இரண்டு நாட்களுக்கு முன்னால் வெளியூரில் இருக்கும் எனது நண்பரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவரிடம் ஒரு விஷயம் குறித்து ஆலோசனை பெற வேண்டியிருந்தது. அப்போது அவரது மகனுடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது. சின்னஞ் சிறுவனாக இருந்த பையன். இன்று தேசிய சட்டப் பள்ளியில் பயின்று ஒரு வழக்கறிஞராகி இருக்கிறான். இந்திய அரசியல் சட்டத்தின் ஆத்மாவை போற்றி வணங்கும் மனநிலை அவனுக்கு இருக்கிறது. ஒரு வழக்கறிஞரின் ஆளுமை என்பதற்கும் நீதிமன்றத்தின் முன் அவர் முன்வைக்கும் தரப்புக்கும் கண்ணுக்குத் தெரியாத - மிக மெல்லிய - தொடர்பு இருக்கிறது. ஒரு சட்டம் என்ன சொல்கிறது என்பதை முழுமையாக அறியவும் அந்த சட்டத்தின் சமூகவியல் பார்வை என்ன என்பதைப் புரிந்து கொள்ளவும் ஒரு வழக்கறிஞர் எப்போதும் ஒரு மாணவனாக சட்டத்தின் முன் இருக்க வேண்டும். நல்ல மொழியறிவு அவனுக்கு இருக்கிறது. தீவிரமான சமூகப் பிரக்ஞையுடன் இருக்கிறான். அவனது அணுகுமுறை மிகவும் நம்பிக்கையளிக்கும் விதத்தில் இருக்கிறது. நம்பிக்கை அளிப்பவர்கள் வாழ்க்கையே அளிக்கிறார்கள்.