இந்தியாவின் பாரம்பர்யமான கல்வி மிக இளம் வயதிலேயே துவங்குகிறது. மொழியும் கணிதமும் மனனம் செய்தல் என்ற முறையிலேயே மாணவனின் அகத்தில் நிறையும் வண்ணம் அந்த முறைமை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இளம் குழந்தையின் அகம் விருப்பு வெறுப்புகள் இல்லாதது. பயிற்சிக்கு திறந்த மனத்துடன் இருப்பது. செம்மை செய்யப்பட்ட நிலத்தில் விதையிடுதலைப் போல குழந்தையின் அகத்திற்கு கல்வி அளிக்கப்பட்டிருக்கிறது.
விவசாயக் கல்வியும் தொழிற்கல்வியும் கூட அவ்விதமே மாணவர்களுக்கு கிடைத்திருக்கிறது. தந்தையும் பாட்டனாரும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களும் ஆசிரியர்களாக இருந்து கல்வி அளித்திருக்கின்றனர். அந்த மரபு இப்போதும் தொடர்கிறது. தந்தையை தனது ஆசானாகவும் கொள்ளும் பேறு இப்போதும் பலருக்குக் கிடைக்கிறது.
’’உபநிஷத்’’ என்ற சொல்லுக்கு ஆசிரியரின் அருகிருத்தல் என்று பொருள். இந்திய மரபில் ஆசிரியர் மாணவனை தன் உடனிருக்க அனுமதிக்கிறார். அவ்வாறு ஆசிரியர் ஒருவர் தன்னை அனுமதித்தலையே மாணவன் குருவருள் எனக் கொண்டு பெருமதிப்பு கொள்கிறான். மாணவனின் அகநிலை வளர்ச்சிக்குக் குருவின் அருள் காரணமாக அமைவதால் ஆசிரியனை இறைவடிவமாகக் கொள்கிறது இந்திய மரபு.
ஆலமர்க் கடவுளான தென்திசை முதல்வன் உலக உயிர்களின் அறியாமையைப் போற்றும் ஆசானாக விளங்குகிறான். அடித்தட்டு மக்களின் தலைவனான இளைய யாதவன் அர்ஜூனனின் ஆசிரியனாக அமைந்து கீதையை உரைத்தான். தன் அகக் கருணையின் வெள்ளத்தால் உலகம் முழுமையும் அணைத்துக் கொண்ட பகவான் புத்தரும் மக்கள் துயர் தீர மக்களிடம் ஒரு ஆசிரியனாக இருந்து பேசியவரே.
மேலான மானுட வாழ்வை நோக்கி மானுடர்களை இட்டுச் சென்ற - இட்டுச் செல்லும் அனைவரும் ஆசிரியர்களே. அந்த ஆசிரியர்கள் மானுடத்தால் என்றும் வணங்கப்படுவார்கள்.