Saturday, 20 August 2022

சிலர்

எனது தந்தையின் பணி நிமித்தம் நாங்கள் சில ஆண்டுகள் சீர்காழியில் வசித்தோம். அப்போது குமரன் அண்ணன் வீட்டுக்கு எதிர் வீட்டில் நாங்கள் வாடகைக்குக் குடியேறினோம். அண்ணன் வீட்டில் பசு மாடுகள் இருந்தன. அந்த வீதியின் பல வீடுகளுக்கு குமரன் அண்ணன் தான் வாடிக்கையாக பால் விற்பனை செய்வார். அவ்வாறு தான் எங்கள் குடும்பத்துக்கு அண்ணன் பழக்கமானார். என்னைச் சிறு குழந்தையாக சீர்காழியில் நடக்கும் கோயில் விழாக்களுக்கு தூக்கிக் கொண்டு சென்றிருக்கிறார். நான் பேசத் துவங்கும் முன்பிருந்தே எனக்கும் அவருக்குமான நட்பு இருந்திருக்கிறது. 

அண்ணனுடைய இயல்பு எவ்விதமானது எனில் ஒருவரிடம் சில நிமிடங்கள் பழகினால் கூட அவர்களுடைய குடும்பத்தில் ஒருவரைப் போல ஆகிவிடுவார். அவர்கள் குடும்பத்தின் எல்லா நிகழ்ச்சிகளிலும் முதல் ஆளாக இருந்து எல்லா வேலைகளையும் பார்ப்பார். அவர் வசித்த பகுதியில் குடியிருந்தவர்கள் வெளியூரில் இருக்கும் அவர்களுடைய உறவினர்கள் என எல்லா குடும்பத்தினரும் வீட்டில் மங்கள நிகழ்ச்சி என்றால் முதலில் கும்ரன் அண்ணனைத்தான் அழைப்பார்கள். 

அந்த பகுதியில் இருக்கும் சிறு குழந்தைகளை அவர் தான் சினிமாவுக்கு அழைத்துச் செல்வார். அவ்வாறு அவருடன் சென்றிருக்கிறேன். 

அவருக்குத் திருமணம் நிகழ்ந்த போது அந்த நிகழ்ச்சி சீர்காழியின் மிகப் பெரிய திருமணங்களில் ஒன்றாக இருந்தது. உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட அனைவரும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் வருகை புரிந்தார்கள். மண்டபம் நிரம்பி வழிந்தது.  

சாமானியமாக அவரை எங்கும் காண முடியும். பல ஊர்களில் நடைபெறும் திருமணங்களுக்குச் செல்பவர் என்பதால் அவரை சிதம்பரம் பேருந்து நிலையத்தில் கடலூரில் புதுச்சேரியில் செங்கல்பட்டில் எழும்பூர் ரயில் நிலையத்தில் தஞ்சாவூரில் கும்பகோணத்தில் என எங்கும் பார்க்க முடியும். நான் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் மாலை விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலில்  வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். நான் பயணித்த பெட்டியில் குமரன் அண்ணன் கடலூரிலிருந்து சீர்காழிக்கு பயணித்துக் கொண்டிருந்தார். நான் சிறுவனாயிருந்த போது என்னைப் பல நாட்கள் பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டிருக்கிறார். ஊரில் ஒரு அபார்ட்மெண்ட்ஸ் கட்ட கட்டிட அனுமதி பெற தஞ்சாவூரில் இருந்த டி.டி.சி.பி அலுவலகம் சென்று விட்டு ஊர் திரும்ப தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நின்றிருந்தேன். அப்போது தஞ்சாவூரில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்ப குமரன் அண்ணன் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக நின்று கொண்டிருந்தார். ரயிலில் ஒன்றாகப் பயணித்தோம். நான் ஊரில் இறங்கிக் கொண்டேன். அண்ணன் அதே ரயிலில் சீர்காழி சென்றார். 

கம்பராமாயணத்தில் ஒரு இடம் வருகிறது. அனுமனை முதல் முறையாகக் காணும் சீதை அனுமனின் பணிவான நம்பிக்கையளிக்கும் சொற்களாலும் அர்ப்பணிப்புடன் கூடிய அணுகுமுறையாலும் உளம் நெகிழ்ந்து அனுமனை ‘’இன்றென இருத்தி’’ என வாழ்த்துகிறாள். அதாவது ‘’இன்று இருப்பதைப் போல என்றும் இரு’’ என. 

நீண்ட நாட்களுக்குப் பின் குமரன் அண்ணன் நேற்று வீட்டுக்கு வந்திருந்தார். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவர் ஒரே தன்மையுடன் இருப்பதை நினைத்துக் கொண்டேன்.