Tuesday 30 August 2022

உள்ளே வெளியே


 சென்ற மாதம் ஊருக்குப் பக்கத்தில் ஒரு பள்ளி வளாகத்தில் - பள்ளியின் சுற்றுச் சுவருக்கு உள்ளே இருக்கும் மரம் ஒன்று அரசு அனுமதியின்றி வெட்டப்பட்டது குறித்து புகைப்பட ஆதாரத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினேன். அது குறித்து வலைப்பூவில் ஒரு பதிவை எழுதினேன். மேலும் ஒரு வாரத்தில் நான் அனுப்பிய புகார் மீது மேற்கொள்ளப்பட்ட மேல்நடவடிக்கை என்ன என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் விபரம் கோரியிருந்தேன். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல் கோரினால் 30 நாட்களுக்குள் பதில் அளிக்கப்பட வேண்டும் என்பது விதி. இருப்பினும் நம் மாநில அரசு ஊழியர்களின் பழக்கம் என்பது 30வது நாள் மட்டுமே பதில் அளிப்பார்கள். அதனை ஒரு பழக்கமாகவே கைக்கொள்கின்றனர். அவர்களால் எளிதில் அளிக்கக்கூடிய விபரமாகவே இருந்தாலும் முப்பதாவது நாளே அந்த விபரத்தை அனுப்பி வைப்பார்கள். இம்முறை தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி விபரம் கோரிய போது நான் இரண்டு விஷயங்களை யோசித்தேன். முதலாவது, அவர்கள் முப்பது நாட்கள் எடுத்துக் கொண்டால் அத்தனை நாட்களில் வெட்டப்பட்ட மரத்துக்கான அபராதம் செலுத்தப்பட்டிருக்கும் என்பதால் அந்த விபரம் வந்தடையும் என எண்ணினேன். இரண்டாவது, மனு கிடைத்த அன்றே பதில் அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரி விரும்பினால் நடவடிக்கை துரிதமாகும் என யூகித்தேன். 

பொதுவாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் விபரம் கோரினால் முப்பது நாட்களுக்குப் பின் மேலும் ஏழு நாட்கள் காத்திருப்பேன். அதற்குள்ளும் தபால் வரவில்லை என்றால் மட்டுமே முதல் மேல்முறையீட்டை தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மேற்கொள்வேன். ஆனால் இந்த முறை முப்பது நாள் கெடு முடிந்த அன்றே முதல் மேல்முறையீடு செய்து விட்டேன். 

சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் உள்ள ஒருவர் என்னிடம் ஒரு தகவலைக் கூறினார். அதாவது , அந்த பள்ளி வளாகத்தில் உள்ள மரம் வெட்டப்படவில்லை என அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதாக சொன்னார். ‘’புகைப்பட ஆதாரம் உள்ளதே ! அதுவும் அனுப்பப்பட்டிருக்கிறதே! ‘’ என்று சொன்னேன். என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்தார் அவர். 

‘’மரத்தை வெட்டிய குற்றத்தை செய்தவர் ஒருவர். இப்போது அந்த மரம் வெட்டப்படவேயில்லை என்று கூறும் அதிகாரிகளும் இந்த குற்றத்துக்கு உடந்தை என அதனுடன் இணைந்து விடும் அபாயம் இருக்கிறதே! அது குறித்து அச்சமும் தயக்கமும் கொள்ள மாட்டார்களா?’’ என்று கேட்டேன். 

‘’பொதுவா யாரும் புகார் கொடுக்க மாட்டாங்க சார். அப்படியே கொடுத்தாலும் அதை ஃபாலோ பண்ண மாட்டாங்க சார். அதனால தான் இப்படி’’ என்றார். 

மிகப் பெரிய மரம் அது . அதன் நிழலில் இருநூறு பேர் அமர முடியும். அத்தனை பெரியது. ஒரு நாளில் இல்லாமல் ஆகியிருக்கிறது. ஆனால் அப்படி ஒன்று நிகழவேயில்லை என்றும் கூறப்படுகிறது. 

‘’சார் ! அப்புறம் ஒரு விஷயம்’’

‘’என்ன சொல்லுங்க.’’

‘’ஸ்கூல் காம்பவுண்டுக்கு வெளிய இருக்கற மரம் தான் வெட்டப்பட்டிருக்குன்னு ரிப்போர்ட் பண்ணியிருக்காங்க சார்’’

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என ஒரு தமிழ்ப் பழமொழி நினைவில் வந்தது. 

நான் புகார் அளிக்க வேண்டும் என முடிவு செய்ததும் முதலில் புகார் கொடுத்தது மத்திய அரசாங்கத்தின் சி.பி.கி.ரா.ம்.ஸ் இணைய தளத்தில். அது தானாகவே மாநில முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகாரை அனுப்பி விடும். மேலும் அந்த புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கை எனக்கு திருப்தி தரவில்லை எனில் அந்த தளத்திலேயே என்னால் மேல்முறையீடு செய்ய முடியும். புகார் அளித்தவர் எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கையில் திருப்தி அடையவில்லை எனில் அந்த புகார் நிலுவை என்றே தொடரும். 

சி.பி.கி.ரா.ம்.ஸ் தளத்தில் புகாரைத் தரவேற்றம் செய்த பின் கிராம நிர்வாக அதிகாரிக்கு நடந்த சம்பவத்தை விவரித்து பதிவுத்தபால் அனுப்பினேன். அதன் நகலை வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், வனத்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பினேன். மனுவின் நகல் இத்தனை பேருக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது என்ற விபரம் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீது எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கை குறித்தும் தக்வல் பெறும் உரிமைச் சட்டப்படி விபரம் கோரப்பட்டது. இத்தனை இருந்தும் மரம் வெட்டப்பவேயில்லை என்று சொல்லப்படுகிறது என்றால் நிர்வாகம் இந்த விஷயத்தை எத்தனை அலட்சியத்துடன் கையாள்கிறது என்பதையே காட்டுகிறது. 

‘’நியாயமான உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் வரை நான் இந்த விஷயத்தை நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து கொண்டே இருப்பேன். நாட்கள் கடத்தப்பட்டால் நான் இந்த விஷயத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொள்வேன் என எவரும் நினைத்தால் அது நடக்கப் போவதில்லை. நாட்கள் அதிகமாக அதிகமாக மரத்தை வெட்டியவர்கள் அத்ற்கு உடந்தையாயிருந்தவர்கள் ஆகியோர் செய்த செயல் மேலும் அடர்த்தி கொண்டு விடும். மரத்தை வெட்ட எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புகைப்படத்திலேயே அது தெளிவாகத் தெரிகிறது. இந்த விஷயம் சட்டத்தின் முன் சென்றால் பேசப்போவது ‘’டாகுமெண்ட்டல் எவிடெண்ஸ்’’. இதனை எளிதாகக் கடந்து விடலாம் என எண்ணுபவர்களைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன்’’ என்று கூறினேன்.