ஊரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி ஆலயத்துக்கு சென்றிருந்தேன். பேராற்றல் கொண்டது வராகம். மண்ணைக் குத்திக் கிழிப்பது. இந்திய மரபில் மண்ணைக் குத்தி தோண்டும் செயல் விவசாயத்தின் அடிப்படை செயலாகக் கொள்ள்படுகிறது. ஏரை வணங்குதல் என்பது நாடெங்கும் உள்ள மரபு. பொன்னேரால் ஜனகர் நிலத்தை உழுத போது மண்ணிலிருந்து கண்டறியப்பட்டவள் மண்மகள் சீதை என்கிறது ராமாயண காவியம். வராக ரூபம் மனித முயற்சிக்கு சமூகச் செழுமைக்கு ஆசியளிக்கும் தெய்வம் என்பது நாட்டின் தொல்நம்பிக்கை. உலகின் மகத்தான சாம்ராஜ்யங்களில் ஒன்றான விஜயநகரப் பேரரசு வராகத்தைத் தன் கொடியில் கொண்டிருந்தது. விஜயநகரப் பேரரசின் பொன் நாணயங்களில் வராக ரூபம் பொறிக்கப்பட்டிருந்தது. இன்றும் பொன்னின் அளவை வராகன் எனக் கூறுவதற்கான காரணம் அதுவே.
ஒரு சிறு கிராமத்தில் அமைந்திருக்கும் பேராலயம். அளவில் சிறிதென்றாலும் பேராலயம் என்று சொல்லத்தக்கது. பூவராக சுவாமி ஒரு குழந்தையைப் போல் இருக்கிறார். அவரது உடல்மொழி ஒரு குழந்தைக்கு உரிய ஒன்றாக இருக்கிறது. உடல் கிழக்கு திசை நோக்க முகம் தெற்கு திசையை நோக்கியிருக்கிறது. சுயம்புவாக பூமியில் கிடைத்த பெருமாள்.
ஓர் இளம் தம்பதி குழந்தைப்பேறு வேண்டி பூவராக சுவாமியை வணங்க வந்திருந்தார்கள். அங்கே இருந்த சந்தானகிருஷ்ணன் சிலையை பட்டர் ஒரு தட்டில் வைத்து அவர்கள் இருவரையும் கிருஷ்ணனின் பாதங்களைத் தொட்டு வணங்கச் சொன்னார். கிருஷ்ணன் ஆனந்தமாக வெண்ணெயை ருசித்து உண்டு கொண்டிருக்கிறான். பின்னர் குழந்தைக் கிருஷ்ணன் தொட்டிலில் இடப்பட்டிருப்பதாக எண்ணி அந்த தம்பதிகள் இருவரையும் அந்த தட்டை தொட்டில் போல பாவித்து தொட்டிலாட்டச் சொன்னார். இருவரும் ஆட்டினார்கள். அப்போது அந்த கணம் சட்டென அங்கிருந்த அனைவருமே உணர்ச்சிகரமாகி விட்டதாக அனைவருக்கும் தோன்றியது. அந்த இளம்பெண் தொட்டிலாட்டிய போது யசோதையாக ஆனதாக எனக்குத் தோன்றியது. ‘’ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்’’ தவன் தானே ஸ்ரீகிருஷ்ணன்.
கோயிலின் ஒரு புறத்தில் சப்தமாதா ஆலயம் உள்ளது. பிராம்மி, இந்திராணி, வைஷ்ணவி, வராகி, கௌமாரி, மகேஸ்வரி, சாமுண்டி என இந்த ஏழு அன்னையரை வணங்கும் மரபு நாடெங்கும் உள்ளது. ஏழு என்ற எண் சிறப்பும் மகத்துவமும் கொண்டது. அங்கே பலர் அன்னையரிடம் தங்கள் பிராத்தனைகளை முன்வைத்துக் கொண்டிருந்தனர்.
தாயார் சன்னிதி தனியாக உள்ளது. அங்கே கோரைக்கிழங்கு பிரசாதம் கிடைத்தது.
ஆலயத்தில் நாயக்கர் கால மண்டபம் ஒன்று உள்ளது. அங்கே அமர்ந்திருக்கும் போது ஆயிரம் ஆண்டுகளாக எத்தனையோ லட்சம் மக்கள் வந்து வழிபட்ட இறைமையை உணர்ந்து சென்ற இடத்தில் சில பொழுதுகள் இருக்க வாய்ப்பதற்க்கு இறைவனே காரணம் என எண்ணி இறைவனிடம் நன்றி சொன்னேன்.
இந்தியர்களின் வழிபாடு என்பதும் அவர்கள் கடவுளுடன் உணர்வுபூர்வமாக தங்களை பிணைத்துக் கொள்ளும் முறை என்பதும் தனித்துவமானது. அந்த பிணைப்பு அவர்களுக்கு மொழியின் மூலமாகவே உருவாகிறது. ராமனும் கிருஷ்ணனும் விநாயகரும் குமரனும் அவர்களுக்கு மொழி மூலமாகவே அறிமுகம் ஆகிறார்கள். அச்சு ஊடகம் என்பது உருவாகி நூறு ஆண்டுகளே ஆகிறது. அதற்கு முன் தெய்வ ரூபங்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்திருக்க வாய்ப்பில்லை. தெய்வ விக்ரகங்கள் எல்லா வீடுகளிலும் இருந்திருக்க வாய்ப்பு கிடையாது. தெய்வச்சிலையை வீட்டில் வைத்து பூஜிக்க நியதிகள் அதிகம். அவ்வாறெனில் அவர்கள் வீட்டில் தீபத்தையே வணங்கியிருப்பார்கள்.
தங்கள் மொழி மூலமே தங்கள் கடவுளை உருவாக்கி தினமும் வணங்கியிருப்பார்கள்.
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே
என்பது வினாயகப் பெருமான் குறித்த ஞானசம்பந்தரின் பாடல்.
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
என்பது அருணகிரி நாதரின் கந்தர் அனுபூதி.
திருமுருக கிருபானந்த வாரியார் ஒவ்வொரு ஊரிலும் தனது உரையைத் தொடங்கும் போது இந்த இரண்டு பாடல்களையும் பாடி விட்டே தனது உரையைத் தொடங்குவார்.
மொழி மூலம் கடவுளை ஒவ்வொரு தினமும் உருவாக்கி அழைத்தல் என்பது மொழிக்கு நம் மரபு எத்துணை பெரிய இடம் அளித்திருக்கிறது என்பதற்கான சான்றாகும்.
இன்று தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு மொழி அறிமுகம் என்பதே இல்லை. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் தமிழ் தெளிவாக வாசிக்கக் கூடிய எழுதக் கூடிய குழந்தைகள் பத்து சதவீதமாவது இருக்குமா என்பது ஒரு பெரும் ஐயம். தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் கற்றல் கற்பித்தல் என்பதை இழந்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இங்கே தேர்வுகள் என்பவை ஒப்புக்காக நடத்தப்படுபவையே. ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி. பதினான்கு ஆண்டுகள் எதுவுமே படிக்காமல் பொதுத்தேர்வுக்கு வந்து விட முடியும். பொதுத்தேர்வு விடை திருத்தல்கள் மதிப்பெண்ணை அள்ளிப் போடும் நடவடிக்கை. தங்கள் இயலாமை வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ஆசிரியர்கள் அரங்கேற்றும் நாட்கம். இவ்வாறு படித்த ஒரு தலைமுறை உருவாகி அதன் வாரிசுகள் இப்போது பள்ளி செல்கின்றனர். தமிழ்நாட்டில் எந்த ஒரு பள்ளிக்கும் சென்று நான்கு மாணவர்களை வாசிக்கச் சொல்லி எழுதச் சொல்லி பரிசோதித்து நான் கூறும் கூற்று உண்மையா இல்லையா என எவரும் அறிந்து கொள்ளலாம்.
நம் பண்பாடு என்பது நம் மொழியில் உள்ளது. எந்த சமூகமும் தனது மொழி மூலமாகவே தனது பண்பாட்டின் சாரத்தை அடைய முடியும். உலகில் தமிழ்ச் சமூகம் போல் தனது மொழியைப் பண்பாட்டை தானே அழித்துக் கொள்ளும் வேறொரு சமூகம் இருக்கிறதா எனத் தெரியவில்லை.