Sunday 15 May 2022

புத்தம்

உலகில் ஒவ்வொரு மனிதனுமே சில கணங்களேனும் அகத்தில் புத்தரை உணர்கிறான். பிரபஞ்சப் பெருவெளியுடன் இயல்பாக இணைந்திருக்கும் நிலையே புத்த நிலை. ஒவ்வொரு மனிதனுக்கும் அந்நிலை அடையச் சாத்தியமானது என்பதை புத்தர் உணர்ந்த கணம் அவர் மக்களை நோக்கிச் சென்றார். புத்த நிலையை அடையும் எளிய மார்க்கமாக கருணையை மக்களிடம் முன்வைத்தார். உயிர்கள் அனைத்தும் அன்பையே எதிர்நோக்குகின்றன. அளிக்க அளிக்க பெருகும் செல்வம் அருட்செல்வம். யோக மரபில் புத்தருடைய இடம் மிகவும் முக்கியமானது. தியானத்தில் புத்தரின் வழிமுறைகள் புதிய பாய்ச்சலை உண்டாக்கின.  சுவாமி விவேகானந்தர் தனது சிகாகோ சொற்பொழிவுகளில் ஒரு முழு அமர்வு புத்தர் குறித்து பேசியுள்ளார். பாரதி நம் நாட்டை ‘’புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு’’ என்கிறார். இன்று உலகெங்கும் புத்தர் ஞானோதயம் பெற்ற தினம் கொண்டாடப்படுகிறது.