Friday 30 September 2022

வினையும் விளைவும்


சென்ற மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மாநில நெடுஞ்சாலையில் இருந்த பள்ளிக்கூடம் ஒன்றின் வளாகத்தில் இருந்த மரம் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் முன்னிலையில் வெட்டப்பட்டது. அளவில் மிகப் பெரியது அம்மரம்.  அதன் நிழலில் நூறு பேர் சர்வசாதாரணமாக ஓய்வெடுக்க முடியும். திங்கட்கிழமை நான் அந்த சாலை வழியாக சென்ற போது மரம் வெட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அந்த மரம் வெட்டப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்காது என என் உள்ளுணர்வு கூறியது. வருவாய்த்துறை அலுவலகத்தில் விசாரித்து அனுமதி பெறப்படவில்லை என உறுதி செய்து கொண்டேன். 

வெட்டப்பட்ட அந்த மரத்துக்காக குரலெழுப்ப முடிவு செய்தேன். 

சமூகம் மரம் வெட்டப்பட்டதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாது என்ற எண்ணமே அந்த மரம் வெட்டப்பட்டதற்கு காரணம். மரத்தை வெட்டும் குற்றத்தை செய்தவர்களுக்கு அவர்கள் எண்ணம் தவறானது என்பதைக் காட்ட வேண்டும் ; இந்த குற்றத்துக்கு கிடைக்கும் தண்டனை பொது இடங்களில் இருக்கும் மரங்களை வெட்டும் எண்ணம் கொண்டவர்களை எச்சரிக்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு செயலாற்றத் தொடங்கினேன். 

அடிப்படையில் நான் அரசின் மீது - அரசு என்னும் அமைப்பின் மீது - அரச முறையின் மீது - மக்களாட்சியின் மீது -  நம்பிக்கை கொண்டிருப்பவன். 

அந்த ஊரின் கிராம நிர்வாக அதிகாரிக்கு நிகழ்ந்த விஷயத்தை விளக்கி மனு அனுப்பினேன். மரம் வெட்டப்பட்ட இடத்துக்கும் கிராம நிர்வாக அதிகாரியின் அலுவலகத்துக்கும் 150 மீட்டர் தூரம் மட்டுமே இருக்கும். கூப்பிடு தொலைவு. முறைப்படி கிராம நிர்வாக அதிகாரி மரம் வெட்டப்பட்டிருப்பதை தனது மேலதிகாரிக்கு கடிதம் மூலம் தெரிவித்திருக்க வேண்டும். என்னுடைய மனு அனுப்பப்பட்ட பின்னாவது தகவல் தெரிவித்திருக்க வேண்டும். இரண்டும் நிகழவில்லை. என்னுடைய மனுவின் நகலை வட்டாட்சியர் , கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பினேன். அவர்கள் அனைவரின் மனுக்களுடனும் வெட்டப்பட்ட மரத்தின் புகைப்படத்தை இணைத்து அனுப்பியிருந்தேன். அந்த புகைப்படம் காணப்படும் போதெல்லாம் காண்பவர்கள் உளத்தை அசைக்கும் என்பதால் அவ்வாறு செய்தேன். 

மனுவை அனுப்பிய சில நாட்களில் என் மனு மீதான மேல்நடவடிக்கை என்ன என்ற விபரத்தை தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி கோரியிருந்தேன். அந்த பள்ளியில் அந்த மரம் வெட்டப்படவில்லை என வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தகவல் வந்தது. அது திசை திருப்பும் பதில் என மாநில தகவல் ஆணையத்தில் புகார் அளித்தேன். 

சம்பவம் நடந்த இடத்தை கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர், வருவாய் வட்டாட்சியர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு அந்த மரம் வெட்டப்படவேயில்லை என அறிக்கை அளித்துள்ளனர். வட்டாட்சியர் அலுவகத்தின் பொது தகவல் அதிகாரி மரம் வெட்டப்படவில்லை என தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி பதில் அளித்துள்ளார். இந்த நான்கு அதிகாரிகளும் இதன் மூலம் இந்த விஷயத்திற்குள் - அதாவது இந்த குற்றச் செயலுக்குள் வருகின்றனர். 

நிகழ்ந்தவற்றை விளக்கி மாவட்ட ஆட்சியருக்கும் , வருவாய் கோட்டாட்சியருக்கும் ஆங்கிலத்தில் ஒரு மனுவை அனுப்பினேன். இந்த மனுவின் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை எனில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகுவது என முடிவு செய்திருந்ததால் மனுவை ஆங்கிலத்தில் அனுப்பினேன். நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு அது புரியும் என்பதால் அவ்வாறு செய்தேன். 

இப்போது பசுமைத் தீர்ப்பாயம் செல்வது எனில் மாவட்ட நிர்வாகம், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, மரத்தை வெட்டும் செயலைச் செய்தவர் என மேற்படி அனைவரும் பிரதிவாதி ஆவார்கள். பசுமைத் தீர்ப்பாயத்துக்கு சென்னை செல்ல வேண்டியதில்லை. அவர்களுக்கு அனுப்பும் மனுவை கணினி மூலம் வீட்டிலிருந்தே பதிவேற்றம் செய்ய முடியும். 

ஒரு தவறு நிகழ்ந்தால் அதனைச் செய்தவர்கள் குறைந்தபட்சம் வருந்த வேண்டும். தவறுக்கு மேல் தவறாகச் செய்து கொண்டே போவது விஷயத்தை மேலும் சிக்கலாக்கவே உதவும். 

நாட்கள் ஆனால் விஷயத்தின் தீவிரம் குறைந்து மறந்து போகும் என அதிகாரிகள் நினைக்கிறார்கள்.

வாழ்க்கையில் சிலர் மெல்ல மெல்ல நகர்ந்தாலும் முன்னேறிச் செல்கிறார்கள். பின்வாங்குவதில்லை. 

நபர்கள் கூடிக் கொண்டே போகும் போது என் மனம் சஞ்சலம் கொள்கிறது. இருப்பினும் என் ஆற்றலைத் திரட்டிக் கொண்டு என்னைத் தொகுத்துக் கொண்டு திட்டமிட்டவாறு முன்னெறிச் சென்று கொண்டேயிருக்கிறேன்.