Friday, 4 February 2022

திருக்கோவிலூர்


திருவஹீந்திரபுரம் திவ்யதேசத்தை சேவித்த பின்னர் திருக்கோவிலூர் சென்று சேவிக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தேன். நடுநாட்டுத் தலங்கள் தான் எண்ணிக்கையில் மிகக் குறைவு. இரண்டு.  அவற்றை மட்டுமாவது முழுமையாக சேவிக்கலாமே என்ற எண்ணம்.  நம் அன்றாடச் சூழ்நிலை என்பது மாறாத் தன்மை கொண்டது. அது குறித்த பிரக்ஞை இருக்கும் என்றால் மட்டுமே அதிலிருந்து மீறி புதிய இடங்களுக்குச் செல்ல முடியும். புதிய செயல்களைச் செய்து பார்க்க முடியும். 

திருக்கோவிலூர் வைணவ வரலாற்றில் மிக முக்கியமான இடம். 

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என மூவரும் பெருமாளை தத்தம் வழியில் உணர்ந்த விதத்துடன் தொடர்புடையது. அதாவது, திருக்கோவிலூர் மலையில் ஏறிக் கொண்டிருக்கும் போது பொய்கையாழ்வார் மழையை எதிர்கொள்கிறார். சிறிது நேரம் மழை விடட்டும் என திருக்கோவிலூர் குன்றில் உள்ள சிறு குகை ஒன்றில் மழைக்கு ஒதுங்கி உடலை சாய்த்து ஓய்வெடுக்கிறார். மழை வலுத்துப் பெய்கிறது. அப்போது பூதத்தாழ்வார் அங்கே வந்து சேர்கிறார். ஒருவர் சயனிக்கும் இடத்தில் இருவரால் அமர முடியும் என அச்சிறுகுகையில் அவருக்கு இடம் தருகிறார். சிறிது நேரம் கழித்து பேயாழ்வார் அங்கே வந்து விடுகிறார். முதல் இருவரும் இருவர் அமரும் இடத்தில் மூவர் நிற்க முடியும் என அவருக்கும் இடம் தருகின்றனர். 

அப்போது பொய்கையாழ்வார், 

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று

என்ற பாசுரத்தைப் பாடுகிறார். 

அதன் பின்னர் பூதத்தாழ்வார்,

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்

என்ற பாசுரத்தைப் பாடுகிறார். 

பேயாழ்வார் இந்த இரண்டு பாசுரங்களைக் கேட்ட பின்னர், 

திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன்; புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று

என்ற பாசுரத்தைப் பாடுகிறார். 

வைணவ தத்துவத்துவின் அடிப்படையான தரிசனத்தைக் கூறும் இந்த மூன்று பாசுரங்களும் பிறந்த இடம் திருக்கோவிலூர். அந்த சிறுகுகையில் மூவரும் இந்த ஒவ்வொரு பாசுரங்களாக ஒவ்வொருவர் பாடிய பின்னர் நான்காவதாக ஒருவர் அங்கே வந்து சேர்ந்திருப்பதை உணர்கிறார்கள். அவர் பெருமாள் என்பது அவர்கள் உணர்வுக்குத் தெரிகிறது. 

மாத்வ வழிமுறையின் முக்கியமான ஆச்சார்யரான ரகுராய தீர்த்தர் ஜீவசமாதி அடைந்துள்ள இடமும் திருக்கோவிலூர். தென்பெண்ணை நதிக்கரையில் ரகுராய தீர்த்தரின் அதிஷ்டானம் அமைந்துள்ளது. இந்த வழிமுறையில் வந்தவரே பகவான் ஸ்ரீராகவேந்திரர். 

திருக்கோவிலூரில் ரகோத்தமன் என்ற பெயர் பலருக்கு இருக்கும். ஒருவரின் பெயர் ரகோத்தமன் எனில் அவர் திருக்கோவிலூர் அதனைச் சூழ்ந்துள்ள பகுதியைச் சேர்ந்தவர் என அறிந்து கொள்ளலாம். 

நானும் எனது நண்பர் ஒருவரும் மயிலாடுதுறையிலிருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ்ஸில் மதியம் ஏறி விழுப்புரம் சென்றடைந்தோம். அங்கிருந்து ஒரு பேருந்து மூலம் திருக்கோவிலூர் சென்றோம். திருக்கோவிலூர் ஆலயத்தை ஒட்டிய பாரம்பர்யத்துடனும் வாழ்முறையுடனும் இருப்பதை உணர்ந்தோம். அமைதியான ஊர். அழகான சன்னிதித் தெரு. சில ஊர்களைப் பார்த்தால் வாழ்க்கையின் மீதிக் காலத்தை அங்கேயே கழித்து விடலாம் எனத் தோன்றும் . அவ்வாறான ஒரு ஊர் இது. கடலூர் அருகில் திருச்சோபுரம் என ஒரு ஊர் உள்ளது. அந்த ஊரிலும் அவ்வாறான ஒரு உணர்வை அடைந்திருக்கிறேன். வாழ்க்கைக்கு அழகுணர்வு என்பது தேவை. ஒரு சமூகத்தின் அழகுணர்வு ஊரின் அமைப்பில் வெளிப்படும். சற்று முயன்றால் , நம்மால் எல்லா ஊர்களையும் அழகாக்க முடியும். நவீன வாழ்க்கை , தனிமனிதனுக்கு பல்வேறு உரிமைகளை உத்திரவாதங்களை உருவாக்கித் தந்துள்ளது. ஆனால் அதிலிருந்து எழுந்து வர வேண்டிய மேம்பட்ட அழகியல் நம் சமூகத்துக்கு வந்து சேரவில்லை. 

உலகளந்த பெருமாளை சேவித்து விட்டு ரகுராய தீர்த்தரின் ஜீவசமாதி முன் அமர்ந்திருந்து விட்டு இரவு 10 மணிக்கு மேல் கிளம்பி விழுப்புரம் வந்து அங்கிருந்து புதுச்சேரி வந்து மறுநாள் அதிகாலை ஊர் வந்து சேர்ந்தோம். அன்றைய திருக்கோவிலூர் விழுப்புரம் பயணம் மறக்க முடியாதது. நாங்கள் சென்றது ஒரு கோடைக்காலம் என ஞாபகம். தென்றல் பேருந்தின் சாளரம் வழியே வீசிக் கொண்டிருந்தது. சிறு சிறு ஊர்கள். இனிமையான ஒரு பொழுது. 

அன்பில் சென்று வந்தது திருக்கோவிலூர் நினைவுகளை மீட்டுக் கொள்ள ஒரு வாய்ப்பு தந்தது.