Tuesday 26 April 2022

சொந்த வேலை

இப்போதெல்லாம் பொழுது விடிந்தால் செய்வதற்கென ஏகப்பட்ட வேலைகள் வரிசை கட்டி நிற்கின்றன. எது பொது வேலை எது சொந்த வேலை எனப் பிரிக்க இயலாதவாறு அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்த வண்ணம் உள்ளது. வேலை என்று வந்து விட்டால் பொது வேலை மற்றவர்கள் வேலை என் வேலை என்று பார்க்க மாட்டேன். அனைத்தையும் ஒன்றாகக் கருதியே செய்வேன். என்னுடைய தொழில் சார்ந்து நான் பணிகளை மேற்பார்வையிட்டால் போதும். ஆனால் பொது வேலைகளில் அனைத்தையும் நான் தான் செய்ய வேண்டும். எது செய்தாலும் துல்லியமாக சரியாக செய்ய வேண்டும் என்று எண்ணும் மனநிலையைக் கொண்டிருப்பதால் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்வேன். பொது வேலை செய்பவன் தான் இன்னும் கொஞ்சம் முயன்றால் மேலும் நிறைய மனிதர்களை சென்றடைய முடியும் என்று தான் நினைப்பான். நிறைய மனிதர்கள் உதவி தேவைப்படும் நிலையில் இருக்கிறார்கள் என அறிவான். மெய் வருத்தம் பாராது கண் துஞ்சாது பணிகளைச் செய்வதுதான் அவற்றைச் செய்வதற்கான ஆகச் சிறந்த வழி என்பது ஓர் உண்மை. 

ஒரு கிராமம். அதில் மூன்று குக்கிராமங்கள் உள்ளடங்கி உள்ளன. அந்த கிராமத்தின் ஒரு குக்கிராமத்தையும் இன்னொரு குக்கிராமத்தையும் பிராட்கேஜ் ரயில்வே லைன் பிரிக்கிறது. சாலை மட்டத்திலிருந்து ஏழு அடி உய்ரம் பிராட்கேஜ் ரயில் பாதை உயர்ந்து விட்டது. எனவே ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குக்கிராமங்களும் துண்டிக்கப்பட்டு விட்டன. பதினைந்து அடி தொலைவு உள்ள அந்த பாதையைக் கடந்து வர பத்து கிலோமீட்டர் சுற்றி வர வேண்டும் என்ற நிலைமை. முன்னர் மீட்டர்கேஜ் ரயில் பாதை இருந்த போது ஆளில்லா ரயில் கிராசிங் இருந்திருக்கிறது. பிராட்கேஜ் ஆனதும் இல்லாமல் போனது. ரயில்வே சப் வே அமைத்தால் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குக்கிராம மக்கள் 10 கி.மீ சுற்றி வருவது குறையும். இதனை ரயில்வேயின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். முதலில் அந்த ஊரின் மூத்த குடிமகன் ஒருவரை ரயில்வேக்கு மனு அனுப்ப சொல்லலாம் என எண்ணி அவரிடம் சொல்லி அனுமதி பெற்று அந்த மனுவை எழுதினேன். முயற்சி மேற்கொள்ள அந்த மனுவே போதும். என்றாலும் அந்த கிராம மக்கள் ஆயிரம் பேரின் கையெழுத்து பெற்று அந்த மனுவை அனுப்ப வேண்டும் என்று தோன்றியது. நல்ல யோசனைதான். ஆனால் ஆயிரம் பேரின் கையெழுத்து பெற குறைந்தது பத்து நாட்கள் ஆகி விடும். இதற்கு முன் மூன்று விஷயங்களுக்காக மூன்று முறை ஆயிரம் பேரின் கையெழுத்தைப் பெற்று அனுப்பி உள்ளேன். இந்த விஷயத்தை நான்காவதாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனதின் ஒரு பகுதி கூறுகிறது. மனதில் தோன்றி விட்டால் அதனைச் செய்து விட வேண்டும் . இல்லையென்றால் குறையாகவே இருக்கும். கட்டிடப் பொறியாளர்கள் கட்டிட வரைபடம் வரைய டிராயிங் ஷீட் இருக்கும். காகித அளவு ஏ1. பொதுப் பயன்பாட்டில் இருக்கும் ஏ4 காகித பரப்பை விட எட்டு மடங்கு பெரியது.  அந்த ஷீட்டை ஏ4ன் அளவுக்கு மடித்து விட முடியும். இன்ஜினியரிங் டிராயிங் வகுப்பின் முதல் பாடமே டிராயிங் ஷீட்டை ஏ4 அளவுக்கு மடிப்பதுதான். அதன் நுனியை மட்டும் பிடித்தோம் என்றால் முழு ஷீட்டும் விரிவாகும். குறிப்பிட்ட விதத்தில் மடித்தால் ஏ4 போல இருக்கும். ஆயிரம் பேரின் கையெழுத்தையும் அந்த டிராயிங் ஷீட்டில் பெற்று விடலாம் என்று யோசித்தேன். இதைப் போல இதற்கு முன் யாரும் முயன்றிருப்பார்களா என்று தெரியவில்லை. அதற்காகவேனும் செய்து பார்க்க வேண்டும். 

முதலில் ஒரு மனு எழுதினேன். பின்னர் அந்த கிராமத்துக்குச் சென்று அங்குள்ள ஒருவருடன் இடத்தை பார்வையிட்டு வந்தேன். என் நண்பர் ஒருவரின் நண்பர் ரயில்வே பொறியாளர். என் நண்பருக்கு ஃபோன் செய்து விபரம் சொன்னேன். அவர் தன் நண்பரிடம் விசாரித்து சொன்னார். முயன்றால்  இந்த விஷயம் சாத்தியமானது தான் என்றார். நிலுவைப் பட்டியலில் முதலிடத்துக்கு வந்து விட்டது இந்த விஷயம். 

எனக்குச் சொந்தமான ஒரு ஃபிளாட் உள்ளது. அதில் என்னுடைய நிறுவனத்தின் கட்டுமானப் பணிக்கு தேவைப்படும் பிளம்பிங், எலெக்ட்ரிக் பொருட்களை போட்டு வைத்திருப்பேன். அந்த ஃபிளாட்டில் தான் அன்னதானம் செய்ய சமையல் நடைபெற்றது. ஒரு நண்பர் அதனை வாடகைக்கு வேண்டும் என்று கேட்டார். அந்த பகுதியில் வழக்கமாக உள்ள வாடகையை விட கூடுதலான வாடகை தருவதாகக் கூறினார். நண்பர் விரும்பிக் கேட்கிறாரே என்று சம்மதித்தேன். அதற்கு ஒரு வாடகை ஒப்பந்தம் போட வேண்டும். மாதிரி படிவம் அனுப்பி வைத்தார். இரண்டு நாளாக ஒரே அலைச்சல். படிவத்தை நிரப்பவேயில்லை.  இன்று இரவு தான் அதனை நிரப்பினேன். என்னுடைய பெயரையும் முகவரியையும் எழுத வேண்டும். ஃபிளாட்டின் முகவரியை எழுத வேண்டும். இவை இரண்டையும் செய்த போது ஏதோ பெரிய வேலை ஒன்றைச் செய்ததைப் போல தோன்றியது எதனால் என்று யோசித்துப் பார்த்தேன்.