‘’காவிரி போற்றுதும்’’ தீவிர ஆதரவாளர் ஒருவர் அமைப்பாளருக்கு ஃபோன் செய்தார். ‘’பிரபு ! பையன் ஒரு பைக் புக் செய்யணும்னு சொல்றான். நீங்க கொஞ்சம் அவன் கூட போய்ட்டு வந்திருங்க.’’. அமைப்பாளரின் ஊர் குறுக்கு நெடுக்காக அதிகபட்சம் நான்கு கிலோமீட்டர் நீளம் கொண்டது. அதில் கடைவீதிகள் இன்னும் நெருக்கமானவை. ஊருக்குள் தானே என்ற எண்ணத்துடன் அமைப்பாளர் சென்றார். ஆதரவாளரும் அவரது மகனும் அவர்கள் வீட்டில் இருந்தனர். அமைப்பாளர் என்ன பைக் வாங்க வேண்டும் என்று கேட்டார். ஹீரோ – வா? ( அமைப்பாளருக்கு இப்போதும் பைக் என்றால் ஹீரோ ஹோண்டா தான். எனவே அங்கிருந்தே அவர் ஆரம்பிப்பார்) பஜாஜ்-ஆ ? டிவிஎஸ் – ஆ? (அமைப்பாளர் இந்திய நிறுவனங்கள் மேல் ஆர்வம் கொண்டவர் என்பதால் வேறு பெயர்களைக் கூறாமல் அத்துடன் நிறுத்திக் கொண்டார்.) ஆதரவாளரின் மகன் ஒரு பெயரைச் சொன்னான். அந்த பெயரை அமைப்பாளர் அப்போதுதான் முதல் முறையாகக் கேட்கிறார். ‘’என்ன விலை?’’ என்றார். ரூபாய் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் என்ற பதில் சொல்லப்பட்டது. அமைப்பாளருக்கு அதிர்ச்சி. ஆதரவாளர் ‘’பிரபு ! நீங்களும் இவனும் கும்பகோணம் போய் இந்த பைக்கை புக் பண்ணிடுங்க. பைக் பைக் னு ஒரே தொந்தரவு பண்றான். புக் பண்ண இப்போ பத்தாயிரம் கொடுத்தா போதுமாம். பைக் வர மூணு மாசம் ஆகுமாம். இப்போதைக்கு இந்த பிரச்சனை தீரட்டும்னு பாக்கறேன்.’’ ஆதரவாளரின் பைக்கை அவரது மகன் ஓட்ட அமைப்பாளர் அவருடன் கும்பகோணம் புறப்பட்டார்.
ஆதரவாளரின் மகன் பிறந்தது
வளர்ந்தது எல்லாம் மயிலாடுதுறையில் தான். கிட்டத்தட்ட இருபத்து இரண்டு ஆண்டுகள். ஆனால்
வீட்டிலிருந்து கிளம்பியதுமே கும்பகோணம் எப்படி செல்ல வேண்டும் என வழி கேட்டது அமைப்பாளருக்குத்
தூக்கி வாரிப் போட்டதைப் போல இருந்தது. ‘’ஏன் தம்பி ! இத்தனை வருஷத்துல ஒரு தடவை கூட
நீ கும்பகோணம் போனதே இல்லையா?’’ அமைப்பாளர் சோகமாகக் கேட்டார். ’’காலேஜ் தேர்ட் இயர்
படிக்கும் போது இந்த பைக் புக் பண்ண அப்பாவை அழச்சுட்டு ஒரே ஒரு தடவை போயிருக்கன்’’
ஆதரவாளரின் மகன் ஆர்வமாக பதில் சொன்னான்.
வழியைக் காட்டி விட்டு அமைப்பாளர்
வண்டி என்ஜினின் தாள கதியுடன் தனது எண்ணங்களை இணைத்துக் கொண்டு யோசித்த வண்ணம் வந்தார்.
இந்திய சமூகம் – தமிழ்ச் சமூகம் பெருமளவில் வறுமையை வென்றிருக்கிறது. உணவுப் பஞ்சம்
என்பது கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் இல்லை. எனவே வசதி வாய்ப்புகள்
எளிதில் கிடைக்கப்பெறும் ஒரு தலைமுறை உருவாகி உள்ளது. எனினும் அந்த தலைமுறையின் பெற்றோர்கள்
அவர்களுக்கு போதுமான அளவு சமூகப் பரிச்சயத்தை உருவாக்குகிறார்களா என்பது ஆழ்ந்து பரிசீலிக்க
வேண்டிய ஒன்றாக உள்ளது. சமூகம் குறித்த சக மனிதன் குறித்த அக்கறை என்பது ஒரு சமூகத்தின்
அற உணர்வுக்கான உரைகல். அமைப்பாளர் யோசித்த வண்ணம் வந்தார்.
ஊரிலிருந்து சில கிலோ மீட்டர்
தொலைவில் இருந்த ஒரு பேரூராட்சியில் மெயின் ரோட்டில் ஒரு வேப்ப மரமும் ஒரு புங்கன்
மரமும் வெட்டி சாய்க்கப்பட்டு அந்த மரங்கள் மரத்துண்டுகளாக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
ஏழு பேர் மெஷின்களின் உதவியுடன் அதனைச் செய்து கொண்டிருந்தனர். இந்த தொழிலாளர்களின்
ஒருநாள் ஊதியம் எழுநூறு ரூபாய். அவ்வாறெனில் அந்த மரங்களை வெட்ட ஐயாயிரம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது.
நிச்சயமாக மரங்களின் மதிப்பு அவற்றுக்கு மேல். எட்டாயிரம் ரூபாய் இருக்கக் கூடும்.
அனுமதியின்றி வெட்டப்படும்
மரங்களுக்கு மரத்தின் மதிப்பில் நாற்பது மடங்கு
வரை அபராதம் விதிக்கலாம். அவ்வாறெனில் அந்த மரங்களின் மதிப்பை ரூபாய் மூன்று இலட்சத்து இருபதாயிரம் என்றும்
கருத முடியும்.
’’தம்பி ! ரிடர்ன் ஆகும்
போது இந்த மரங்களை ஃபோட்டோ எடுக்கணும். எடுத்து என்னோட மெயில் ஐடி க்கு ஃபார்வர்டு
பண்ணு. இந்த விஷயத்தை சி.பி.கி.ரா.ம்.ஸ் ல புகாரா கொடுக்கணும்’’ அமைப்பாளரின் மகன்
வாகனத்தில் உச்ச பட்ச வேகத்தில் இருந்தான்.
அனாதி காலமாக மயிலாடுதுறை
– கும்பகோணம் சாலை காவிரியின் கரையிலேயே செல்லும் ஒரே பாதை. எனினும் தம்பி ஒவ்வொரு
திருப்பத்துக்கும் வழி கேட்டான். ‘’தம்பி ! வலது பக்கம் இடது பக்கம் திரும்பனும்னா
நான் சொல்லுவன். அது வரைக்கும் நேராவே போ’’
கும்பகோணத்தில் அவன் குறிப்பிட்ட
வண்டி ஷோரூம் சென்று சேர்ந்தோம். அந்த ஷோரூம் எண்ணூறு சதுர அடி இருக்கும். ஒரே ஒரு
வண்டி இருந்தது. ஒரே விதமான உடையணிந்த இரண்டு ஸ்டாஃப் இருந்தனர். எங்களை அமர வைத்து
விட்டு கொட்டேஷன் கொண்டு வந்து கொடுத்தனர். அந்த வண்டியின் விலை ரூபாய் மூன்று லட்சத்து
ஐம்பதாயிரம். அமைப்பாளர் மெல்ல சொன்னார். ‘’ தம்பி ! இந்த வண்டி வாங்க நாலு லட்சம்
நாலே கால் லட்சத்தில் உனக்கு ஒரு புது கார் வாங்கித் தரச் சொல்றேன் அப்பாகிட்ட.’’
தம்பி சொன்னான். ‘’ஒரு எஸ்.யூ.வி
அடுத்த வருஷம் வாங்கணும்னு அப்பாகிட்ட சொல்லியிருக்கன்’’. அமைப்பாளர் ஒன்றும் பேசவில்லை.
ரூபாய் பத்தாயிரத்தை டிஜிட்டல் பேமெண்ட்டாக செய்தான்.
அந்த சாலையில் பாடகச்சேரி
ராமலிங்கம் சுவாமி ஆலயம் இருந்ததை அமைப்பாளர் கவனித்திருந்தார். சில நிமிடங்கள் அங்கு
சென்று விட்டு செல்வோம் என்று கூறினார். இருவரும் சென்றனர்.
‘’பைரவ சித்தர்’’ எனப்படும்
பாடகச்சேரி ராமலிங்கம் சுவாமிகள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர். தஞ்சாவூரில்
இருக்கும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலைக் கட்டியவர். கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில்
கோபுரத்தைக் கட்டியவர். பைரவ உபாசனை கொண்டவர். கடுமையான யோக சாதனை உடையவர். அவருடைய
ஆலயத்தில் சில நிமிடங்கள் வழிபட்டு விட்டு இருவரும் புறப்பட்டனர்.
திரும்பி வரும் வழியில் வெட்டப்பட்ட
மரங்களின் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். ஊருக்கு வந்ததும் ஆர்.டி.ஓ அலுவலத்துக்கு
செல்லச் சொன்னார். ஆர். டி. ஓ வாகனம் இல்லை. அவரது தனி உதவியாளர் இருக்கையில் இருந்தார்.
என்னைப் பார்த்ததுமே எங்கோ மரம் வெட்டப்பட்டிருக்கிறது என்பதை அவர் யூகித்துக் கொண்டார்.
‘’நமஸ்காரம் சார். நாம அடிக்கடி
இப்போ சந்திக்கிற சூழ்நிலை வருது. ரொம்ப சிரமம் கொடுக்கறனோ.’’
‘’இல்ல இல்ல அப்படியெல்லாம்
இல்லை. என்ன விஷயம் சொல்லுங்க’’
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில்
ஒரு வசனம் வரும். ‘’மண்ணுக்குள்ளே தான் தங்கமும் வைரமும் புதைந்து கிடக்கிறது’’ என.
அவ்வாறே சர்க்காரிலும் என அமைப்பாளர் எண்ணிக் கொண்டார்.
‘’நான் ஸ்மார்ட்ஃபோன் யூஸ்
பண்றது இல்ல. இது தம்பி எடுத்த ஃபோட்டோஸ். இன்னைக்கு தான் வெட்டியிருக்காங்க. ஏழு லேபரை
எம்ப்ளாய் பண்ணியிருக்காங்க. ஆயிரம் பேர் போற வர்ர பாதை. ஏன் மரம் வெட்டறாங்கங்கறது
நம்ம கேள்வி இல்லை. பர்மிஷன் வாங்கிட்டு அத செய்யலாம்ல. ஒவ்வொரு தடவையும் நான் சம்பவத்தை
சொல்லி பர்மிஷன் வாங்கினாங்களான்னு கேக்கறதும் நீங்க இல்லன்னு சொல்றதும் ரொடீன் ஆயிடுச்சு.’’
அதிகாரி சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு
ஃபோன் செய்தார்.
ஊரைச் சொல்லி ‘’ அங்க மெயின்
ரோட்டுல ஒரு வேப்ப மரமும் புங்கன் மரமும் வெட்டியிருக்காமே?’’
‘’பட்டுப் போன மரமா இருக்கும்
சார்’’
‘’நான் ஃபோட்டோஸ் பாத்துட்டன்.
இலை பச்சையா இருக்கு. அதனால அது பட்ட மரம் இல்லை.’’
‘’யாரு சார் புகார் கொடுத்தது?’’
‘’யாரோ ஒருத்தர். ஒரு ஏ ஒரு
பி ஒரு சி இல்லன்னா ஒரு எக்ஸ் ஒரு ஒய் ஒரு இஸட். ஒரு வழிப்போக்கர்.’’
‘’கொஞ்சம் கன்வின்ஸ் பண்ணி
அனுப்பிட முடியுமா?’’
‘’அவர் கன்வின்ஸ் ஆக மாட்டார்.
ஃபைட் பண்ணுவார்’’
‘’---------------‘’
‘’அந்த ஸ்பாட்டுக்குப் போய்
யார் வெட்டுனது என்னன்னு பாத்து வாக்குமூலம் வாங்குங்க’’
ஃபோன் பேசி முடித்து விட்டு
அமைப்பாளரிடம் ‘’நான் ஆக்ஷன் எடுக்கச் சொல்லி சொல்லியிருக்கன் சார்’’ என்றார்.
‘’உங்க நேரத்தை எடுத்துக்கறது
எனக்கு உண்மையிலயே வருத்தம் கொடுக்குது. மரங்கள் விஷயத்துல தப்பு நடக்காம பாத்துக்கங்க.
இது என்னோட ரெக்வெஸ்ட்.’’