Thursday 4 August 2022

சிலம்பு - பூம்புகார்

தான் பயின்ற துறையில் புதுப்பாதையை உருவாக்கும் ஆசான்கள் காலந்தோறும் உருவாகி வந்த வண்ணமே உள்ளனர். அத்தகைய ஆசான்கள் மரபுக்கு தங்களின் பங்களிப்பாக சில கூறுகளை அளிக்கின்றனர். அவை காலத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் நிலைபெறுகின்றன. உலகெங்கிலும் இத்தகைய போக்கு உண்டு. இத்தகைய ஆசான்கள் உண்டு. தமிழில் அவ்வாறான ஒரு ஆசான் இளங்கோ அடிகள். அவருடைய பாணி என்பது தனித்துவமானது. ‘’உரையிடப் பட்ட பாட்டுடைச் செய்யுள்’’ ஆக தனது காப்பியத்தை எழுத முற்பட்டதே அவ்வாறான ஒரு செயலே. சிலப்பதிகாரம் அளவில் மிகச் சிறியது. தமிழ் இலக்கியத்தின் - தமிழ்ச் சமூகத்தின் சாரமான பகுதிகளை அறிய இந்த ஒரு நூலை வாசித்து அறிந்தாலே போதுமானது. 

சிலப்பதிகாரம் தமிழ்நாட்டில் சரியான விதத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதா - புரிந்து கொள்ளப்பட்டுள்ளதா என்ற ஐயம் இந்த பதிவின் குறிப்புகளை எழுதிய போது மீண்டும் மீண்டும் எழுந்தது. 

சிலப்பதிகாரத்தை முழுவதும் உள்வாங்க இந்திய மரபின் புராணங்கள் ,  இந்திய மரபின் ஆறு தரிசனங்கள், இந்திய நிலத்தின் வழிபாட்டு முறைகள் , நான்கு மறைகள் - அவற்றை அடிப்படையாகக் கொண்ட் துணை மறைகள், சாஸ்திரங்கள், கட்டிடக் கலை என பலவிஷயங்கள் குறித்து அடிப்படையான அறிமுகம் கொண்டிருப்பது அவசியமானது. இந்த விஷயங்கள் குறித்து கொண்டிருக்கும் அறிமுகம் சிலப்பதிகாரத்தை சரியான கோணத்தில் உள்வாங்கிக் கொள்ள பேருதவியாக இருக்கும். 

சிலப்பதிகாரம் வாசிக்கும் போது என் மனதில் எழும் குறிப்புகளை தினமும் பதிவு செய்து விட்டு இயன்றால் அவற்றை முழுமையான ஒரு கட்டுரையாக எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. முழுமையை விட சிலப்பதிகார வாசிப்பு ஒரு வாசகனாக எனக்குக் குறிப்புணர்த்துவனவற்றை முன்வைக்க விரும்புகிறேன்.