயல்பாடு என்பது சூட்சுமமான ஒன்று. மிகவும் சூட்சுமமான ஒன்று. அக்கினிக் குஞ்சு என்கிறான் பாரதி. ‘’அதை ஆங்கோர் காட்டில் பொந்திடை’’ வைக்க வேண்டியது எழுத வேண்டும் என்று விரும்புபவனின் கடமை. எழுத விரும்புபவன் அதனைச் செய்த பின் அக்கினிக் குஞ்சு ‘’காட்டை’’ வெந்து தணிக்கும். வாசிப்பும் கற்பனையும் பின்னிப் பிணைந்து இருப்பவை. சொல்லப் போனால் ஒரே விஷயத்தின் இரண்டு வெளிப்பாடுகளே அவை. போதிய அளவு வாசிக்கவில்லை என்பதற்காக எழுதாமல் இருக்கக் கூடாது. எழுத வேண்டும். எழுத்தில் மேலும் முழுமை கூடி வர வேண்டும் என எழுதுபவன் நினைத்தால் அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய வேண்டும். முழுமை கூட வாசிப்பை அதிகரிக்க வேண்டும் என்று நினைத்தால் அதிக நேரம் கொடுத்து வாசிக்கலாம். ஆனால் போதுமான வாசிப்பு இல்லை என்ற காரணத்துக்காக எழுதும் ஆர்வத்தை தடுத்து நிறுத்தி ஒத்திப் போடக்கூடாது. எழுதும் ஆர்வம் என்பது ஆர்ட்டிஸ்டிக் இம்பல்ஸ். கலையின் அடிப்படை இது. அதனைத் தடுத்து நிறுத்தி இல்லாமல் செய்தால் மீண்டும் அகத்தில் அது நிகழாமல் போகக் கூட வாய்ப்பு உண்டு. நான் வாசிப்பை முக்கியமானது என்று தான் சொல்கிறேன். ஆனால் அதைக் காரணம் காட்டி எழுதத் துவங்காமல் இருப்பதைத் தான் விமர்சிக்கிறேன்’’ என்று சொன்னேன். 

நான் சாதாரணமாக இருப்பேன். சட்டென ஒரு விஷயத்துக்குள் உள்நுழைந்து பேசத் தொடங்கினால் என்னை நிறுத்துவது கடினம். ஒரு சுற்று பேசி முடிந்ததும் உருவாகும் சிறு மௌனத்தில் மேலும் தூண்டல் பெற்று நான்மடங்கு விசையுடன் என் தரப்பை முன்வைக்கத் துவங்கி விடுவேன். நாங்கள் ஒரு நாற்சந்தியின் ஒரு பக்கத்தில் நின்றோம். இளம் பெண்கள் சிலர் சாலையை சர சர என்று கடந்தனர். 

நான் துவங்கினேன். ‘’ இப்ப பாத்தீங்கன்னா இந்த ரோடு இருக்கு. எத்தனை பேர் போராங்க வர்ராங்க. நாம பாத்துக்கிட்டே தான் வரோம். நடுத்தர வயசு உள்ள ஆண்களைப் பாருங்க. அவங்க முகத்தில ஒரு சலிப்பு. பல காரணம் இருக்கும். ஆர்வம் இல்லாத விஷயத்தைச் செய்யறது. எதிர்பார்ப்பு அதிகமாவும் கிடைக்கறது கொறச்சலாவும் இருக்கறது. குடும்பக் கவலை. லௌகிகக் கவலை இப்படி இன்னும் எவ்வளவோ. அவங்க உடுத்தியிருக்கற டிரெஸ்ஸைக் கவனிங்க. நூத்துக்கு தொன்னூத்து அஞ்சு பேரு மங்கலா வெளிறி இருக்கற கலர்ல தான் சட்டை போட்டிருப்பாங்க. ஆனா யங் கேர்ள்ஸ் பாருங்க. பிரைட்டான கலர்ல டிரெஸ் பண்ணியிருக்காங்க. அந்த கலர்ஃபுல் நெஸ்ஸூம் பிரைட் நெஸ்ஸும் அவங்க மனசுல இருக்கற நம்பிக்கையோட வெளிப்பாடு. அவங்க அகம் வண்ண மயமா இருக்கு. அவங்களுக்கு வயசான பிற்பாடு அவங்க அந்த வண்ணங்கள் இருந்து விலகி வெளிர்ந்து போன மனநிலைக்குப் போகலாம். ஆனா அவங்க துவக்கம் வண்ண மயமாத்தான் இருக்கு. சிலர் அந்த சென்ஸை வாழ்க்கை முழுக்கவும் கூட மெயிண்டய்ன் பண்றாங்க. கிரியேட்டிவிட்டியும் அந்த மாதிரி ஒரு விஷயம் தான்’’ என்றேன். 

நண்பர் அமைதியாக இருந்தார். 

நாங்கள் நிகழ்ச்சியில் அமர்ந்தோம். அந்த அமர்வில் ஒரு படைப்பாளி பேசினார். நான் சொன்ன உதாரணத்தையே அவரும் சொல்லி படைப்பாற்றல் குறித்து விளக்கினார். 

நண்பர் என்னைப் பார்த்தார். நான் புன்னகைத்தேன்.