Friday 30 September 2022

கணக்கும் தொகுப்பும்

பலவிதமான பணிகள் சூழ்ந்து உள்ளன. லௌகிகப் பணிகள். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள். இலக்கியப் பணிகள். தற்போது ஈடுபடும் பொது விஷயங்கள் சார்ந்த சட்டம் தொடர்பான பணிகள். ஒன்றுடன் ஒன்று கலந்து என்னுடைய நாள் பொழுதின் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்கின்றன. 

பொது விஷயங்கள் சார்ந்த சட்டம் சார்ந்த பணிகளில் ஈடுபடும் அனுபவம் வித்தியாசமானது. சமீபத்தில் மாநில நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் பள்ளி ஒன்றின் வளாகத்தில் இருந்த உயிர் மரம் வெட்டப்பட்டது. அந்த சம்பவத்தை குறிப்பிட்டு நான் ஒரு மனுவை அனுப்பினேன். முதலமைச்சர் அலுவலகம் தொடங்கி வனத்துறை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித் துறை செயலாளர்கள் , மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் வரை மனுவின் நகலை அனுப்பி வைத்தேன். வெட்டப்பட்ட மரத்தின் புகைப்படத்தையும் அந்த நகல்களுடன் இணைத்திருந்தேன். ஒரே நேரத்தில் இந்த விஷயம் பல மேலதிகாரிகள் கவனத்துக்கு சென்றுள்ளதால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை உறுதி செய்யப்படும் என எதிர்பார்த்தேன். மனுவை அனுப்பிய சில நாட்களில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்ற விபரத்தைக் கோரியிருந்தேன். ஒரு மாதம் கழித்து அந்த மரம் வெட்டப்படவில்லை என துணை தாசில்தாரிடமிருந்து பதில் வந்தது. அவர் அளித்த பதில்  திசை திருப்பும் பதில் என மாநில தகவல் ஆணையத்துக்கு புகார் அளித்தேன்.  இவ்வாறான பதில் அளித்ததற்காக நிர்வாக ரீதியில் அவர் மேல் கடுமையான மேல்நடவடிக்கை எடுக்கப்படக் கூடும். 

மரம் வெட்டியது ஒருவர். சட்டவிரோதமாக மரம் வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்பது ஒரு சிவில் சமூகத்தின் சாதாரண நடைமுறை. ஆயினும் குற்றம் செய்தவரை தப்பிக்கச் செய்வதில் ஈடுபட்டு மேலும் நான்கு அதிகாரிகள் இந்த விஷயத்தினுள் வந்து விடுகின்றனர். உண்மையில் நிகழ்ந்த பிழை திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் அதற்கான பிழையீடு செலுத்தப்பட வேண்டும் என்பதுமே எனது நோக்கம். ஆனால் கீழிருந்து மேல்வரை பலர் இந்த விஷயத்தில் இணையும் போது இயல்பாகவே சோர்வு உண்டாகிறது. 

அனுமதியின்றி மரம் வெட்டியதற்கு ஒரு அபராதம் விதிக்கப்பட்டால் இவ்வாறான செயலைச் செய்ய எண்ணம் கொண்டுள்ள பலருக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையும் என்பதால் தான் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினேன். பொதுமக்களில் எவரும் இது போன்ற விஷயங்களை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணம் தீவிரமாக இருப்பதால் தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி இவற்றில் ஈடுபடுகிறார்கள். அது முழு உண்மையல்ல என்பதை உணர்த்தவே இதில் ஈடுபட்டுள்ளேன். 

தில்லியில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் என்ற அமைப்பு உள்ளது. அதன் தென்மாநிலங்களுக்கான கிளை சென்னையில் உள்ளது. இணைய தளம் மூலமாகவே அதில் புகார் அளிக்க முடியும். சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களுக்காகவே உள்ள அமைப்பு அது. நியாயமான நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் தீர்ப்பாயத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு செல்ல வேண்டியிருக்கும். 

‘’காவிரி போற்றுதும்’’ பணிகளும் மெல்ல உறுதியாக நடந்து கொண்டிருக்கிறது. நேற்று ஒரு விவசாயி அவர் வயலில் ஐம்பது தேக்கு மரங்களை நட ஏற்பாடு செய்து வருகிறார். அவரை ஊக்கப்படுத்தும் விதமாக அவர் வயலில் ஜே.சி.பி வேலை செய்யும் போது உடனிருந்தேன். அப்போது அந்த இடத்துக்கு பல விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பொதுமக்கள் வந்தனர். அவர்களிடம் தேக்கு பயிரிடுவதன் நன்மைகள் குறித்து எடுத்துச் சொன்னேன். விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிப்பது தான் நம் பணி. முழு கிராமமும் என இலக்கை நிர்ணயம் செய்து கொண்டதால் மெல்லவே முன்நகர முடிகிறது. மெல்ல சென்றாலும் முன்னேறிச் செல்கிறோம் என்பது நிறைவைத் தருகிறது. 

இரண்டு நாட்களாக ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர் வாசித்துக் கொண்டிருந்தேன். சிறுவயது முதலே ஷேக்ஸ்பியர் மீது பெரும் பித்து. அவரது கூறுமுறை வசீகரமானது. மொழியில் அவர் நிகழ்த்தும் மாயங்கள் மகத்தானவை.