Monday, 28 February 2022

பெயர்க்காரணம் (நகைச்சுவைக் கட்டுரை)

நம்முடைய அமைப்புக்கு ‘’காவிரி போற்றுதும்’’ என்று பெயர். நம் அமைப்பின் அமைப்பாளர் அதனை நுண் அமைப்பு என்கிறார். அமைப்பு எந்த அளவு ’’நுண்’’ ஆக இருக்கிறதோ அந்த அளவுக்கு தனக்கு பொறுப்புகள் குறைவு என்பதால் அவர் அவ்வாறு எண்ணுகிறார். நுண் அமைப்பு என்பதால் அமைப்பாளர் என்ற ஒரே ஒரு பொறுப்பு மட்டுமே உள்ளது. அமைப்பாளர் ஒரு கட்டிடப் பொறியாளர் என்பதால் ஒரு கட்டிடப் பணியை ஒருங்கிணைக்க ஒருவர் போதும் என்ற நம்பிக்கை அவருக்கு ஆழமாக உள்ளது. அந்த நம்பிக்கையை அவர் அமைப்பிலும் அதாவது நுண் அமைப்பிலும் செயல் படுத்தி விட்டார்.

மக்களைச் சந்திக்கும் போது அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள இந்த வாக்கியங்களையே அவர் எல்லாரிடமும் கூறுவார். ‘’வணக்கங்க. என்னோட பேர் பிரபு. என்னோட தொழில் பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷன். நாங்க, ஃபிரண்ட்ஸ் சில பேர் சேர்ந்து ‘’காவிரி போற்றுதும்’’னு ஒரு அமைப்பு வச்சிருக்கோம். கிராமங்கள்ளோட வளர்ச்சிக்காக எங்களால முடிஞ்சத செய்ய நினைக்கிறோம்’’. இந்த டயலாக்கை நூற்றுக்கணக்கான மக்களிடம் கூறி கூறி அமைப்பாளர் வீட்டில் இருக்கும் போது வாசலில் யாராவது அட்ரஸ் கேட்டு வந்தால் கூட அவரிடமும் இதைக் கூறிவிடுவோமோ என்ற பதட்டம் அமைப்பாளருக்கு உண்டு.

‘’உங்க அமைப்போட பேர் என்ன சொன்னீங்க?’’

‘’காவிரி போற்றுதும்’’

‘’அப்படீன்னா?’’

அமைப்பாளர் உரையாடலுக்கான ஒரு வாய்ப்பு உருவாகி விட்டது என பெரிதும் மகிழ்வார். அந்த மகிழ்ச்சியுடன், ‘’அதாவது’’ என்ற ஆரம்பிப்பார். சாங்கிய யோக மரபின் நூல்கள் ‘’அதாவதஸ்ய’’ எனத் தொடங்கும். நாம் சிந்திக்கும் இந்த விஷயம் கடந்த காலத்திலும் சிந்திக்கப்பட்டது ; நிகழ்காலத்திலும் சிந்திக்கப்படுகிறது. எதிர்காலத்திலும் சிந்திக்கப்படும். எனவே நாம் சிந்திக்கும் விஷயம் என்றுமுளது என்ற உணர்வை நினைவுபடுத்தும் விதமாக சாங்கிய நூல்கள் ‘’அதாவதஸ்ய’’ என்று துவங்கும். அமைப்பாளருக்கு அந்த துவக்கம் பிடித்திருக்கிறது என்பதால் அவரது உரையாடல்களை ‘’அதாவது’’ என்று ஆரம்பிப்பார்.

’’அதாவது, சிலப்பதிகாரம் ‘’திங்களைப் போற்றுதும்’’னு ஆரம்பிக்குது. எந்த படைப்புக்குமே முதல் வார்த்தைங்கறது ரொம்ப முக்கியம். அதுக்குல்ல படைப்போட ஒட்டு மொத்த சாரமும் இருக்கு. அடியார்கள் பெருமையை பாட சேக்கிழார் தில்லையம்பலத்துல கூட்டப்பட்ட மக்கள் சபை முன்ன நின்னப்ப அவருக்கு சட்டென இவ்வளவு பெரிய விஷயத்தை நாம எப்படி செய்றதுன்னு திகைச்சிடுச்சு. அப்ப கடவுளே ‘’உலகெலாம்’’னு முதல் அடி எடுத்துக் கொடுத்தாரு. அந்த மாதிரி இளங்கோ அடிகள் ‘’திங்களைப் போற்றுதும்’’னு ஆரம்பிக்கறாரு. நம்ம அமைப்பு அதிலிருந்து ரெண்டாவது வார்த்தையான ‘’போற்றுதும்’’ங்கறத எடுத்துகிச்சு. காவிரியை சேத்து ‘’காவிரி போற்றுதும்’’னு நாம ஆகிட்டோம்’’

கேள்வி கேட்டவர் ‘’அப்படீன்னா’’ன்னு கேட்ட ஒரு வார்த்தைக்கு இவ்வளவு பெரிய விளக்கமா என திகைத்து விடுவார். அந்த திகைப்பின் விளைவாக ‘’நான் உங்களுக்கு என்ன செய்யணும்?’’ என்று கேட்டு விடுவார்.

‘’அதாவது அண்ணன் நீங்க இப்ப கிராமத்துல இருக்கீங்க. உங்க வீட்டுத் தோட்டத்துல நீங்க நெல்லி , கொய்யா, பலா, நாவல் னு பழமரக் கன்னு நடலாம்னு மனசுல நினைச்சிருப்பீங்க. நர்சரி டவுன்ல இருக்கும். பல வேலைல உங்களுக்கு அது ஞாபகத்துல வராமலே மறந்து போயிருப்பீங்க. உங்களுக்கு என்ன மரக்கன்னு வேணுமோ சொல்லுங்க. அது அத்தனையும் நாங்க தரோம். நீங்க வீட்டுத் தோட்டத்துல நட்டு வளத்துக்கங்க’’

‘’கன்னுக்கு நாங்க பணம் கொடுக்கணுமா?’’

‘’இல்லை வேண்டாம் அண்ணன். நாங்க ஃபிரண்ட்ஸ் டவுன்ல இருக்கோம். 2400 சதுர அடி மனையில வீடு கட்டிக்கிட்டு அதுல குடி இருக்கோம். எங்க தோட்டத்துல கொஞ்ச இடம் தான் இருக்கு. அதுல நிறைய மரம் வளர்க்க முடியாது. உங்களைப் போல இருக்கற விவசாயிகளுக்கு மரக்கன்னு கொடுத்தா நீங்க பொறுப்பா வளத்திடுவீங்க. எங்க விருப்பமும் நிறைவேறும். உங்களுக்கும் பலன் இருக்கும். சமுதாயத்துக்கும் பலன் இருக்கும்.’’

கேள்வி கேட்டவர் , ‘’சார் ! உங்க பேர் என்ன சொன்னீங்க?’’ என்பார்.

‘’We have come around a full circle’’ என்பது போல அமைப்பாளர் தன் பெயரைக் கூறி தன்னுடைய விசிட்டிங் கார்டைக் கொடுப்பார். எனினும் அமைப்பு பணி செய்யும் கிராமங்களில் அமைப்பாளர் குறித்து அந்த ஊரின் மக்கள், ‘’வனத்துறை, விவசாயத் துறை, தோட்டக்கலைத் துறை, ஊராட்சித் துறை, வருவாய்த் துறை’’ ஊழியர் என்றே அமைப்பாளரை எண்ணுவார்கள். அமைப்பாளர் செயல் புரியும் கிராமத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் வடக்கே ஒரு கிராமம். இந்த கிராமத்தைக் கடந்தே செயல் புரியும் கிராமத்துக்கு செல்ல வேண்டும். அந்த கிராமத்தில் டூ வீலருக்கு காற்று பிடிக்க ஒரு நாள் ஒரு கடையில் வண்டியை நிறுத்தினார் அமைப்பாளர். அந்த டூ வீலர் கடைக்காரர் அமைப்பாளரிடம் கேட்டார். ‘’சார் ! நீங்க பல மாசமா காலைலயும் சாயந்திரமும் இந்த பக்கம் போறீங்க வரீங்க. நீங்க கொங்கு நாட்டுக்காரரா? ஃபைனான்ஸ் செய்யறீங்களா?’’