Friday 21 October 2022

பண்டிகைக்கு முன்னான தினங்கள்

எனது கட்டுமானத் தொழிலுக்கு ஒரு வசதி உண்டு. கட்டுமானம் நிகழும் களத்துக்கு அனைவருமே காலை வந்து விடுவார்கள். ஜல்லி காலையில் ஆறு மணிக்கு வரும். பொறியாளர்கள் ஜல்லி வருவதற்கு முன்னரே வந்து காத்து நிற்பார்கள். அதன் பின்னர் நீண்ட நேரம் கழித்து தொழிலாளர்கள் வருவார்கள். மாலை 6.30 அளவில் பணிகள் நிறைவு பெறும். களத்தில் தினமும் கட்டிடம் எழும்பிக் கொண்டே இருக்கும். எனவே ஒரு முறை சென்ற களத்துக்குள் மறுமுறை செல்ல முடியாது. நதியைப் போல கட்டிடம் நகர்ந்து  கொண்டிருக்கும். நதி கிடைமட்டமாக நகரும். கட்டிடம் செங்குத்தாக வளரும். களத்தில் அனைவருடைய கவனமும் பணி முன்னேற்றம் குறித்தே இருக்கும் என்பதால் களத்துக்கு வந்து விட்டாலே ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கிட முடியும். களத்துக்கு செல்லுதல் என்பதும் களத்தில் இருத்தல் என்பதுமே முதன்மையான பங்கைப் பெற்று விடும்.  

தொழிலுக்கு வந்த நாளிலிருந்து எனது பழக்கம் காலை எழுந்ததும் களத்துக்கு ஒருமுறை செல்வேன். கட்டு வேலை, பூச்சு வேலைக்கு முறையாகத் தண்ணீர் பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வேன். அன்றைய பணிகளுக்குத் தேவையான சிமெண்ட் முதலிய பொருட்களை எடுத்து வைக்கச் சொல்வேன். களத்தில் இருக்கும் பொருட்களின் ஸ்டாக்கை அவதானிப்பேன். இடத்தைக் கூட்டி தூய்மையாக வைக்கச் சொல்லி வற்புறுத்துவேன். பணி வெளியூரில் நடந்தால் காலை சரியாக எட்டு மணிக்கு அங்கே சென்று விடுவேன். எங்கள் தொழிலில் நாங்கள் இருக்கும் இடம் நோக்கியே எல்லாரும் வருவார்கள். மெட்டீரியல் சப்ளையர்கள், தொழிலாளர்கள் என அனைவரும். சப்ளையர்கள் அவர்களுடைய பணியாளர்களை களத்துக்கு அனுப்பி பணம் பெற்றுக் கொள்வார்கள் அல்லது இரவு ஏழு மணிக்கு மேல் அவர்கள் நிறுவனத்துக்குச் சென்று செட்டில் செய்வோம். 

எனது தந்தை தொழில் விஷயத்தில் அனைத்துமே மிகத் துல்லியமாக நிகழ வேண்டும் என விரும்பக் கூடியவர். பணியின் தரம் உன்னதத்துக்கு இம்மி கூட குறையக் கூடாது என்ற எண்ணத்தைத் தீவ்ரமாகக் கொண்டவர். அவரிடம் பயிற்சி பெற்றதால் என்னிடமும் அந்த விஷயங்கள் உள்ளன. 

எங்கள் தொழில்வலை என்பது ஊருக்குள்ளேயே அடங்கக் கூடியது. சிமெண்ட், ஸ்டீலில் பணியின் பெரும்பான்மையான பங்கு நிறைந்து விடும். கொத்து வேலை செய்பவர்கள், கம்பி வேலையாளர்கள், தச்சர்கள் என இவர்கள் தான் பணிக்களத்தில் அதிக நாட்கள் வேலை செய்பவர்கள். கம்பிப்பணி மற்றும் கொத்துப் பணியிலேயே பெரும்பான்மைப் பணி நிறைந்து விடும். எனவே களத்துக்கு வெளியே எங்களுக்கு வேலை என்பது மிகவும் குறைவு. அலைபேசி இல்லாமல் தொலைபேசியைக் கொண்டே எங்கள் பணியை நிர்வகித்திட முடியும். 

சில நாட்களாக தொழில் தொடர்பான சில பணிகள். ஒரு பணியினைத் துவங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறேன். பலவிதமான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. கடுமையான அலைச்சல். 

கடைத்தெரு மக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மக்கள் முகங்களில் பண்டிகை குறித்த ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் காண முடிகிறது. பண்டிகைகளின் போது தோரணங்கள் மூலம் வீடுகளை அலங்கரிக்கலாம். ஒவ்வொரு பண்டிகைக்கும் தென்னைத் தோரணங்கள் கட்டலாம். இதனால் கைவினைஞர்கள் பயன் பெறுவார்கள். எளிதானவை மாவிலைத் தோரணங்கள். நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். 

நான் பண்டிகை தினத்தன்று நண்பர்களை அவர்களுடைய வீட்டுக்குச் சென்று சந்திப்பதையும் ஆலயங்களுக்குச் செல்வதையும் பயணம் செய்வதையும் விரும்புவேன். பண்டிகைக்கு முன்பான தினங்களும் அவ்வாறானவை.

நேற்று எனக்கு இருந்த கடும்பணிக்கு அப்பாலும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி விபரம் கோரி இரண்டு மனுக்கள் அனுப்பினேன். மனு அனுப்புவது என்பது சாதாரணமாகத் தோன்றும். ஆனால் கணிசமான நேரத்தை எடுத்துக் கொள்ளும். கணினியில் தட்டச்சிட வேண்டும். அதனை விரைவாகச் செய்து விடுவேன். பின்னர் இணைய மையத்துக்கு அதனை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். அங்கு சென்று பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும். அங்கேயே அந்த மனுவில் கையெழுத்திட வேண்டும். அதன் பின் ரூ. 10 க்கான மனு வில்லை வாங்க வேண்டும். அது வாங்க வேண்டிய இடம் இணைய மையத்திலிருந்து தள்ளி இருக்கும். அதனை வாங்கி வந்து மனுவில் ஒட்டி அந்த மனுவை நகலெடுக்க வேண்டும். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்து காகித உறையில் மனுவை இட்டு உறைமேல் முகவரி எழுத வேண்டும். தபால் அலுவலகம் சென்று பதிவுத் தபாலில் அனுப்பி விட்டு அவர்கள் தரும் ரசீதை நகல் மனுவில் ஒட்டி கோப்பில் இட வேண்டும். மனுவை தட்டச்சிடத் தொடங்குவதிலிருந்து குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகி விடும். ஒரு பிரிண்டர் வாங்கி விடலாம் என திட்டமிட்டுள்ளேன். ரூ. 5000 என்ற விலையில் கூட நகலெடுப்பானுடன் கூடிய பிரிண்டர் கிடைக்கிறது. வாங்கினால் நேரம் கணிசமாக மிச்சமாகும். 

நேற்று காலை செயல் புரியும் கிராமத்துக்குச் சென்று விஜயதசமி அன்று நடப்பட்ட தேக்கு மரக் கன்றுகள் எவ்விதம் உள்ளன என்று பார்வையிட்டு வந்தேன். அங்குள்ள நண்பர்களைச் சந்தித்து விட்டு வந்தேன். 

சனிக்கிழமையன்று காலை கிளம்பி ஊருக்கு வடக்கே இருக்கும் சில ஆலயங்களுக்குச் சென்று வரலாம் என ஒரு எண்ணம் உள்ளது. தில்லை தொடங்கி மரக்காணம் வரை.  ஞாயிறன்று ஊருக்கு மேற்கே இருக்கும் ஆலயங்களுக்கு சென்று வர எண்ணம். திட்டை தொடங்கி புன்னைநல்லூர் வரை. தீபாவளியன்று ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமியை வணங்கச் செல்ல வேண்டும் என எண்ணியுள்ளேன். ஈஸ்வர ஹிதம்.