கச்சத்தீவு பயணத்தின் போது, விசைப்படகினை இயக்கும் மீனவர்களிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர்கள் அனைவரும் என் மேல் பிரியத்துடன் இருந்தனர். எங்கள் படகில் 150 பேர் வரை பயணித்திருப்போம். அந்த படகின் பயணிகள் அனைவரும் நொறுக்குத் தீனிகளை வாங்கி வைத்திருந்தனர். கடல் ஒவ்வாமை ஏற்படக் கூடும் என்பதால் எலுமிச்சைப் பழம், உப்புக் காற்றினைச் சமாளிக்க மாங்காய் , நெல்லிக்காய் என பலவிதமான தின்பண்டங்கள் அவர்களிடமிருந்தன. ஆனால் இவையெல்லாம் கடலிலேயே நாள்கணக்காக பயணிப்பவர்களின் பழக்கங்கள். எங்கள் பயணம் ஐந்து மணி நேரம் தான். கிளம்புவதற்குள் முடிந்து விடும்.
கடலில் ஒரு விஷயம் கவனித்தேன். கடலில் செல்ல செல்ல 20 - 30 நிமிடங்கள் வரை கரை தெரியும். அதன் பின் கரையைக் காண முடியாது. நம் உலகமே தண்ணீராலும் காற்றாலும் சூரியனாலும் வானத்தாலும் மேகங்களாலும் மட்டுமே சூழ்ந்திருக்கும். நடுக்கடலில் பெரிய அலைகள் இருக்காது. ஆனால் கடல்நீர் அலைந்தவாறே இருக்கும். படகு அலைகளின் மீது ஏறி ஏறி செல்லும். சமயத்தில் ஒரு பெரிய அலை எதிர்பாராமல் உருவாகி முன்நிற்கும். படகை இயக்குபவர்கள் முழுமையாக கடலின் போக்கைக் கவனித்து அதற்கு இசைவான முறையில் இயக்கிக் கொள்வார்கள். விசைப்படகை நான் இயக்க விரும்புகிறேன் என்று அவர்களிடம் கூறினேன். என்னிடம் சுக்கானைக் கொடுத்தார்கள். கார் ஸ்டியரிங் போல் தான் இருந்தது. ஆனால் முழுமையாக சுழலக் கூடியது. கணிசமான நேரம் இயக்கினேன். அப்போது மக்களிடமிருந்து தின்பண்டங்கள் படகை இயக்குபவரின் அறைக்கு வந்த வண்ணம் இருக்கும். தர்பூசணிப் பழங்கள், மாங்காய், நெல்லிக்காய் என எது வந்தாலும் அவர்கள் அனைவருமே அதைப் பகிர்ந்தே உண்பார்கள். உணவு என்ற ஒன்று கைக்கு வந்ததுமே அவர்கள் கைகள் அதனைப் பகிரத்தான் பாயும். படகை இயக்கும் குழு ஒரு கரத்தின் ஐந்து விரல்களைப் போல ஒருங்கிணைந்து தான் செயல்படுவார்கள். நான் அது குறித்து யோசித்துப் பார்த்தேன். எனது தர்க்க மனம் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தது.
அவர்கள் இருப்பது கடலில். கரை கண்ணிலிருந்து மறைந்து விட்டால் எந்த வெளி உதவியும் கிடைக்காது. எந்த நெருக்கடி என்றாலும் படகில் இருக்கும் ஐந்து அல்லது ஆறு பேர்தான் இணைந்து சமாளிக்க வேண்டும். அவர்களுக்குள் இயல்பாகவே ஒருங்கிணைப்பு இருந்தால் தான் நெருக்கடியில் ஆகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும். அவர்கள் மனங்களில் சிறு பேதம் எவ்விதமாகத் தோன்றினாலும் அதன் விளைவை அனைவரும் சேர்ந்து அனுபவிக்க வேண்டும்.
கூட்டுச் செயல்பாட்டின் முக்கியத்துவத்தை கடல் எளிதில் பயிற்றுவித்து விடுகிறது என நினைத்துக் கொண்டேன்.