Sunday, 23 October 2022

விழிப்பு

செயல் புரியும் கிராமத்தில் ஒரு  விவசாயிக்கு சென்ற ஆண்டு 50 தேக்கு மரக்கன்றுகளை வழங்கியிருந்தேன். தடுப்பூசிக்காக பணி புரிந்த போது அறிமுகமானவர் அவர். என் மீது மிகுந்த அன்பு  கொண்டவர். அவருக்கு ஒரு திடல் இருந்தது. அதில் தண்ணீர் தேங்காது. எனவே தேக்கு நன்றாக வளரும். நான் அவரிடம் அந்த திடலில் தேக்கு பயிரிடுமாறு பரிந்துரைத்தேன். என் மீது கொண்ட பிரியத்தால் நான் சொல்கிறேன் என்பதற்காகவே அவர் அந்த திடலில் தேக்கு பயிரிட சம்மதித்தார். நான் கூறிய விபரங்கள் அவரை முழுமையாகத் திருப்தியடையச் செய்தன என்று சொல்ல முடியாது. என்றாலும் நான் எல்லாரிடமும் சொல்வதை அவரிடமும் சொன்னேன். ‘’காவிரி டெல்டா மண்ணுக்கு தேக்கு மரம் நன்றாக வளரும். டெல்டா மாவட்டங்களில் ஆற்றங்கரைகளில் அரசாங்கத்தால் நட்டு வளர்க்கப்படும் மரங்களின் வளர்ச்சியே அதற்கு கண்கூடான சாட்சி. நீங்கள் உங்கள் நிலத்தில் முழுமையாக தேக்கு  பயிரிட வேண்டும் என்பது அவசியமில்லை. உங்கள் நிலத்தில் ஒரு சதவீத பரப்பில் மட்டும் பயிரிட்டுக் கொள்ளுங்கள். மீதி உள்ள 99 சதவீத பரப்பில் நீங்கள் வழக்கமாக செய்வதை செய்து கொள்ளுங்கள். ‘’ நான் மீண்டும் மீண்டும் கூறிய பிறகும் அவர் நான் சொன்ன விஷயத்தை முழுமையாக உள்வாங்கவில்லை. என் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவும் பிரியத்தின் காரணமாகவும் மட்டுமே அவர் ஐம்பது தேக்கு மரங்களை நடத் தயாரானார். 

50 மரக்கன்றுகளை நான் அவருக்கு வழங்கினேன். இது ஓர் எளிய ஊக்கமளிக்கும் செயல் மட்டுமே. செயல் துவக்கத்தை விரைவுபடுத்த செய்யும் ஒரு வழிமுறை. மரக்கன்றுகள் வந்தடைந்து விட்டால் அதனை உடனே நடுவதற்குத் தேவையான ஆயத்தங்களை விவசாயிகள் மேற்கொள்வார்கள் என்பது ஓர் நடைமுறைப் புரிதல். 

குழி எடுக்கும் தினத்தன்று அங்கே சென்று ஒரு மரக்கன்றுக்கும் இன்னொரு மரக்கன்றுக்கும் 12 அடி இடைவெளி இருப்பதை உறுதி செய்தேன். விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் மரம் நட வேண்டும் என்ற ஆவலில் நெருக்கி நட்டு விடுவார்கள். நெருக்கி நடப்படும் தேக்கு மரங்கள் உயரமாக வளருமே அன்றி பருக்காது. தேக்கு மரம் உயரமாக வளர்வதால் பலன் இல்லை. பருத்து வளர வேண்டும். மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரியைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் என்னிடம் ஒருமுறை சொன்னார்:  ‘’ நமக்குத் தேவை அந்த தாவரத்தின் தண்டு மட்டும் தான். குறைந்தது பத்து அடி உயரத்துக்கு நேராக இருக்கும் தண்டு.’’ இரண்டு வாக்கியத்தில் அவர் சொன்னதை நான் முழுமையாகப் புரிந்து கொண்டேன். 

குழி எடுத்து மக்கிய சாண எரு இட்டு தேக்கு மரக்கன்றுகளை நடவு செய்தார். நான் குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது அந்த திடலுக்குச் சென்று மரக்கன்றுகள் எவ்விதம் வளர்கின்றன என பார்வையிடுவேன். அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம் தான். ஆனால் நான் அப்படி ஒரு நாளும் கேட்டதில்லை. அந்த மரக்கன்றுகளின் வளர்ச்சியில் கண்காணிப்பில் எனது நேரடியான பங்களிப்பு இருக்க வேண்டும் என்று எண்ணுவேன். மேலும் அந்த மரங்களுடன் எனக்கு உணர்வுபூர்வமான தொடர்பு ஒன்றை உணர்கிறேன். எனவே எத்தனை வாய்ப்பிருக்கிறதோ அத்தனை முறை  சென்று பார்ப்பேன்.  

மரங்களுக்கு வாரம் மூன்று நாட்களாவது தண்ணீர் விடுங்கள் என்று வற்புறுத்துவேன். தஞ்சைப் பிராந்தியத்தில் விவசாயிகள் மரங்கள் தண்ணீர் ஊற்றாமல் தானாக வளரும் என்ற நம்புகின்றனர். அவ்வாறு அவர்கள் பழகியிருக்கின்றனர். பழகிய ஒரு விஷயத்தில் மாற்றம் ஏற்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒரு செயல். மருந்து நோயைப் போக்கும் என மனிதன் அறிந்திருந்தாலும் மனிதன் மருந்தின் மீது வெறுப்பு கொள்கிறான். இது மனித சுபாவம். தண்ணீர் விடாமல் இருந்தால் மரத்தின் வளர்ச்சி குறைவுபடும். ஒரு குழந்தைக்கு ஒருவேளை உணவு கொடுத்தால் கூட அது வளரும். புஷ்டியாக வளராது. தேக்கு மரம் புஷ்டியாக வளர வேண்டும் என்றால் கோடைக்காலத்தில் அதற்கு தண்ணீர் வாரம் மூன்று முறையாவது தண்ணீர் ஊற்ற வேண்டும். விவசாயிக்கு இதனை பலவிதங்களிலும் விளக்க வேண்டும். மென்மையாக வற்புறுத்திச் சொல்லி உரிமையில் கடிந்து கொண்டு என பலவிதங்களிலும் இதனை நான் கூறியவாறு இருப்பேன். அந்த விவசாயி அதனை ஓரளவு நிறைவேற்றினார். நான் நினைத்த அளவு இல்லையென்றாலும் அதில் 80 சதவீத அளவுக்கு. 

மரக்கன்றுகள் குறிப்பிட்ட உயரம் வளர்ந்ததும் அவர்களுக்கு நம்பிக்கை வந்து விடும் என எதிர்பார்த்தேன். அவ்வாறே நடந்தது. இருப்பினும் மீண்டும் மீண்டும் அங்கு சென்று மரக்கன்றுகளைப் பார்ப்பேன். 

ஒரு செடிக்கு ஒரு கன்றுக்கு முறையாக தண்ணீர் ஊற்ற வேண்டும் என்னும் பழக்கம் விவசாயி மனதிலிருந்து நீங்கியிருக்கிறது என்றால் விவசாயம் எந்த நிலையில் இருக்கிறது என்னும் துயரம் உருவாகும். துயரான நிலை இருக்கிறது என்பதால் தான் அதனை நீக்க முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது என்பதால் துயரை மீண்டும் மீண்டும் நினைப்பது துயரை நீக்குவதற்கான வழி அல்ல ; துயரை நீக்குவதற்கான வழி நம்பிக்கையுடன் செயல்புரிவதே என என்னுடைய மனதுக்கு நானே தெம்பினை உருவாக்கிக் கொண்டு முயற்சிகளைத் தொடர்வேன். 

ஒரு தனிமனிதனாக நான் சோர்வுறும் இடம் சமூகப் பணியில் நிச்சயம் உண்டு. செயல் புரியும் கிராமத்தில் எல்லாரும் என் மீது பிரியம் காட்டுகிறார்கள். என் மீது அன்பு செலுத்துகிறார்கள். எந்த ஒருவரும் என்னிடம் கடுமையாக நடந்து  கொண்டதில்லை. கடுமையாகப் பேசியதில்லை. ஆனால் கிராமத்தில் செயல்கள் நிகழும் வேகம் என்பது மிகவும் மெதுவானது. அவர்கள் வாழ்க்கைமுறை அவ்வாறு அவர்களைப் பழக்கியிருக்கிறது. ஒரு செயல் செய்ய மூன்று நாட்கள் தேவை எனில் அதைச் செய்ய முப்பது நாட்கள் ஆகி விடும். மூன்று நாள் செய்ய வேண்டிய வேலையை முப்பது நாட்கள் செய்கிறார்களா என்றால் அப்படியில்லை ; செயலை 27ம் நாள்தான் துவக்குவார்கள். அதனை ஏன் முதல் நாளே துவக்கவில்லை என்றால் அவர்களுடைய சுபாவம் எதனையுமே ஒத்திப் போடுதல் தான். அதன் மூலவேர் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கைக் குறைபாடு. நான் அவர்களுக்கு நம்பிக்கையளிக்கவே முயற்சி செய்கிறேன். இருப்பினும் எனக்குத் தோன்றும் எப்போது நான் திட்டமிடும் பணியில் கணிசமான அளவேனும் நிறைவேறும் என்று. மிகவும் மெதுவாக நடக்கிறதே என்று. ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை கூறினார் . '' I walk slowly but I never walk backward'' என்று. அந்த சொல்லைத் துணையாகக் கொண்டு கடந்து செல்வேன். 

இந்திய மரபு ‘’பிரக்ஞை’’ என்ற ஒன்றை முன்வைக்கிறது. விழிப்பு என்றும் விழிப்பு உணர்வு என்றும் அதனைக் கூறலாம். பிரக்ஞையின் மூலமாக நான் உண்மையைச் சென்றடைய முடியும் ; வாழ்வின் சாரமான உண்மையை உணர முடியும் என்பது நம் மரபின் வழிமுறை. மனிதன் சாமானிய விசேஷ உண்மைகளை பிரக்ஞைபூர்வமாக அறிய வேண்டியவன். 

ஒரு விவசாயிக்கு மரத்தினால் பயன் அடைய மரத்துக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற பிரக்ஞையை நான் உருவாக்க முயல்கிறேன் என எண்ணிக் கொள்வேன். 

நேற்று மாலை அந்த விவசாயியின் திடலுக்குச் சென்றிருந்தேன். கடந்த பதினைந்து நாட்களாக இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை நல்ல மழை பொழிந்து வருகிறது. அத்தனை மரக்கன்றுகளும் செழுமையாக வளர்ந்திருந்தன. பத்து அடி உயரத்துக்கு மேல் அனைத்தும் சென்றிருந்தன. மரங்கள் நன்றாகப் பருக்கத் தொடங்கி உள்ளன. மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியை நீராகக் கொண்டு என் அகம் வளர்கிறது.