Tuesday 22 February 2022

மறுபாதி

தஞ்சை ஜில்லாவில் பிறந்து வளர்ந்தவன் நான். சென்னை எனக்கு வினோதமான ஒரு பிராந்தியமே. 2000ம் ஆண்டு வரை கூட சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு இருந்தது. தஞ்சை ஜில்லாகாரர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடாக இருக்கும் ஊரில் எப்படி இத்தனை மக்கள் அதனை இயல்பாக எடுத்துக் கொண்டு வசிக்கிறார்கள் என்பது தீராத ஆச்சர்யம். அத்துடன் ஆறு மணி நேரப் பயண நேரத்தில் சென்னை இருப்பதால் சட்டென போய் விட்டு சட்டென வந்து விடலாம். ஊருக்கு வெளியில் இராத் தங்குவது இல்லை என்பதை இப்போதும் பலர் எங்கள் பகுதியில் அறிவிக்காமல் கடைப்பிடிக்கிறார்கள்.  வீர நாராயண ஏரியின் தண்ணீர் வந்தடைந்து சென்னையின் தண்ணீர்ப் பஞ்சம் ஓரளவு தீர்ந்த போது கூட எங்களால் தான் சென்னை தண்ணீர் குடிக்கிறது என்று நாங்கள் நினைத்துக் கொண்டோமே தவிர அதன் பிறகும் அங்கு செல்வதோ தங்குவதோ மாற்றம் இல்லாமலேயே இருந்தது. 

எனினும் சென்னையைக் காண்பது என்பது மிகவும் பிடித்தமானது. அத்தனை ஆயிரம் மக்களை ஒரே இடத்தில் காண்பது என்பது எத்தனை முறை நிகழ்ந்தாலும் அது அரிய அனுபவமே. மக்களின் முகங்களைக் கண்டவாறே இருப்பேன். ஆயிரம் ஆயிரம் முகங்கள். அவை கூறும் ஆயிரம் ஆயிரம் கதைகள். ஒரு மாநகரத்தின் சிறப்பு என்பதே அது வெவ்வேறு வாழ்க்கைமுறையும் எண்ணங்களும் கொண்ட மக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதே. 

அதிகாலையிலேயே தலைகுளித்து இன்னும் ஈரம் காயாத கூந்தலை காற்றில் உலர விட்டவாறு மின்சார ரயிலில் முல்லை அரும்பு வாங்கி ரயிலிலேயே தொடுத்து இறங்க வேண்டிய இடம் வந்து சேர்வதற்குள் அதனைக் கட்டி அதன் பின் தலை துவட்டி மலர் சூடி அலுவலகம் செல்லும் பெண், சூரியக் கதிர் முப்பட்டகக் கண்ணாடி வழியே செல்லும் போது பொங்கிப் பிரவாகிக்கும் வன்ணங்களில் புத்தம் புது ஆடைகள் அணிந்து முதுகில் சிறிதும் இல்லாத பெரிதும் இல்லாத தோள்பையைச் சுமக்கும் இளம் கல்லூரி மாணவிகள்,  பள்ளிச் சீருடையின் மடிப்பு கலையாத சிறுவர்கள், விபூதி வாசனையுடன் பயணிக்கும் மூத்த குடிமக்கள் என சென்னை எனக்கு வெவ்வேறு காட்சிகளின் திரைப்படம் என்று தோன்றும். 

சென்னையில் எனக்கு அசௌகர்யமான அனுபவங்களோ அல்லது நினைவுகளோ இல்லை. நான் பயணித்த ஆட்டோக்களின் ஆட்டோ டிரைவர்கள் என்னிடம் பிரியமாகவே நடந்து கொண்டனர். நான் சென்ற மாநகரப் பேருந்துகளின் நடத்துனர்கள் என்னை மிகச் சரியாகவே நான் இறங்க வேண்டிய நிறுத்தங்களில் இறக்கி விட்டிருக்கிறார்கள். எனக்கு சென்னையின் எல்லா பகுதிகளும் ஒன்று என்றே தோன்றும். ஆட்டோ டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் புண்ணியத்தில் தான் சென்னைக்குள் அவ்வப்போதாவது உலவுகிறேன். 

ஒருமுறை ஒரு சம்பவம் நடந்தது. 

எழும்பூரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். பேருந்தில் கொள்ளைக் கூட்டம். பயணச்சீட்டு எடுப்பதே பெரும்பாடு ஆகி விட்டது. பேருந்தின் முன் பக்கத்திலிருந்து பலர் பயணச்சீட்டுக்கான தொகையை அனுப்பிக் கொண்டிருந்தனர். நானே பலருக்கு பயணச்சீட்டு எடுப்பதில் உதவினேன். ஒரு வழியாக கோயம்பேடு வந்து சேர்ந்தோம். பேருந்து நின்றது. 

மூன்று டிக்கெட் பரிசோதகர்கள் பேருந்திலிருந்து இறங்கும் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்தனர். பயணிகளின் டிக்கெட்களை வாங்கி அவர்கள் மொத்த எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக வைத்துக் கொண்டனர்.  நான் என்னுடைய டிக்கெட்டைக் கொடுத்தேன். பரிசோதகர் என்னிடம் ‘’ சார் ! இந்த டிக்கெட் கிழிந்திருக்கிறது. அதன் இன்னொரு பாதியைக் கொடுங்கள்’’ என்றார். நடத்துனர் அருகில் இருந்தார். அவருக்கு சங்கடம். பேருந்தில் எவ்வளவு கூட்டம் இருந்தது என்பதும் எத்தனை பேர் கைகளின் வழியே பயணித்து டிக்கெட் பயணிகளைச் சேர்ந்தது என்பதும் அவருக்குத் தெரியும். ‘’இன்னொரு பாதியில் தான் டிக்கெட் நம்பர் இருக்கும். அது எங்களுக்கு வேண்டும்’’ என்றார் பரிசோதகர். 

எனது பாக்கெட்டில் நான்கு ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதனை வெளியில் எடுத்து பாக்கெட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பது அந்த சூழ்நிலையில் உசிதமானது அல்ல என்று நான் எண்ணினேன். எனினும் வேறு வழியில்லை. பாக்கெட்டுக்குள் இருந்த அனைத்தையும் வெளியில் எடுத்து ஒருமுறை சோதித்தேன். நான் தேடியது கிடைக்கவில்லை. மீண்டும் ஒருமுறை தேடிய போதும் அகப்படவில்லை. மூன்றாவது முறை என ஒவ்வொன்றாகத் தனியே பிரித்து தேடிய போது பயணச்சீட்டின் மறுபாதி தட்டுப்பட்டது. அதில் அந்த டிக்கெட்டின் நம்பர் இருந்தது. அது ஒரு ஆறிலக்க எண். அந்த எண் இப்போதும் என் நினைவில் இருக்கிறது.