Wednesday 16 March 2022

பணி செய்து கிடத்தல் ( நகைச்சுவைக் கட்டுரை)

’’காவிரி போற்றுதும்’’ அமைப்பாளர் காலையில் எழுந்ததும் அவர் அன்று செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்று யோசிக்கிறார். அவர் செய்ய வேண்டிய பணிகளைக் காட்டிலும் மிச்சம் வைத்திருக்கும் பணிகள் அதிகம் இருப்பது அவருக்குத் திகைப்பைத் தருகிறது.  

இன்று காலை ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு சலூனுக்கு ஏழு நூல்கள் கொண்ட தொகுப்பை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அமைப்பாளருக்கு சலூன்காரரின் முகம் நினைவில்லை. அங்கே சென்றால் ஞாபகம் வரக்கூடும்! பத்து நாளாக சலூன்காரர் அமைப்பாளரிடம் கூடுதலாக ஒரு செட் புத்தகம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அமைப்பாளர், ‘’அண்ணன் ! பலவிதமான வேலைல இருக்கன் அண்ணன். கோச்சுக்காதீங்க. ஒரு தடவைக்கு ரெண்டு தடவை ஞாபகப்படுத்துங்க’’ என்று சொல்லியிருந்தார். சலூன்காரர் பதினைந்து நாளில் மூன்று தடவை ஞாபகப்படுத்தி விட்டார். அமைப்பாளர் கையில் உபரியாக சில செட் புத்தகங்கள் உள்ளன. ஆனால் அவருடைய பிரச்சனை அதில்லை. சலூன்காரர் , ‘’சார் ! நீல கலர் பேக் டிராப்ல சுவாமி விவேகானந்தர் ஃபோட்டோ கொடுத்தீங்கல்ல. அத ஒரு கஸ்டமர் எனக்கு வேணும்னு கேட்டார். கொடுத்திட்டன். இப்ப எனக்கு ஒன்னு வேணும் சார்’’ என்றார். அமைப்பாளருக்கு மக்கள் சுவாமிஜி மேல் அவ்வளவு பிரியமாக இருப்பது சந்தோஷம் தான் என்றாலும் இப்போது அவர் கையிருப்பில் ஃபோட்டோ இல்லை. வேலை முழுதாக முடியாது. பெண்டிங் இருக்கும். என்ன செய்வது என்று யோசித்து எந்த முடிவும் எடுக்காமல் பத்து நாளாக இருந்து விட்டார். அடுத்த ஃபோன் கால் வருவதற்குள் சலூன் கடைக்காரரை சந்திப்பது தான் உசிதம் என இன்று காலை புத்தகங்களை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். சலூன்காரருக்கு அமைப்பாளரைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷம். சலூன்காரர் ‘’சார் ! ஃபோட்டோ கேட்டிருந்தனே ‘’ என்றார். நாளைக்கு மெட்ராஸ் போறன். அப்ப அவசியம் வாங்கிட்டு வரேன். என்று அமைப்பாளர் வாக்குறுதி தந்து விட்டார். 

சலூனில் ஷேவ் செய்து கொள்ள அமர்ந்திருந்தார் அமைப்பாளர். அப்போது ‘’ஹைனஸ்’’ என்ற இரு சக்கர வாகனத்துக்கு நாளிதழில் விளம்பரம் வந்திருந்தது. ஹோண்டா நிறுவனத்தின் வாகனம். அமைப்பாளர் ஹீரோ ஹோண்டா ஆதரவாளர். ஆனால் இப்போது அந்த கூட்டு நிறுவனம் ஹீரோ என்றும் ஹோண்டா என்றும் தனித்தனியாகி விட்டது. அமைப்பாளர் எலெக்ட்ரிக் வாகனத்துக்கு மாறிவிடலாமா என்று யோசிக்கிறார். ‘’பைமோ’’ என்று ஒரு வாகனம். அமைப்பாளருக்கு அந்த பெயர் பிடித்திருப்பதால் அதனை வாங்கலாம் என்று நினைக்கிறார். திடீரென இன்னும் சிக்கனமாக சைக்கிள் வாங்கி வைத்துக் கொண்டால் என்ன என்று எண்ணுகிறார். டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வாங்க வேண்டும் என்பது அமைப்பாளரின் எண்ணம். ஹைனஸ்ஸிலிருந்து சைக்கிளுக்கு பைமோ நெக்ஸான் மார்க்கமாக ஏன் தன் மனம் பயணிக்கிறது என்பதை அமைப்பாளரால் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியவில்லை. எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று அமைப்பாளர் வழக்கம் போல் முடிவு செய்தார். 

மெட்ராஸ் போக வேண்டியிருப்பது ஒரு தனிக்கதை. ஒரு வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. அமைப்பாளரின் நண்பர் ஒருவரின் மகன் சிவில் எஞ்சினியரிங் படித்து விட்டு வேலை கேட்டு அமைப்பாளரிடம் வந்தார். இளைஞர். வெயிலில் நிற்கும் வேலை வேண்டாம் என்ற முன்முடிவுடன் இருக்கிறார் அந்த இளைஞர். பங்குனி வெயிலில் பாடாய் கிடப்பவர் அமைப்பாளர். அவரிடம் ஒரு இளைஞர் வெயிலில் நிற்காமல் சிவில் எஞ்சினியரிங் துறையில் வேலை கேட்டால் அமைப்பாளருக்கு எப்படி இருந்திருக்கும் என்பது எவராலும் யூகிக்கத் தக்கதே. ‘’அங்கிள்! எனக்கு வெயில்ல நிக்கற சைட் ஒர்க் வேணாம். நான் ஆஃபிஸ்ல கம்ப்யூட்டர்ல டிராயிங் போடறன். எனக்கு அந்த வேலைதான் வேணும்’’. சென்னையில் இருக்கும் தன்னுடைய சகோதரன் என எண்ணும் அளவு நெருக்கம் கொண்ட நண்பனிடம் விஷயத்தைக் கொண்டு போனார் அமைப்பாளர். ‘’அண்ணன்! அந்த பையனை பேங்க் எக்ஸாம் எழுதச் சொல்லுங்க. அது தான் அவனுக்கு சரியா இருக்கும்’’. சென்னை நண்பன் சிவில் எஞ்சினியர் தான். மழைக்குக் கூட சிவில் சைட் பக்கம் ஒதுங்காமல் வங்கி அதிகாரி ஆகி விட்டான் என்பது அமைப்பாளருக்கு அப்போது தான் நினைவில் வந்தது. இளைஞனிடம் அதைச் சொன்னார் அமைப்பாளர். சென்னையில் ஒரு கோச்சிங் செண்டரில் சேர்ந்து படி என்று சொன்னார் அமைப்பாளர். ‘’அங்கிள்! என்னை கோச்சிங் செண்டரில் சேத்து விடுங்க.’’ இளைஞன் சொன்னான். ‘’பேரண்ட்ஸ் என்ன பிள்ளை வளக்கறாங்க. காலேஜ் முடிச்ச பையன் எல்.கே.ஜி ஸ்டூடண்ட் போல இருக்கானே’’ என அமைப்பாளர் எண்ணினார். ஆனால் அவரால் வெளியில் சொல்ல முடியாது. அமைப்பின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர் இளைஞனின் தந்தை. ‘’தம்பி! எனக்கு பலவிதமான ஒர்க்ஸ் இருக்கு. கார் எடுத்துக்கிட்டு காலைல 5 மணிக்கு இங்க கிளம்பறோம். பதினோரு மணிக்கு சென்னைல இருக்கோம். இன்ஸ்ட்டியூட் அட்மிஷனை ஒரு மணிக்குள்ள முடிக்கறோம். ‘’சங்கீதா’’ல லஞ்ச். நைட் 8 மணிக்கு ஊருக்கு வந்துடறோம். அப்பாவையும் கூட வரச் சொல்லு.’’ இளைஞனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு அடுத்த நாளே புறப்பட வேண்டியிருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தன் மற்ற பணிகளைத் திட்டமிட்டார் அமைப்பாளர். அந்த வேலையை தள்ளி வைக்க ஒத்திப் போட எத்தனை சாத்தியம் இருக்கிறதோ அத்தனையையும் பயன்படுத்தினான் இளைஞன். கடைசியாக நாளை காலை 5 மணிக்கு கிளம்பலாம் எனச் சொல்லியிருக்கிறான். அதுவும் தள்ளிப் போகுமோ என்ற பீதி அமைப்பாளருக்கு இருக்கிறது. 

சென்னை போக வேண்டிய வேலை இருக்கிறது என்று தனது நண்பரிடம் இரண்டு நாட்கள் முன்னால் சொன்னார் அமைப்பாளர். ‘’பிரபு! விகடன் பப்ளிகேஷன்ஸ்ல ‘பொன்னியின் செல்வன்’ கிளாசிக் எடிஷன் போட்டிருக்காங்க. அத எனக்கு ஒரு செட் வாங்கிட்டு வந்துடுங்க. ‘’

அமைப்பாளருக்கு  கோவை செல்ல  வேண்டிய வேலை ஒன்று பெண்டிங் இருக்கிறது. திருச்சி செல்ல வேண்டிய வேலை ஒன்றும் பெண்டிங். 

இவற்றை யோசித்த போது செயல் புரியும் கிராமத்துக்கு போய் ஒரு வாரமாகிறதே ஃபோன் செய்யலாம் என்று ஃபோன் செய்தார். ‘’சார் ! என்ன சார் எங்க ஊருக்கே வர மாட்டீங்கறேங்க’’ . அமைப்பாளர் பரிதாபமாக , ‘’போன வாரம் வந்திருந்தேனே அண்ணன்’’ என்றார். கிராமவாசி, ‘’ஒரு வாரம் ஆயிடுச்சு . உங்களைப் பாக்க முடியலையே’’ என்று வருத்தப்பட்டார்.