Wednesday 11 May 2022

ஆழித் துளி

எவ்வளவு வேலைகள் செய்தாலும் ஏதேனும் சில பணிகள் மேலும் செயல் கோரி நிலுவையில் இருந்தவாறே உள்ளன. பொதுப்பணி என்பது ஒருவரின் தனிப்பணி போன்றதல்ல. அதில் பல்வேறு கூறுகள் இணைந்திருக்கின்றன. சமூகத்தின் தன்மையும் ஏற்புத்தன்மையும் அதில் மிகப் பெரும்பான்மையான மிக முக்கியமான மிக அடிப்படையான அம்சங்கள் ஆகின்றன. நுண் செயல்பாடுகள் என்பதாகத்தான் என்னுடைய செயல்களைத் திட்டமிட்டேன். அளவில் சிறியது என்பதால் திட்டமிடுதலிலும்  செயலாக்கத்திலும் முழுக் கட்டுப்பாடு இருக்கும் என்று எண்ணியிருந்தேன். நுண் செயல்பாடுகள் என்றாலும் அதன் விளைவுகள் அதிசயிக்கத் தக்க விதத்தில் உள்ளன.  செயல் நிகழ்ந்த களங்களில் மக்கள் காட்டும் அன்பும் அக்கறையும் பிரியமும் ஆழியென பேருரு கொண்டு முன்நிற்கின்றன. மக்களுக்கு நம்பிக்கைகள் தேவைப்படுகின்றன. சுவாமி விவேகானந்தர் நம்பிக்கை - நம்மிடத்தில் நம்பிக்கை , நம்பிக்கை - கடவுளிடத்தில் நம்பிக்கை இதுதான் இன்றைய உலகின் தேவை என்பார். மக்கள் சிறிய நம்பிக்கையை பெற்றால் கூட அற்புதமான அளவில் செயலாற்றுகிறார்கள். 

சில நாட்களுக்கு முன்னால், ஒரு கிராமத்துக்கு சென்றிருந்தேன். அங்கே உள்ள பெருமாள் கோவிலில் சாமி கும்பிடச் சென்றேன். அங்கே சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. ஐந்து வயது ஆறு வயது உள்ள குழந்தைகள். அந்த குழந்தைகள் என்னைப் பார்த்தால் எப்போதும் உற்சாகமாகி விடும். என் முன் வந்து அந்த குழந்தைகள் ஏதாவது பேசும். அவ்வாறு அன்றும் குழந்தைகள் என்னிடம் பேசின. ஒரு சிறு குழந்தை என்னிடம் ஒரு சிறு மாங்காயை எடுத்துக் கொண்டு வந்து தந்தது. இதை உங்களுக்காகக் கொண்டு வந்தேன் என்று சொன்னது. நான் அந்த மாங்காயை கையில் வைத்துக் கொண்டேன். 

அந்த குழந்தையின் அன்பைப் பெற நான் தகுதியுடையவனா என்பது எனக்குத் தெரியவில்லை. மக்களின் அன்பு என்னும் ஆழி முன்நிற்கும் ஆழித்துளி என அப்போது உணர்ந்தேன். அன்பே சிவம் என்கிறது நம் மரபு.