அவை மலர்கள்
ஆறுபாதி மலர்கள்
ஆறுபாதி ஏரி மலர்கள்
என்றும் சொல்லப்படுகின்றன
எப்படி சொல்லப்பட்டாலும்
அவை ஒன்றே
சோளக் கதிர்கள் பூக்கும் வயல்
மழைக்காலத்தில்
ஏரியாகிறது
கதிர் பூத்த வயலில்
மலர்கின்றன
ஆயிரம் அல்லி மலர்கள்
ஆயிரம் அல்லி மலர்களை
ஒன்றாய்ப் பார்ப்பது
உயிரினை
உடலுக்கு அப்பாலும் துடிக்கச் செய்கிறது
ஆயிரம் மலர்களின் முன்
கை கூப்புவதற்கோ
கண்ணீர் சிந்துவதற்கோ
மண்டியிடுவதற்கோ
அடி பணிவதற்கோ
ஒரு காரணம்
ஒரு தருணம்
ஒரு உணர்வு
மிச்சம் இருக்கிறது
கவிதை எழுதுவதற்கும்
குறிப்பு : ஆறுபாதி என்ற ஊர் மயிலாடுதுறை செம்பொன்னார் கோவில் சாலையில் அமைந்துள்ளது. அந்த சாலைக்கு வடக்கே நீளமான விவசாய நிலம் ஒன்று உள்ளது. அது கோடைக்காலத்தில் விவசாய நிலமாகப் பயன்படும். மழைக்காலத்தில் ஏரியாக மாறும். மழைக்காலத்தில் நீர் முழுதும் நிறையும் போது நீர்மலர்கள் மண்ணிலிருந்து எழுந்து நீரின் மேற்பரப்பில் பூக்கும். சாலையில் செல்லும் எவரும் அந்த மலர்களைக் காண முடியும்.