எனக்கு ஹைதராபாத்தில் ஒரு நண்பர் இருக்கிறார். இங்கிருந்து முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஹைதராபாத் சென்று ஒரு வணிகத்தைத் தொடங்கி இப்போது ஒரு சிறு ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். தனது உழைப்பாலும் திறமையாலும் முன்னுக்கு வந்தவர். எதனையும் கலாபூர்வமாக நேர்த்தியாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர். தான் வசிக்கும் இடத்தை தனது சுற்றுப்புறத்தை அத்தனை தூய்மையாக வைத்திருப்பவர். தூய்மைக்கு தனது வாழ்வில் அவ்வளவு இடம் கொடுப்பவர்கள் அரிதினும் அரிதானவர்கள். என் மீது மிகுந்த பிரியம் கொண்டவர். எப்போதாவது ஊருக்கு வருவார். அப்போது என்னைப் பார்க்க வருவார். சில மாதங்களுக்கு முன்னால் வந்திருந்த போது ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து சொல்லிக் கொண்டிருந்தேன்.
என்னைச் சந்திக்கும் - நான் சென்று சந்திக்கும் - எவரிடமும் நான் ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து கூறுவேன். அந்த பணிகள் சமூகத்தின் சூழலை சமூக நிலையை ஆடி போல் பிரதிபலிக்கின்றன. இந்த செயல்பாடுகள் குறித்து கேட்டறிவதன் மூலம் சமூகத்தின் நிலையை உணர முடியும். தமிழ்ச் சூழலில் , சமூகப் புரிதல் என்பது மிகவும் குறைவானது. குடிமைப் பண்புகளும் முழுமையான போதுமான அளவில் இல்லை. இன்று கூட ஒரு சம்பவம் நடந்தது. நான் வங்கியில் பணம் செலுத்த வரிசையில் நின்று கொண்டிருந்தேன். நேரம் அப்போது மாலை 3.25. ஒரு பெண்மணி நகையை மீட்க வேண்டும் என்று வங்கிக்கு வந்திருக்கிறார். வங்கி ஊழியர் அவரிடம் வங்கி நேரம் இன்னும் ஐந்து நிமிடத்தில் முடிந்து விடும். இப்போது நகையை மீட்கும் நடைமுறைகளை மேற்கொள்ள முடியாது. நாளை வாருங்கள் என்று கூறினார். நான் என்னுடைய வரிசையிலிருந்து வெளியே வந்து அந்த ஊழியரிடம் நகைக்கடன் வட்டியுடன் எவ்வளவு செலுத்த வேண்டுமோ அந்த தொகையில் ரூ. 2000 மட்டும் குறைவாக அந்த பெண்மணியின் நகைக்கணக்கில் கட்டச் சொல்லுங்கள். பணம் கட்ட வந்தவரை பணத்துடன் திரும்பிச் செல்லுங்கள் என்று கூறாதீர்கள் என்று சொன்னேன். சில வினாடிகள் யோசித்து விட்டு சரி அவ்வாறே செய்யுங்கள் என்று கூறினார். ரூ. 30,000 அவர் செலுத்த வேண்டும். இரண்டாயிரம் ரூபாய் பாக்கி வைத்து விட்டு ரூ. 28,000 பணம் செலுத்தி விட்டார். மீதியை நாளை காலை செலுத்தி விட்டு நகையை மீட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினேன்.
பணத்துடன் திருப்பி அனுப்பினால் இன்று மாலைக்கும் நாளை காலைக்கும் இடையில் அந்த பெண்ணின் சூழலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அந்த பெண் வைத்திருக்கும் பணத்தை அவளது கணவன் எடுத்துச் சென்று அரசு மதுக்கடையில் குடித்து அழிக்கலாம். அந்த பெண் தவணைக்கு கடன் வாங்கியிருந்தால் தவணைக்காரர்கள் நெருக்கி கடன் வட்டிக்காக 5000 அல்லது 10,000 வாங்கிச் சென்றிடக் கூடும். அந்த பெண்ணால் தவணைக் கடனையும் முழுமையாகத் தீர்க்க முடியாது ; வங்கியில் உள்ள நகையையும் மீட்க முடியாது. அந்த பெண்ணின் சிரமம் எனக்குத் தெரியும். யாரும் என்னிடம் வந்து சொல்வதில்லை. நான் ஒரு நாளைக்கு பெரும்பாலான பொழுது இந்த மனிதர்கள் மத்தியில் இருக்கிறேன். அவர்களுடைய சூழலைக் காண்கிறேன் என்பதால் என்னால் இந்த நிலையை உணர முடிகிறது. வங்கி ஊழியருக்கு இந்த சிரமங்கள் புரியாது. ‘’எருதின் வலி காகம் அறியாது’’ என்பார்கள். எருதின் முதுகில் திமிலில் அதற்கு சிறு காயம் ஏற்படும். காகம் அதன் முதுகில் ஏறி அமர்ந்து அந்த காயத்தைக் கொத்தி கொத்தி எருதின் ரத்தத்தையும் சதையையும் தின்னும். எருதால் அந்த காகத்தைத் துரத்த முடியாது. நான் எப்போதோ வங்கிக்குச் செல்பவன் என் கவனத்தில் வந்த ஒரு விஷயத்தில் என்னால் முடிந்ததைச் செய்தேன். வங்கி ஊழியருக்கு அந்த சமூகப் பிரக்ஞை இருக்குமானால் நூற்றுக்கணக்கானோருக்கு அவரால் உதவ முடியும்.
என் உரையாடல்கள் சமூக யதார்த்தங்கள் குறித்த முன்வைப்புகளாகவே இருக்கும். அதனை சமூகத்தின் முன் வைப்பது எனது பணிகளில் ஒன்று.
ஹைதராபாத் நண்பர் என்னிடம் நேற்று ஃபோனில் பேசினார். ‘’காவிரி போற்றுதும்’’க்காக தன்னால் என்ன உதவி செய்ய முடியும் என்று கேட்டார். அவரிடம் நான் சில விஷயங்களைக் கூறினேன்.
1. நிதி இருந்தால் மட்டுமே பொதுப்பணி நடக்க முடியும் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. அது முழு உண்மை அல்ல. நிதி ஒரு காரணி. முக்கியமான காரணி. ஆனால் ஒரு செயல் நிகழ ஒரு குழு உருவாக நிதி தேவையில்லை. செயல் செய்ய வேண்டும் என்ற உணர்வே முதன்மையாக தேவை. உங்கள் உணர்வை ‘’காவிரி போற்றுதும்’’க்கு கொடுங்கள். உங்கள் மனதில் சிறு இடத்தை ‘’காவிரி போற்றுதும்’’க்கு கொடுங்கள். ’’காவிரி போற்றுதும்’’ மின் பணிகள் செயல்கள் அனைத்தையும் உங்களுடையதாகவே எண்ணுங்கள். அது நீங்கள் நிதி உதவி செய்த பணியாக இருந்தாலும். நிதி உதவி செய்யாததாக இருந்தாலும்.
2. பலருக்கு சேவைப் பணிகள் செய்ய ஆர்வம் உண்டு. என்னுடைய கணிப்பில் எல்லாருக்குமே ஏதோ விதத்தில் யாரோ ஒருவருக்கு உதவ வேண்டும் என்றே நினைக்கிறார்கள். எல்லாரும் யாரோ ஒருவருக்கு உதவி செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள். அது பிரக்ஞைபூர்வமாக உணர்வுபூர்வமாக நிகழ்ந்தால் மகத்தான பல விளைவுகளை உருவாக்கும்.
உங்களால் 365 நாட்கள் முழுமையாக சேவைப் பணிகள் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு நாள் செய்யுங்கள். வருடத்தில் ஒரு நாள். நம் குழுவில் 365 நண்பர்கள் இருப்பார்கள் என்றால் அவர்கள் ஒவ்வொருவராலும் வருடத்தில் ஒருநாள் ஒரு பொதுப்பணியைச் செய்ய முடியுமானால் ‘’காவிரி போற்றுதும்’’ 365 நாளும் பொதுப்பணி ஆற்ற முடியும் . அவ்வாறு நிகழ்ந்தால் 365 நண்பர்களும் 365 நாளும் பொதுப்பணி ஆற்றுகிறார்கள் என்பது தானே உண்மை!
நாம் நம் உடல் உழைப்பைக் கொடுக்கும் செயல் மட்டும் நாம் செய்யும் செயல் அல்ல. நாம் உணர்வால் உணரும் மனதால் சிந்திக்கும் செயலும் நாம் செய்யும் செயலே.
3. உங்களுக்கு மரம் நடுதலில் ஆர்வம் இருக்கலாம். கல்விப் பணியில் விருப்பம் கொள்ளலாம். உணவளித்தலை பேரறம் என நீங்கள் கருதலாம். தொழில் பயிற்சி அளிப்பதில் நம்பிக்கை இருக்கக் கூடும். பல்வேறு விதமான விழிப்புணர்வு பணிகளை முன்னெடுக்க உங்களிடம் திட்டங்கள் இருக்கக் கூடும். அனைவரையும் ‘’காவிரி போற்றுதும்’’ தனது தளத்திற்குக் கொண்டு வர விரும்புகிறது. உங்களை இணைத்துக் கொண்டு முன்னகர விரும்புகிறது.
4. உங்கள் எண்ணங்களை ஆர்வங்களை விருப்பங்களை மனத் தடை ஏதுமின்றி கூறுங்கள். நாம் சேர்ந்து சிந்திப்போம்.
5. இறைவனின் படைப்பில் சிறு கூழாங்கல்லும் உள்ளது. பெருமலையும் உள்ளது. படைத்தவனின் கருணை பெருமலையின் மேலும் சிறு கூழாங்கல்லின் மேலும் ஒன்றாகவே உள்ளது.
நண்பர் நான் கூறியவற்றை ஆழமாக உள்வாங்கிக் கொண்டார்.
தன்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்டார். எனது அனுபவத்திலிருந்து அவருக்கு உகந்த ஒன்றைப் பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நான் சில கணங்கள் யோசித்துப் பார்த்து அவருக்கு ஒரு பரிந்துரையை வழங்கினேன். அவருடைய ஊரில் அவரது நண்பர்களில் பொதுப்பணி செய்ய வேண்டும் என்று எண்ணும் 10 நண்பர்களை ‘’காவிரி போற்றுதும்’’ உடன் தொடர்புக்குக் கொண்டு வர முடியுமா என்று கேட்டேன். சேவையில் ஆர்வம் உள்ள 10 நண்பர்கள் இருக்கிறார்கள் . அவர்களுடன் பேசி அவர்களை இணைக்க முடியும் என்று சொன்னார். எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன்.
அந்த அணிக்கு ஒரு பணியைப் பரிந்துரையுங்கள். அதனை ஒரு துவக்கமாகக் கொண்டு ‘’காவிரி போற்றுதும்’’மில் இணைகிறோம் என்றார்.
அணியினரை சந்தித்தாலோ அல்லது உரையாடினாலோதான் அவர்கள் என்ன விதமான பணியை விரும்புகிறார்கள் என்பது தெரியும். சந்திக்காமல் உரையாடாமல் எப்படி பரிந்துரைப்பது என்றேன். தன்னை ஒத்த மனநிலை கொண்டவர்கள் அவர்கள் என்பதால் தான் ஏற்கும் ஒன்றை அனைவரும் ஏற்பார்கள் என்றார்.
பெருமாள் கோவில் உள்ள ஒரு கிராமத்தில் இராமாயண நவாஹம் ஒன்றைச் செய்து அங்கிருக்கும் விவசாயிகளுக்கு 1250 தென்னம்பிள்ளைகளும் 850 மாங்கன்றுகளும் வழங்க வேண்டும் என்று நண்பரிடம் விண்ணப்பித்துக் கொண்டேன். நண்பர் எவ்வளவு தொகை ஆகும் என்று கேட்டார். ஒரு தென்னம்பிள்ளையின் விலை ரூ. 50. ஒரு ஒட்டு மாங்கன்றின் விலை ரூ. 40. தென்னம்பிள்ளைக்கு ரூ. 62,500ம் மாங்கன்றுக்கு ரூ. 34,000 ம் என மொத்தம் ரூ. 96,500 ஆகும் என்று சொன்னேன்.
நண்பர் சில வினாடிகள் யோசித்து விட்டு ‘’தொகையை ஏற்பாடு செய்து விடலாம். நவாஹத்தைச் சிறப்பாக நடத்துங்கள்’’ என்றார்.
கேரளாவில் ஒரு வழக்கம் உண்டு. தென்னம்பிள்ளைகளின் முன்னிலையில் இராமாயணம் சொல்வார்கள். அவை இராமாயணத்தின் மகத்துவத்தை உள்வாங்கிக் கொள்கின்றன என்பது நம்பிக்கை. ஒன்பது நாட்கள் நவாஹம் முடிந்த பின் இராமாயணம் கேட்டவர்கள் அதனைத் தங்கள் வீடுகளின் தோட்டத்தில் நடுவார்கள். தென்னை மனிதர்களுடன் வாழ்வுடன் இணைந்திருப்பதைப் போல காப்பிய மாந்தர்களின் மேலான உணர்வுகளும் தங்கள் வாழ்வைச் சூழ்ந்திருக்கும் என்பது அந்த பிரதேசத்தின் நம்பிக்கை.
சங்கப் பலகை என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். சங்கப் பலகை ஒருவர் அமரும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். அவர் அமர்ந்த பின் ஒத்த மனம் கொண்ட இன்னொருவர் வந்தால் அந்த பலகை பெரிதாகி இன்னொருவர் அமர இடமளிக்கும். ஒத்த மனம் கொண்டோர் வர வர பலகை பெரிதாகிக் கொண்டே செல்லும். ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு சங்கப் பலகை என அந்த தருணம் என்னை எண்ணச் செய்தது.