Monday 15 August 2022

ஆடிப் பட்டம் - அமிர்த உற்சவம்

’’ஆடிப் பட்ட்ம் தேடி விதை’’ என்பது தமிழ்ப் பழமொழி. காவிரி பெருக்கெடுத்து ஊரின் வயல்களை நீர்நிலைகளை நிறைக்கும் மாதம் ஆடி. கோடைக்கும் மழைக்காலத்துக்கும் இடையே உள்ள காலகட்டம் ஆதலால் தானிய விதைப்புக்கு மிகவும் ஏற்ற மிகப் பொருத்தமான மாதம் ஆடி.  

இந்திய சுதந்திரத்தின் அமிர்த உற்சவத்தைக் கொண்டாடும் விதமாக இன்று தடுப்பூசிக்காக பணி புரிந்த கிராமத்தின் ஒவ்வொரு வீடுகளுக்கும் நாட்டுக் காய்கறி விதைகளை வழங்கினேன். பூசணிக்காய், பீர்க்கன்காய் , சுரைக்காய், பரங்கிக்காய், வெள்ளரிக்காய் மற்றும் பாகற்காய் ஆகிய நாட்டுக் காய்கறிகளின் விதைகளை கணிசமான அளவில் ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கி அவர்களுடைய வீட்டுத் தோட்டத்தில் விதைத்துக் கொள்ளச் சொன்னேன். மக்கள் மகிழ்ச்சியுடன் அதனை வரவேற்றனர். ஆடிப் பட்டத்தில் இந்த நாட்டு விதைகள் வீடு தேடி வந்திருப்பதை நன்நிமித்தமாக எண்ணி மகிழ்ந்தனர். 

ஜனவரியில் குடியரசு தினத்தின் போது அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுத்த நந்தியாவட்டை கன்றுகள் எவ்விதம் உள்ளன என்று விசாரித்தேன். பல வீடுகளில் செடி வளர்ந்து அவை பூ பூத்துள்ளன. 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட நந்தியாவட்டை செடிகள் நல்ல விதத்தில் இருப்பதைக் காண நேரிட்டது என்னைத் தனிப்பட்ட முறையில் பெரிதும் மகிழச் செய்தது. ஒரு வீட்டில் நந்தியாவட்டைக் கன்று எவ்விதம் வளர்ந்துள்ளது என்று கேட்ட போது ‘’செடியைக் கொடுத்தவர் உயரத்துக்கு வளர்ந்துள்ளது’’ என்று கூறி வீட்டுத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று காட்டினர். அந்த பூச்செடி என்னுடைய உயரம் இருந்தது. ஒரு அடி நீளம் கொண்ட செடிகளை ஜனவரி 25ம் தேதி வினியோகம் செய்தது நினைவில் வந்தது. அந்த தருணத்தில் , மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு மயிலாடுதுறையிலிருந்து நான் அனுப்பியிருந்த டாடா ஏஸ் வண்டியுடன் மூன்று நான்கு நர்சரிகளுக்கு உடன் சென்று சிறப்பான நந்தியாவட்டை செடிகளை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்த ‘’காவிரி போற்றுதும்’’ புதுக்கோட்டை நண்பரை நன்றியுடன் நினைத்துக் கொண்டேன். நண்பர்களே ‘’காவிரி போற்றுதும்’’. நண்பர்களின் ஆதரவே ‘’காவிரி போற்றுதும்’’ பலம். இப்பிறவியில் அவர்களே என் பேறு. 

கிராம மக்களின் மனம் பண்பாட்டுப் பாரம்பர்யத்தில் ஆழ்ந்துள்ளது. மக்களுடன் பழகுபவன் என்ற முறையில் என்னால் அதை உறுதியாகக் கூற முடியும். அவர்களால் எதையும் சாதிக்க முடியும். அவர்கள் தன்னம்பிக்கை பெறுவார்கள் எனில் அவர்கள் எதையும் சாதிப்பார்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதே ‘’காவிரி போற்றுதும்’’ பணி என்பதால் மெல்ல ஆனால் உறுதியாக ‘’காவிரி போற்றுதும்’’ முன்னேறிக் கொண்டிருக்கிறது. 

அந்த கிராமத்தின் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் 20 தேக்குக் கன்றுகளை ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக அளிக்க வேண்டும் என்பதும் அவற்றை நல்ல முறையில் வளர்த்துக் கொள்ள அவர்களுக்கு அறிவுரையும் பயிற்சியும் அளித்து அந்த கன்றுகளை அவர்களுக்குத் தரவேண்டும் என்பதும் அந்த கிராமத்தின் ஒவ்வொரு விவசாயக் குடும்பமும் அதனால் குறைந்த பட்சம் முப்பது இலட்சம் ரூபாய் பயன்பெற்றது என்ற நிலை உருவாக வேண்டும் என்பதும் ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பம். 

குறைந்தபட்சம் ஒரு கிராமத்திலாவது சிறு பொருளியல் மாற்றத்தையாவது நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் ‘’காவிரி போற்றுதும்’’ முன்னேறுகிறது.