Monday 2 May 2022

சிறு குறிப்பு

ஹைதராபாத் நண்பர்கள் குழு ‘’காவிரி போற்றுதும்’’ குறித்து ஒரு சிறு குறிப்பை அளிக்குமாறு கேட்டிருந்தது. அவர்களுக்கு அளித்த குறிப்பு கீழே :

***


‘’காவிரி போற்றுதும்’’ நுண் அளவிலான ஒரு சேவை அமைப்பு. முன்னெடுக்கும் பொதுப் பணிகளை ஒரு கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களும் பயன் பெறும் வகையில் ‘’காவிரி போற்றுதும்’’ வடிவமைத்துக் கொள்கிறது. தன்னார்வத்தால் இணைந்த நண்பர்கள் குழுவால் மக்கள் நல செயல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக அவர்களுக்கு உரிய  தேசத்தைக் கேட்டு இளைய யாதவன் தூது செல்கிறான். கௌரவர்கள் தேசத்தை அளிக்க மறுக்கிறார்கள். குறைந்தபட்சமாக ஒரு கிராமத்தையாவது வழங்குமாறு இளைய யாதவன் மன்றாடுகிறான். ஒரு கிராமம் என்பது ஒரு தேசத்துக்கு சமமானது என்பதும் ஒரு கிராமத்தை ஒரு தேசமாகக் கருதலாம் என்பதும் நான்மறைகளின் காலம் தொட்டே நம் நாட்டின் நம்பிக்கை. ’’காவிரி போற்றுதும்’’ இந்த நம்பிக்கையின் பாதையில் பயணிக்கிறது.

விவசாயத்தை நாட்டின் மிக முக்கியமான விஷயமாகவும் விவசாயிகளை நாட்டின் மிக முக்கிய குடிகளாகவும் ‘’காவிரி போற்றுதும்’’ கருதுகிறது. மிக அதிக வருவாய் வாய்ப்புள்ள விவசாயத் தொழிலின் சாத்தியங்களை நோக்கி விவசாயிகள் நகர்வதற்கான வழிகளை உருவாக்கித் தருவதற்கு ‘’காவிரி போற்றுதும்’’ முனைகிறது.

உலக அளவில் தேக்கு மரங்களுக்கான தேவை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறது. நம் நாட்டின் தேவைக்கே தேக்கு மரத்தை வெளிநாடுகளிலிருந்து நாம் இறக்குமதி செய்கிறோம். இவ்வளவு தேவை இருக்கக்கூடிய தேக்கு மரம் தமிழ்நாட்டில் நன்கு வளர வாய்ப்பு உள்ள மரமாகும்.  இதனை கவனம் கொடுத்து வளர்க்கும் விவசாயிகள் நிச்சயம் மிக நல்ல வருவாய்ப் பலன்களைப் பெறுவார்கள். இதற்கான விழிப்புணர்வை உருவாக்குவதை ‘’காவிரி போற்றுதும்’’ தனது முதன்மையான பணியாக நினைக்கிறது.

இந்தியர்கள் விருட்சங்களை தெய்வ ரூபமாகக் காண்பவர்கள். விருட்சங்களுடன் உணர்வுபூர்வமான தொடர்பைக் கொண்டவர்கள். இந்த மேலான தன்மையின் கண்ணியாக கிராம விவசாயிகளை தங்கள் கிராமத்தில் ஆலமரம், அரசமரம், இலுப்பை ம்ரம், வன்னி மரம், புரசை மரம் போன்ற பல்வேறு மரக்கன்றுகளை பொது இடங்களில் நட்டு வளர்த்துக் கொள்ளவும் வெவ்வேறு வழிமுறைகளில் ‘’காவிரி போற்றுதும்’’ உதவுகிறது. இதன் மூலம் கிராமங்களின் பல்லுயிர்ப்பெருக்கம் ( Bio Diversity) பெருகுகிறது என்பது யதார்த்தமான உண்மை.

நம் நாடு நாட்டின் 75வது சுதந்திர ஆண்டினை அமிர்தத் திருவிழாவாகக் கொண்டாடி வருகிறது. அதில் ஒரு கிராமம் முழுவதும் பங்கேற்கும் விதமாக நமது குடியரசு தினத்தன்று காலை ஒரு கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களும் தங்கள் வீடுகளில் ஒரு பூமரக் கன்றை நட்டார்கள். அன்று மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் 7 தீபங்கள் ஏற்றப்பட்டன. இந்த நிகழ்வை ‘’காவிரி போற்றுதும்’’ வடிவமைத்து ஒருங்கிணைத்தது.

புண்ணியத் திருத்தலமான ஒரு கிராமத்தில் உலக நன்மைக்காக ஒரு ராமாயண நவாஹம் செய்வித்து அங்கிருக்கும் கிராம மக்களுக்கு 1250 தென்னம்பிள்ளைகளும் 850 மாங்கன்றுகளும் வழங்குவதற்கான ஒரு முன்னெடுப்பை ‘’காவிரி போற்றுதும்’’ திட்டமிட்டுள்ளது.

சீதை , ராமன், இலக்குவன், குகன், அனுமன், வீடணன், அங்கதன் ஆகிய மாந்தர்களின் பெயர்களும் வாழ்க்கையும் தலைமுறைகளின் நினைவுகளில் பதிய அனாதி காலமாக நம் நாட்டில் இராமாயணக் கதையை ஒன்பது நாட்கள் கூறும் வழக்கம் உள்ளது. அதனை நவாஹம் என்பார்கள். கேரளாவில் நவாஹம் நிறைவடைந்த பின் அது நிகழ்ந்த பகுதியில் தென்னம்பிள்ளைகளை மக்களுக்கு வழங்கி அவரவர் வீட்டில் நடச் செய்வர். நுண்ணுணர்வு கொண்ட தாவரமான தென்னை இராமாயண மாந்தர்களின் மேன்மைகளை குடும்பங்களில் நிலைநிறுத்தும் என்பது நம்பிக்கை.