Monday 4 April 2022

வீடு பேறு

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வீடு என்பது மிகப் பெரிய விருப்பம் ; இலட்சியம் அனைத்தும். இன்றும் இந்தியர்கள் நிலத்திலும் வீட்டிலும் முதலீடு செய்வதையே மிகவும் விரும்புகிறார்கள். தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்கள் ஆலயத்தைச் சுற்றி அமைந்திருக்கக் கூடியவை. தஞ்சாவூர் பிராந்தியம் அவ்வாறுதான். தென் தமிழ்நாட்டின் நகரங்களும் ஆலயங்களைச் சுற்றி உருவானவையே. கிராமங்களிலும் கூட மக்கள் சில வீதிகளில் நெருக்கமாக வாழ்வதை விரும்புகிறார்கள். கேரளத்தின் பல பகுதிகள் பரந்த விளைநிலத்திற்கு நடுவில் வீடு அமைந்திருக்கும் முறை கொண்டவை. ஒருவர் தனது பக்கத்து  வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது பத்து நிமிடம் நடந்து சென்றால் தான் பார்க்க முடியும் என்ற தூரம் கொண்ட அமைப்பு.  

மனை வணிகமும் கட்டுமானமும் என்னுடைய தொழில். பலருடைய வீட்டை வடிவமைத்து அவற்றின் கட்டுமானப் பணியையும் மேற்கொண்டிருக்கிறேன். கட்டுமானம் என்னுடைய தொழில் என்றாலும் அடிப்படையில் நான் இலக்கிய வாசகன். ரசனை நுண்ணுணர்வுகள் கொண்டவன். காந்திய சிந்தனை முறைகள் மீது ஆர்வம் உள்ளவன். காந்தியின் எண்ணங்களை கட்டுமானத் துறையில் செயல்படுத்திப் பார்த்த லாரி பேக்கர் குறித்து அறிந்தவன். பொதுப் பணிகளில் ஈடுபடுபவன். என்ன விதமான வீட்டில் நான் வசிக்க விரும்புகிறேன் என புறவயமாக நோக்கலாம் என்று தோன்றியது. 

ஒரு விருப்பத்தை புறவயமாக நோக்கினால் அதனை நோக்கிச் செல்ல ஒரு மார்க்கம் அமையக் கூடும். 

விருப்பங்கள் :

1. வீடு அமைந்திருக்கும் மனையின் பரப்பளவு ஒரு ஏக்கர் இருக்க வேண்டும். 

2. அதற்குள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக ஒரு சுற்றுப் பாதை ஏற்படுத்தப்பட வேண்டும். 

3. சாலையை ஒட்டி மனை இருந்தால் மனையின் கடைசியில் வீடு அமைய வேண்டும். 

4. வீட்டிற்கு முன் 15 அடி அகலம் திறந்த வெளியாக இருக்க வேண்டும். 

5. திறந்த வெளிக்கும் சாலைக்கும் இடையே உள்ள பரப்பில் அகலத்திலும் நீளத்திலும் 12 அடி இடைவெளியில் நாவல், நெல்லி, கொய்யா ஆகிய பழமரங்கள் நடப்பட வேண்டும். வீட்டில் மனிதர்களுடன் பறவைகளும் அணில்களும் தேனீக்களும் பூச்சிகளும் இருக்க இந்த ஏற்பாடு. 

6. வீடு மூங்கில், தென்னங்கீற்று ஆகியவற்றால் கட்டப்படும். செங்கல் பயன்படுத்தப் படாது. 

7, வீட்டில் ஒரு அறையில் மட்டுமே மின்சாரம் இருக்கும். அதில் பாதி சூரிய ஒளி மின்சாரமாக இருக்கும். அது அலுவலக அறையாக பயன்படும். 

8. நல்லெண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெயால் ஏற்றப்படும் தீபங்களே மாலையிலும் இரவிலும் ஒளி தர பயன்படுத்தப்படும். 

9. வீட்டினுள் ஒரு முற்றம் இருக்கும்.

10. வீட்டின் வெளியே கிணறும் கிணற்றடியும் இருக்கும்.

11. நண்பர்களும் உறவினர்களும் அதிக அளவில் வீட்டுக்கு விருந்தினராக வர வேண்டும் என விரும்புவதால் இந்திய முறைக் கழிவறைகளும் உலர் கழிவறைகளும் கணிசமாக அமைக்கப்படும். 

12. மின் மோட்டார் பயன்பாடு இருக்காது. 

13. ஒரு சிறு விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். 

14. தோழனாக வாலைக் குழைத்திடும் ஒரு ஜீவன் இருக்குமாயின் அதை விட பெரிய கொடுப்பினை எதுவும் இருக்க இயலாது. விடியப் போவதை அறிவிக்கும் சேவல் ஒன்றும் வளர்க்கலாம். காக்கை குருவிகள் அவையே தேடி வரும். 

பாரதி பராசக்தியிடம் ‘’காணி நிலம் வேண்டும்’’ என்று கேட்டதைப் போல நாமும் கேட்டுப் பார்க்கலாம்.