வலைப்பூ எழுத ஆரம்பித்து சில ஆண்டுகள் ஆகியிருப்பினும் சென்ற ஆண்டில் தான் நகைச்சுவைக் கட்டுரையை எழுதினேன்.
இருப்பினும் சமீப காலமாக சாதாரணமாக எழுதினால் கூட அது நகைச்சுவைக் கட்டுரையாகி விடுகிறதோ என்று தோன்றுகிறது. இந்த உலகத்தோடு ஒப்பிடுகையில் ஒரு மனிதன் என்பவன் அளவில் சிறியவன். அளவில் சிறிய ஒரு மனிதன் மிக மிகப் பெரிய உலகத்தின் கணக்கற்ற சாத்தியங்கள் முன் நிற்கையில் நிகழக்கூடிய நிகழ்வுகளின் நிகழ்தகவுகள் நகைச்சுவை கொண்டவையாகவே அமைய முடியும். சார்லி சாப்ளின் தனது சினிமாக்களில் இவ்வாறான காட்சிகளை அமைத்திருப்பார். அவரது திரைப்படத்தில் ஒரு காட்சி. சாலையில் சாப்ளின் நடந்து சென்று கொண்டிருப்பார். அங்கே உக்கிரமான ஒரு ஊர்வலக் கூட்டம் சில வினாடிகளில் ஆக்ரோஷமாக கடந்து செல்லும். சாப்ளின் வீதி ஓரத்தில் நகர்ந்து அதனைக் கவனிப்பார். கடைசியாக சென்ற ஒருவர் தன் கையில் வைத்திருந்த கொடியை தீவிரமாக கோஷம் போடும் செயலில் நழுவ விட்டு விடுவார். நழுவியது அவருக்குத் தெரியவும் தெரியாது. சாப்ளின் அதைப் பார்த்து தவற விடுகிறாரே என அந்த கொடியை எடுத்துக் கொண்டு உரியவரிடம் ஒப்படைக்க கூட்டத்தின் பின்னால் ஓடுவார். கூட்டம் இவருக்கு முன்னால் பல அடிகள் சென்றிருக்கும். பின்னால் துரத்தி ஓடுவார். கூட்டம் ஒரு நாற்சந்தியைக் கடந்து விடும். வேகமாக ஓடி வரும் சாப்ளின் சாலை மத்தியில் உள்ள குழியைக் கவனிக்காமல் விழுந்து விடுவார். கையில் உள்ள கொடியை தூக்கி தூக்கி காட்டுவார். பின்னால் போலீஸ் வந்து விடும். இவரைப் பார்த்ததும் ஒரு போலீஸ் இவர் கையில் இருக்கும் கொடியைப் பார்ப்பார். ''So, You are the Leader?'' என்பார். சாப்ளின் நடந்ததைக் கூற முயற்சி செய்வார். அவரை ஒரு வார்த்தையும் பேச விடாமல் அள்ளித் தூக்கி சிறைக்குக் கொண்டு சென்று விடுவார்கள். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருப்பது தான் வாழ்வின் சுவாரசியமே.
எனது நண்பர் ஒருவர். உள்ளூர்க்காரர். சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த போது ஒரு விஷயம் குறித்து சொன்னேன். அவர் அதில் உதவுவதாகச் சொன்னார். அந்த விஷயம் குறித்து எழுதி ‘’To whomsoever it may concern'' என்று தலைப்பிட்டு அதனுடன் தொடர்புடைய ஒருவரின் அல்லது பலரின் கையெழுத்து வாங்கித் தருகிறேன். அதை முகாந்திரமாகக் கொண்டு நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் உதவி கேட்கலாம் என்றேன். அவர் அப்படியா என்று கேட்டுக் கொண்டார். ஆம் என்றும் சொல்லவில்லை ; இல்லை என்றும் சொல்லவில்லை. சில நாட்கள் சென்றன. நண்பர் அழைத்தார். அதில் அந்த ஊரின் மக்கள் பிரதிநிதி கையொப்பமிட்டால் சிறப்பாக இருக்கும் என்றார். நான் அதனை ஏற்பாடு செய்து கொடுத்தேன். ஒரு பணி என்றால் குறிப்பிட்ட காலவரையறையில் அதனைச் செய்ய முழு முயற்சி செய்வேன் ; அது என இயல்பு. நண்பர் கோரியதை செய்து கொடுத்தேன். பின்னர் சில நாட்கள் கழித்து அனுப்புநர் பெறுநர் வடிவில் வேண்டும் என்றார். அதுவும் செய்யப்பட்டது. பெறுநர் மாவட்ட ஆட்சியர் என்றார். உங்களுக்கு கலெக்டர் பரிச்சயமா என்று கேட்டேன். இல்லை என்றார். உங்கள் நண்பர்கள் எவருக்கும் ஆட்சியர் அலுவலகத்தில் தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்றேன். அதுவும் இல்லை. செக்கரட்டரியேட்டில் வேண்டியவர்கள் உள்ளார்களா என்ற கேள்விக்கும் இல்லை என்பதே பதில். நான் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.
வேறு பணிகளில் ஈடுபட்டிருந்ததால் இந்த பணி சற்று பின்னால் சென்று விட்டது. ஒரு வாரம் கழித்து மாவட்ட ஆட்சியரிடம் இந்த மனுவைக் கொடுக்க வேண்டும் என்றார். அவரை அழைத்துக் கொண்டு சென்றேன். அரசு அலுவலகங்களில் இந்த மனு கொடுத்தல் அனாதி காலமாக தொடரும் நடைமுறை. மனுவை ஐந்து ரூபாய் அஞ்சல் கவரில் வைத்து அனுப்பினாலாவது அலுவலகத்தின் தபால் பிரிவில் அந்த தபால் பதிவாகும். நேரில் கொடுக்கப்படும் மனு எந்த கோப்பில் உறங்கப் போகிறது என்பது கடவுளுக்கே வெளிச்சம். எந்த விஷயத்தைக் குறித்தும் எதிர்மறையாக பேசுவது என் பழக்கத்தில் இல்லை என்பதால் மௌனம் காத்தேன். அலுவலகத்தில் மனுவைப் பார்த்து விட்டு மக்கள் பிரதிநிதி மனுவை நீங்கள் ஏன் கொண்டு வந்தீர்கள் என்று கேட்டார்கள். நண்பர் என்னைப் பார்த்தார். அந்த மனுவுக்கு கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கக் கூடும் என நண்பர் பிரியப்பட்டார் என்றேன். நண்பர் அந்த மனுவின் நகலையும் கையில் வைத்திருந்தார். அதில் மனுவைப் பெற்றுக் கொண்டேன் என அதிகாரி கையொப்பமிட்டுத் தர வேண்டும் என்று கேட்டார். அவ்வாறு வேண்டும் என்றால் மனுவை பதிவுத் தபாலில் அனுப்பி ஒப்புகைச் சீட்டை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினேன். அந்த அதிகாரியும் அவ்வாறே கூறினார். நண்பர் இல்லை மனுவில் தான் கையெழுத்து வேண்டும் என்றார். அதிகாரி எங்களை அங்கிருந்து அனுப்ப மனுநீதி நாள் அன்று வந்து மனு கொடுங்கள். ஒப்புகை கொடுப்பார்கள் என்று சொன்னார். அன்று செவ்வாய்க்கிழமை. மனு நீதி நாள் திங்கள்கிழமை. ஏழு நாள் கழித்து வருவோம் என்று புறப்பட்டோம். அடுத்த திங்கள் அன்று காலையிலிருந்து எனக்கு ஏகப்பட்ட வேலை. சித்திரை வெயிலில் உலவிக் கொண்டிருந்தேன். அன்று மாலை 5.30 மணிக்கு எனக்கு மனு ஞாபகம் வந்தது. நண்பருக்கு ஃபோன் செய்தேன். அவருக்கு மதியம் 2 மணிக்கு ஞாபகம் வந்திருக்கிறது. எனினும் ஆஃபிஸ் இருக்குமோ இருக்காதோ என்ற தயக்கத்தில் அழைக்காமல் இருந்து விட்டார். அந்த வாரம் கடந்து விட்டு அடுத்த வாரம் வந்து விட்டது. திங்களன்று அங்கே சென்றோம். நண்பர் மனுவில் மனுவைப் பெற்றுக் கொண்டோம் என எழுதி கையெழுத்து கேட்டார். அப்படி தர முடியாது என்றனர். மனுவினை நகல் எடுத்து அதன் பின்பக்கம் பதிவு செய்த ஒப்புகை விபரம் தருவதாக சொன்னார்கள்.
நான் அங்கேயிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டேன். நண்பரை அவராகவே சென்று தருமாறு சொன்னேன். ஆட்சியரும் மாவட்ட வருவாய் அதிகாரியும் அமர்ந்திருந்தனர். இவர் சென்ற நேரம் ஒரு பெண்மணி, மாவட்ட ஆட்சியரிடம் தீவிரமாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். நண்பர் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுத்தார். இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ள மக்கள் பிரதிநிதி எங்கே என்று கேட்டார். நண்பர் அவரின் பிரதிநிதியாகத் தான் வந்திருப்பதாகச் சொன்னார். தூரத்தில் இருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். உரிய அதிகாரியிடம் மனு சில நிமிடங்களில் சென்று சேர்ந்தது. அந்த அதிகாரி நான் முதலில் கேட்ட கேள்விகளை நண்பரிடம் திரும்பக் கேட்டார். அப்போதைக்கு இப்போதே என்ற கணக்கில் இவற்றை முன்னரே நாம் சொன்னோமே என்று எண்ணிக் கொண்டேன்.