Wednesday 27 April 2022

கடல் பார்த்தல்

சிறு வயதிலிருந்தே கடல் பார்க்கும் ஆர்வம் எனக்கு உண்டு. கடல் எப்போதும் ஒரு தோழனாகவே மனதில் பதிவாகியிருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கடல் நோக்கி செல்வது என்பது பள்ளி நாட்களிலிருந்தே வழக்கமாயிருக்கிறது. மோட்டார் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டவுடன் வாரத்தில் ஒருநாள் மாலை கடற்கரைக்குச் சென்று இரவு வரையிலான பொழுதை அங்கே செலவிடுவது என்பது எனது வழக்கங்களில் ஒன்றானது. 25 கி.மீ தொலைவில் ஊரிலிருந்து கடல் இருப்பதால் இதனை சாத்தியமாக்க முடிந்தது. பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரைகளைத் தவிர வாணகிரி, சின்னங்குடி போன்ற ஊர்களின் கடற்கரைக்கும் செல்வேன். பௌர்ணமி தினங்களில் மாலை இரண்டு மூன்று மணி நேரம் கடற்கரையில் இருக்க விரும்புவேன். கடல் பொங்கி நுரைத்து ஆரவாரமாய் கரை நோக்கி வரும். அலையின் சப்தம் அகத்தில் பலவிதமான உணர்வுகளை உண்டாக்கும். கடலில் மூழ்கிக் குளிப்பதும் உண்டு. 

கம்பன்,

 'ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இரும் சடைகள் தாங்கித், தாங்கரும் தவ மேற்கொண்டு, 
பூழி வெம் கானம் நண்ணிப், புண்ணியத் துறைகள் ஆடி, 
ஏழிரண்டு ஆண்டில் வா என்று இயம்பினன் அரசன்; என்றாள்' 

என்று கைகேயி கூறுவதாகக் கூறுகிறான். உலகம் என்பது பெரியது. கடல் என்பது மேலும் பெரியது. மிகப் பெரிய கடலால் சூழப்பட்ட மிகப் பெரிய உலகை பரதன் ஆள வேண்டும் என்பது கைகேயியின் விருப்பம் என்பதை கம்பன் காட்டுகிறான். 

கடலைக் காணும் போது முதல் செல் அமீபா இங்கிருந்து தானே உற்பத்தியாகியிருக்கும் என்று நினைப்பேன். இந்திய மரபில் கடல் என்பது மிகவும் ஆழமான தொல்படிமம். பெருமாள் கடல்வண்ணன். கடலில் பள்ளி கொள்பவன். திருமகள் கடலின் மகள். மருத்துவத்தின் தெய்வமான தன்வந்திரி பாற்கடல் கடையப்பட்ட போது அதில் அமிர்தக் கலசத்துடன் தோன்றியவர் என்கிறது இந்தியத் தொன்மங்கள். 

எனக்கு கடல் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. கடற்கரைக்குச் செல்லும் போது அங்கிருக்கும் மீனவர்களிடம் அவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லும் போது என்னையும் கூட்டிச் செல்கிறீர்களா என்று கேட்பேன். அவர்கள் எனக்கு நீச்சல் தெரியுமா என்ற வினாவை எழுப்புவார்கள். எனக்கு நீச்சல் தெரியாது. நீச்சல் தெரியாத ஒருவரை கடலுக்குள் அழைத்துச் செல்வது பாதுகாப்பானதில்லை என்று கூறிவிடுவார்கள். 

கடல் பயணம் செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. கச்சத்தீவில் நிகழும் திருவிழாவுக்கு இந்தியர்களுக்கு இரண்டு நாட்கள் அனுமதி உண்டு. பெயரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்து கொண்டு இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்யும் விசைப்படகில் கச்சத்தீவு சென்று வரலாம். அவ்விதமாக நான் கடல் பயணம் மேற்கொண்டேன். காலை 7 மணி அளவில் எங்கள் விசைப்படகு இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டது. ஐந்து மணி நேரத்துக்கு மேல் கடலில் சென்றது விசைப்படகு. எங்கும் நீர் மயம். அலாதியான அனுபவம் அது. கடலில் இருக்கும் போது மனம் விரிவடையும். மனம் நெகிழ்ந்து மிகவும் மிருதுவான நிலைக்கு வந்து விடும். வாழ்க்கை மீதும் சக மனிதர்கள் மீதும் இருக்கும் நம்பிக்கை பன்மடங்காகக் கூடும். மதியம் 12 மணி அளவில் கச்சத்தீவு சென்றடைந்தோம். சிறிய தீவு அது. இலங்கைக்கான இந்தியத் தூதர் அங்கே வந்திருந்தார். மறுநாள் மதியம் 12 மணி அளவில் புறப்பட்டு அன்று மாலை 5 மணி அளவில் இராமேஸ்வரம் வந்து சேர்ந்தோம். 

சென்னையிலிருந்து அந்தமான் செல்ல கப்பல் போக்குவரத்து உள்ளது. அது ஒரு வார காலப் பயணம். கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் செல்லவும் கப்பல் உள்ளது. அந்த இரண்டு பயணங்களும் மேற்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பங்களில் ஒன்று.