Monday, 29 August 2022

பைரவம்

எனது நாட்டில் ஒரு நாய் உணவில்லாமல் இருந்தாலும் அதற்கு உணவு தருவதே என்னுடைய மதம். 
-சுவாமி விவேகானந்தர்

இன்று எனது நண்பர் ஒருவரிடம் ஒரு விஷயம் குறித்து விவாதித்தேன். 

அதாவது, இந்திய மரபில் நாய்கள் காலபைரவரின் வாகனமாக உள்ளன. நாய்களுக்கும் மனிதர்களுக்குமான நட்பு என்பது மானுட குலத்தில் அனாதி காலத்திலிருந்து இருந்து வருகிறது. இன்றும் கைக்குழந்தைகள் தொடங்கி பாலபருவம் அடைந்துள்ள குழந்தைகள் வரை அனைத்துக் குழந்தைகளின் அக உலகையும் இந்தியாவில் காகங்களும் நாய்களுமே இனிமையால் நிரப்புகின்றன. 

ஊரில் புதிதாகப் பிறக்கும் நாய்க்குட்டிகள் தெருக்களில் வளர்கின்றன. அவற்றில் கணிசமானவை அங்கும் இங்கும் திரியும் போது வாகன சக்கரங்களில் மாட்டிக் கொண்டு இறந்து போகின்றன. புதிதாய்ப் பிறந்த நாய்க்குட்டிகளுக்காக ஊரில் ஒரு வாழிடம் உருவாக்க வேண்டும் என்று நண்பரிடம் சொன்னேன். அங்கே குட்டி நாய்களுக்கு உணவு, தண்ணீர் விளையாடி மகிழ இடமும் அளிக்கப்படும். ஊரில் இவ்வாறான வாழிடம் இருப்பதை ஊர் முழுவதும் தெரியப்படுத்தினால் தெருக்களில் உள்ள குட்டி நாய்கள் குறித்து அலைபேசி மூலம் தெரிவித்தால் அவற்றை இந்த வாழிடத்துக்கு கொண்டு வந்து விடலாம். 

பலர் நாய் வளர்க்க வேண்டும் என்ற விருப்பத்தில் இருப்பார்கள். ஆனால் எவ்விதம் நாய்க்குட்டிகளைக் கண்டடைவது என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு இந்த நாய்க்குட்டிகளை நல்ல முறையில் பராமரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுமாயின் அதன் பராமரிப்பு குறித்த விபரங்களைக் கூறி அவற்றை அளிக்கலாம் என்றும் மேலும் அவ்வப்போது அதன் நலன் குறித்து விசாரித்து அறியலாம் என்றும் யோசித்தோம். 

இந்திய மரபு நம்முடன் வாழும் உயிர்களை நமக்கு சமமான உயிர்கள் எனக் கருதுகிறது. சக உயிர்கள் மேல் அக்கறை கொள்ளுதலே மேலான மானுட விழுமியம் என முன்வைக்கிறது. அவ்வகையில் இந்த முன்னெடுப்பு முக்கியமானது என நினைத்தோம். 

குட்டி நாய்களின் வாழிடத்துடன் வானத்துப் பறவைகளான காக்கை , குருவிகளுக்கு உணவளிக்கும் விதமாக பறவைச் சத்திரம் ஒன்றை ஊரில் அமைக்க வேண்டும் என்று யோசித்தோம். வட இந்தியாவில் ஊர் நடுவில் சாலைச் சந்திப்புகளில் இவ்வாறான பறவைச் சத்திரங்கள் இருக்கும். அங்கே பறவைகளுக்கு நீரும் தானியங்களும் அளிக்கப்பட்டிருக்கும். அதனைப் போன்ற ஒன்றை குட்டி நாய்களின் வாழிடத்துடன் இணைத்து அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. 

நம் சமூகத்தில் பத்தில் ஒருவருக்கேனும் சக உயிர்கள் பராமரிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஊரில் அவ்வாறான எண்ணம் கொண்டவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து அவர்களையும் சாத்தியமான எல்லா வழிகளிலும் இணைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.