Sunday, 24 April 2022

மனிதர்க்குத் தோழன்

இந்திய மரபில், மகாபாரத காவியத்திலிருந்து நாயைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பஞ்ச பாண்டவர்கள் திரௌபதியுடன் வானுலகம் நோக்கிய பயணத்தை மேற்கொள்ள இமயத்தின் மலைகளில் சென்று கொண்டிருக்கும் போது அவர்கள் அறுவருடனும் ஒரு நாய் உடன் பயணிக்கிறது. யுதிர்ஷ்ட்ரன் உடன் தொடர்ந்து பயணிக்கும் அந்த நாய் தர்மதேவதையின் அம்சம் என பின்னர் உணரப்படுகிறது. நாய்களின் தெய்வமான சரமை அளித்த சாபம் ஜனமேஜய ராஜனை வாழ்நாளெல்லாம் துரத்திய கதையைக் கூறுகிறது மகாபாரதம். பகவான் ஸ்ரீ தத்தாத்ரேயரை நான்கு வேதங்களும் நான்கு நாய்களின் ரூபத்தில் சூழ்ந்திருக்கிறது என்கிறது இந்திய தொன்மம். காலபைரவரின் வாகனம் நாய்.  

பாரதியார் தனது பாப்பா பாட்டில் குழந்தைக்கு மிருகங்களையும் பறவைகளையும் உதாரணம் கூறி அறிவுரைகள் சொல்கிறார். ‘’சின்னஞ் சிறு பறவை போல நீ திரிந்து பறந்து வா பாப்பா’’. ’’வாலைக் குழைத்து வரும் நாய்தான் அது மனிதர்க்குத் தோழனடி பாப்பா’’.

மனித குல வரலாற்றில் மனிதனுடன் முதலில் நெருங்கிப் பழகிய உயிரினம் நாய்.

***

நேற்று காலை எங்கள் பகுதியில் உள்ள தெருநாய்களை நகராட்சியிலிருந்து ஆட்கள் வந்து பிடித்துச் சென்றார்கள். அவை எழுப்பிய தீனமான குரல் மனதை உலுக்குவதாக இருந்தது. நான் சென்று பார்த்தேன். யார் என்று கேட்டேன். நகராட்சியிலிருந்து வந்திருக்கிறோம் என்றார்கள். அந்த நாய்களை என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டேன். அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை  செய்ய உள்ளதாகக் கூறினார்கள். நாய்களைப் பிடிக்க வந்திருந்த வாகனத்தின் பதிவு எண்ணைக் குறித்துக் கொண்டேன். அது வெளியூர் நகராட்சி ஒன்றின் வாகனம். அதில் அந்த ஊரின் பெயர் எழுதப்பட்டிருந்தது.அந்த வாகனத்தின் பின்னால் பைக்கில் சென்றேன். நாய்களின் மீது அக்கறை கொண்ட மேலும் நான்கு பேரும் அவரவர் வாகனத்தில் அந்த வண்டியின் பின்னால் வந்தார்கள். ஊரின் குப்பைக்கிடங்குக்கு பக்கத்தில் ஒரு இடத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் நாய்களை ஒரு அறையில் விட்டு பூட்டி விட்டு சென்று விட்டார்கள். 

நான் வீட்டுக்கு வந்து இணையத்தில் உள்ளூர் நிர்வாகம் நாய்களைப் பிடித்தலிலும் நாய்களுக்கு கருத்தடை அறுவைசிகிச்சை செய்வதிலும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என சட்டம் என்ன சொல்கிறது என படித்தேன். 

Animal Birth Control (Dogs) 2001 எனும்  விதிகளின் கீழ் உள்ளூர் நிர்வாகம் எவ்வாறு நாய்களுக்கு தடுப்பூசி இடுதலையோ அல்லது கருத்தடை அறுவை சிகிச்சையோ செய்ய வேண்டும் என்பதற்கான குறிப்புகளை அளிக்கிறது. 

1. ஒவ்வொரு நகராட்சியிலும் கமிஷனரைத் தலைவராகக் கொண்டு எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். கால்நடை பராமரிப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், பொது சுகாதாரத் துறையையின் அலுவலர், ஒரு கால்நடை மருத்துவர், எஸ். பி.சி.ஏ பிரதிநிதிகள் இருவர், பிராணிகள் நல வாரிய உறுப்பினர், பிராணிகளின் நலனில் அக்கறை கொண்ட உள்ளூர் பிரமுகர் ஒருவர் என அந்த குழுவின் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இந்த குழுவுக்கு ‘’தெருநாய்கள் கண்காணிப்பு குழு ‘’ என்று பெயர். 

2. நாய்கள் குறித்து உள்ளூர் நிர்வாகத்துக்கு வரும் எழுத்துப்பூர்வமான புகார்கள் இந்த குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவர்களே இந்த விஷயத்தில் உரியதைச் செய்ய வேண்டியவர்கள். 

3. ஒரு பகுதியில் உள்ள தெருநாய்களை பிடித்துச் செல்லும் முன் உள்ளூர் நிர்வாகத்தால் குறிப்பிட்ட நோக்கத்துக்காக தெருநாய்கள் பிடித்துச் செல்லப்பட உள்ளன என முறையான தெளிவான அறிவிப்புகள் அந்த பகுதி முழுவதும் செய்யப்பட வேண்டும். 

4. தடுப்பூசி இடப்படுதலில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் கருத்தடை அறுவைசிகிச்சை செய்வதின் முறைகள் குறித்தும் விரிவாக இந்த சட்டத்தில் பேசப்படுகிறது. 

ஓர் அறிவிப்பு செய்து விட்டு நாய்கள் பிடிக்கப்படுவது என்பது என்ன நிகழ்கிறது என அங்கிருப்பவர்களுக்கு முன்னரே தெரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு உருவாகும். அந்த பகுதியின் மக்களுக்கு அது ஒரு விழிப்புணர்வை அளிக்கும். 

Animal Birth Control (Dogs) 2001 விதிகளின் நகலை இணைத்து மாவட்ட ஆட்சியருக்கு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்து இந்த நிகழ்வில் விதிகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளனவா என விசாரணை செய்யுமாறும் விதிமீறல் நிகழ்ந்திருந்தால் அதனை நிகழ்த்தியவர்கள் மீது உரிய மேல்நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டு ஒரு மனுவை அனுப்பினேன். அந்த மனுவின் நகலை உள்ளாட்சித் துறை செயலாளருக்கும் கால்நடைத் துறை செயலாளருக்கும் அனுப்பி வைத்தேன். உள்ளூர் நிர்வாகத்திடம் நடந்த சம்பவம் குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் விபரங்கள் கோரியிருக்கிறேன். 

மக்களாட்சியில் பொறுப்புகளும் கடமைகளும் அனைவருக்கும் உள்ளன. அந்த பொறுப்பும் கடமைகளுமே மக்களாட்சியின் உயிராக உள்ளன. 

நாய்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கட்டிடத்துக்கு மீண்டும் இரண்டு முறை சென்று அவை எவ்வாறு உள்ளன என்று பார்த்து விட்டு வந்தேன்.