Sunday 15 May 2022

போதி மர நிழலில்

வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு சிறு மைதானம் இருக்கிறது.  அதன் ஓரத்தில் ஓர் அரசமரம் உள்ளது. சரியாகச் சொன்னால் அரசமரமும் வேப்பமரமும் பின்னிப்  பிணைந்து சேர்ந்து வளர்ந்திருக்கிறது. இவ்வாறு அரசும் வேம்பும் சேர்ந்திருப்பதை நம் மரபில் அம்மையப்பனாகக் காண்பார்கள். அரசு ஆண் தன்மை கொண்டது. வேம்பு பெண் தன்மை மிக்கது. இன்று புத்தருக்குரிய தினம் என்பதால் அரச மரத்தின் அடியில் கொஞ்ச நேரமாகினும் அமர வேண்டும் என்று விரும்பினேன். மதியப் பொழுதில் 75 நிமிடத்துக்கு மேல் அரச நிழலில் அமர்ந்திருந்தேன். உதிர்ந்திருந்த இலைகள் உலர்ந்து சிறு மெத்தை போல் இருந்தன. ஆங்காங்கே எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. மரத்தின் வேரில் வசதியாக உட்கார்ந்து கொண்டேன். கையில் தேவதேவன் கவிதைகள் முழுத் தொகுப்பு புத்தகம். மரத்தில் தலை சாய்த்து கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். வாசிப்பது - வாசித்த வரிகளை மீண்டும் மனதில் ஓட்டிப் பார்ப்பது என சென்று கொண்டிருந்தது. மேகத்துடன் கூடிய வானம் மரத்தின் மேல் விரிந்து பரந்திருந்தது. குட்டி நாய்கள் இரண்டு அன்னை நாயை நீங்காமல் உடன் சென்று கொண்டிருந்தன. குயில் ஒன்று ஓயாமல் கூவிக் கொண்டிருந்தது. கட்டெறும்புகள் மரத்தின் மேல் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தன. எட்டு வயது சிறுவன் ஒருவன் சைக்கிளில் வந்து மைதானத்தை ஒரு சுற்று சுற்றினான். இந்த உலகில் எனக்கு என்னென்ன உண்டோ அத்தனையும் அந்த குட்டி நாய்களுக்கும் எறும்புக்கும் பறவைக்கும் உண்டு என்று ஒரு கணம் தோன்றியது. கல்லினுள் தேரைக்கும் தம்மம் உணவூட்டும் என்கிறது பௌத்தம்.