Sunday 10 July 2022

சி.பி.கி.ரா.ம்.ஸ்

அரசில் முக்கியமான அங்கம் பொதுமக்கள். அரசின் துறைகளின் வழியே அரச அமைப்பைத் தொடர்பு கொள்ளும் போது , அரச அமைப்பில் தங்களுக்கு உரிமையுள்ள சேவைகளைப் பெறும் போது ஏதேனும் இடர்ப்பாடுகள் ஏற்பட்டால் - ஏதேனும் குறைகள் இருந்தால் அதனைத் தீர்த்து வைக்க மத்திய அரசில் பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைச்சகம் என அமைச்சகம் உள்ளது. மத்திய அரசின் பணியாளர் நலத் துறையின் கீழ் வரக்கூடியது இந்த அமைச்சகம். 2014ம் ஆண்டு இந்த அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு இணையதளம் சி.பி.கி.ரா.ம்.ஸ் இணையதளம். (CPGRAMS) (Centralised Public Grievance Redress and Monitoring System) . 

இது பொது விஷயங்கள் குறித்து மக்களின் கருத்துக்களை ஆலோசனைகளைக் கேட்கும் தளம் அல்ல என்பதால் மக்கள் அரசுத்துறை குறித்த தங்கள் கருத்துக்களையோ அல்லது ஆலோசனைகளையோ அல்லது அபிப்ராயங்களையோ இதில் தெரிவிக்க முடியாது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டால் அவை ‘’ஆலோசனைகள்’’ என வகுக்கப்பட்டு நிராகரிக்கப்படும். 

அரச அமைப்பில் குறிப்பாக அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு தங்கள் பணிகள் எதுவும் நிறைவேறாமல் இருந்தாலோ அதிகாரிகள் மீது புகார்கள் இருந்தாலோ அவற்றைத் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிப்பதற்காக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. pgportal(dot)gov(dot)in என்பது அதன் முகவரி. அதில் சென்று பொதுமக்கள் தங்கள் பெயர் , தொடர்பு முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை அளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் எந்த துறையில் எந்த அலுவலகம் குறித்து புகார் என பதிவு செய்ய வேண்டும். புகார் தொடர்பான காகிதங்களையும் ஆவணங்களையும் அந்த தளத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். 

என்ன குறை அல்லது புகார் என்பதை பதிவிட வேண்டும். பொதுமக்கள் புகார் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என அரசுத்துறைகளுக்கு உத்தரவு உள்ளது. 

இந்த தளத்தின் தலைமை செயல் நிலையம் புதுதில்லியில் உள்ளது. புகார்கள் அங்கே வகைப்பாடு செய்யப்படும். மத்திய அரசின் துறைகள் என்றால் சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களுக்கும் மாநில அரசுத் துறைகள் என்றால் மாநிலங்களின் முதலமைச்சர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்படும். பின்னர் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளுக்கும் மேலதிகாரிகளுக்கும் அந்த புகார் செல்லும். அவர்கள் ஒவ்வொருவரின் கணினித் திரையிலும் அந்த புகாரும் அதன் தீர்வு எந்த நிலையில் உள்ளது என்பதும் இருக்கும். ஒரு விஷயத்தை ஒருவர் மட்டுமே அறிந்து ஒருவர் மட்டுமே முடிவெடுப்பதை விட அந்த விஷயம் பத்து மேலதிகாரிகளின் கவனத்தில் உள்ளது என்னும் போது சற்று விரைவாக நடக்க ஒரு வாய்ப்பு உண்டு. 

உதாரணத்துக்கு நீங்கள் பட்டா மாறுதல் செய்ய கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் தருகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் விண்ணப்பித்து இரண்டு மாதங்கள் ஆகியும் உங்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்படவில்லை என்றால் நீங்கள் இந்த விஷயத்தை சி.பி.கி.ரா.ம்.ஸ் தளத்தில் பதிவிடலாம். அந்த புகார் சி.பி.கி.ரா.ம்.ஸ் தளத்தில் தில்லியில் பதிவாகும். பின்னர் சென்னை முதலமைச்சர் அலுவலகத்திற்கு வரும். அங்கிருந்து மாவட்ட ஆட்சியரின் கணினிக்கு வரும். பின்னர் மாவட்ட அதிகாரிகளின் கணினிக்குச் செல்லும். இவ்வாறு இந்த புகார் எங்கெங்கு அனுப்பப்படுகிறது என்பதை புகார்தாரர் அறிய முடியும். உங்கள் பட்டா மாற்ற விண்ணப்பம் வருவாய்த்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் அலுவலகம், தில்லி சி.பி.கி.ரா.ம்ஸ் அலுவலகம் என அனைவருடைய கணிணிகளிலும் உயிர்ப்புடன் இருக்கும். நீங்கள் அளித்த புகாரின் விளைவாக மேலதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உங்களுக்கு பட்டா மாறுதல் கிடைத்து விட்டது என்றால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு விபரம் தெரிவிக்கப்படும். புகார் தீர்க்கப்பட்ட விதம் குறித்து புகார் அளித்தவர் தங்கள் மதிப்பீட்டை அளிக்க வேண்டும்.  45 நாட்களுக்குள் தீர்வு காணப்படா விட்டால், அதிகாரிகள் , மாவட்ட ஆட்சியர் , முதலமைச்சர் அலுவலகம் அத்தனையும் சி.பி.கி.ரா.ம்.ஸ் அலுவலகத்துக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவை. புகார் தீர்க்கப்பட்ட விதம் திருப்தியில்லை எனில் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு உள்ளது. 

பொதுமக்களுக்கும் அரசாங்கத்துக்கும் ஒரு இணைப்பை உருவாக்கும் பணியை இந்த இணையதளம் சிறப்பாக செய்கிறது. மாநில அரசுத்துறைகளில் - அரசுத்துறை அலுவலகங்களில் பொதுமக்கள் எவ்விதமான இடையூறுகளை அசௌகர்யங்களை எதிர்கொள்கின்றனர் என்பதை மத்திய அரசும் அறிய முடியும். 

புகார்கள் மேலிருந்து கீழ் நோக்கி வருவதால் புகார் விபரத்தை முதலில் மேலதிகார்கள் அறிவார்கள். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர் அறிவார். எனவே புகார் விபரத்தை மறைக்கவோ மாற்றிச் சொல்லவோ முடியாது. 

அரசு அலுவலகங்களுக்கு திரும்ப திரும்ப செல்வதும் அரசு அதிகாரிகளின் மெத்தனத்தைத் திரும்ப திரும்ப பார்ப்பதும் அலுப்பூட்டும் அனுபவம். இந்த முறையின் மூலம் அதனை முற்றாகத் தவிர்க்கலாம்.