Sunday 23 October 2022

இனிமையும் ஒளியும் நிறைக


ஒரு கிராமம் என்பதை ஒரு தேசம் எனக் கொள்ள முடியும் என்கிறது மகாபாரதம். நம் நாட்டில் ஒரு கிராமம் என்பது ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்து அவர்கள் அமைதியான ஒரு வாழ்க்கை வாழும் சூழலை பல்லாயிரம் ஆண்டுகளாக பல தலைமுறைகளாக உருவாக்கி அளித்து வந்திருக்கிறது. இந்திய சரித்திரம் அறிந்தவர்களால் அதனை எளிதில் புரிந்து கொள்ள முடியும். கன்னியாகுமரி முதல் காஷ்மீரம் வரை எல்லா இந்தியக் கிராமங்களும் கிட்டத்தட்ட ஒரே முறையைக் கொண்டவையே. எல்லா கிராமங்களிலும் அன்றும் இன்றும் விவசாயம் தான் பிரதானமான தொழில். உணவு உற்பத்தியும் உணவு உற்பத்திக்கு உதவும் உபகரணங்களை உருவாக்கிக் கொள்ளுதலுமே கிராம மக்களின் ஜீவிதமாக இருந்திருக்கிறது ; இருக்கிறது. 

இந்த கிராமங்களை அடிப்படையாய்க் கொண்டே நம் நாட்டில் கல்வி, கலை, இலக்கியம், நுண்கலைகள், வானியல் என அனைத்துத் துறைகளிலும் மகத்தான சிறப்பான உச்சபட்சமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. நம் நாடு உலகின் எல்லா துறைகளிலும் முதன்மை பெற்றிருந்தது என்பது வரலாறு. 

18ம் நூற்றாண்டு வரை கூட உலகப் பொருளாதாரத்தில் ஐம்பது சதவீதப் பங்களிப்பை நமது நாடு வழங்கியிருக்கிறது. இந்தியாவில் விளையும் பயிர்களை கொள்முதல் செய்ய இந்தியக் கைவினைப் பொருட்களை வாங்க உலகெங்கிலும் இருந்து வணிகர்கள் குவிந்தார்கள் என்பது வரலாறு. 

உலகெங்கிலும் ஆத்ம தாகம் கொண்டவர்கள் நாடி வரும் நாடாக நமது தேசம் இருந்திருக்கிறது. எல்லா வழிபாட்டு முறைகளையும் இன்னொரு பாதையாகவும் உண்மையை நோக்கிச் செல்லும் இன்னொரு வழியாகவும் எண்ணும் வழக்கம் உலகிலேயே மிக மிக அதிகம் இருந்த நாடு நம் நாடுதான். 

இந்த இடத்தில் பொதுவாக எழுப்பப்படும் கேள்வி ஒன்று உண்டு. இந்திய சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு இருந்திருக்கிறதே என்பதும் சுரண்டல் நிகழ்ந்திருக்கிறதே என்பதும் எப்போதும் எழுப்பப்படும் கேள்விகள். உலகில் எந்த ஒரு பகுதியிலாவது எந்த ஒரு சமூகத்திலாவது எந்த ஒரு நாட்டிலாவது பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருந்திருக்கிறதா என்பதும் எவ்விதத்திலாவது சுரண்டல் நிகழாத பகுதி உலக வரலாற்றில் எங்காவது இருந்திருக்கிறதா என்ற கேள்விக்கான பதிலின் மூலமே மேற்படி கேள்விகளை எதிர்கொள்ள முடியும்.  

ஆயிரம் ஆண்டுகளாக நம் நாடு அன்னியத் தாக்குதலுக்கு ஆளானது. ஆயிரம் ஆண்டுகளாக அன்னியத் தாக்குதலை தொடர்ந்து எதிர்த்து யுத்தம் செய்து கொண்டிருந்தது நமது தேசம். பிரிட்டிஷ் ஆட்சி நம்மைச் சூழ்ந்தது. இந்தியாவின் கிராம நிர்வாக அமைப்பு பெரும் தாக்குதலுக்குள்ளான காலகட்டம் அது. ரொக்கமாக வரி செலுத்துதல் என்பது ஐரோப்பிய நடைமுறை. இந்தியாவில் தானிய பண்டமாற்று முறை பன்னெடுங்காலமாக வழக்கத்தில் இருந்தது. பண்ட மாற்று முறையில் பரிவர்த்தனை ஆகும் தானியம் மிகக் குறுகிய காலத்தில் உணவாக மாறும் சாத்தியம் கொண்டது. அந்த முறை தகர்க்கப்பட்டு ரொக்கப் பரிமாற்றம் வந்தது. இந்தியாவுக்கு இந்திய மனநிலைக்குப் பொருந்தாத வரிவிதிப்பு முறைகளால் இந்திய கிராமங்கள் வீழத் தொடங்கின. மக்கள் வரிப்பணத்தை பிரிட்டனுக்குக் கொண்டு சென்றது பிரிட்டிஷ் அரசாங்கம். 

இந்திய சுதந்திரப் போரை மக்கள் இயக்கமாக மாற்றிய மகாத்மா காந்தி இந்திய கிராமங்கள் மீண்டும் வலிமை அடைய வேண்டும் என விரும்பினார். இந்தியாவின் நிலை முன்னேற்றம் காண வேண்டும் எனில் இந்திய கிராமங்களில் மாற்றம் நிகழ வேண்டும் என்பதற்காக பணிகளை முன்னெடுத்தவர் மகாத்மா காந்தி. அனைவருக்குமான வளர்ச்சி என்ற விஷயத்தை தொடர்ந்து வற்புறுத்தியவர். 

ஜனநாயகம் என்பது மக்கள் இணைவதற்கான அமைப்பு. ஒரு ஜனநாயக அரசை வழிநடத்துவது அந்த நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் விழுமியங்கள். எவர் ஆளும் பொறுப்புக்கு வந்தாலும் நாட்டை வழிநடத்துவது அரசியல் சட்டமே. ஆட்சி அதிகாரம் என்பது சமூகத்தில் சிறு பகுதியே என்பதே உண்மை. அளவில் சிறிய நாடுகளில் கூட அரசு என்பது அந்த சமூகத்துடன் ஒப்பிடும் போது மிக மிகச் சிறிய ஒன்றே.  இந்திய சமூகம் மிகப் பிரம்மாண்டமானது. குறைந்தபட்சம் ஆறாயிரம் ஆண்டு கால வரலாறு கொண்டது. பெரும் தீர்க்கதரிசிகளின் சொற்களை நூற்றாண்டுகளாக தலைமுறை தலைமுறைகளாக பண்பாடாக உருவாக்கி அளித்துக் கொண்டே செல்வது. ஸ்ரீகிருஷ்ணர். மகாவீரர், புத்தர் , சங்கரர், ராமானுஜர் என நீளும் ஞானிகளின் மரபைக் கொண்டது. இங்கே அரசோ அரசியல் அதிகாரமோ மிகப் பெரிய ஒன்று அல்ல. இங்கே மக்கள் மேன்மையுற பணியாற்றும் தன்மையே நம் நாட்டை உயிர்ப்புடன் பல நூற்றாண்டுகளாக வைத்திருந்திருக்கிறது. 

சுவாமி விவேகானந்தர் ஒருமுறை கூறினார். ‘’நான் ஆத்ம ஞானியுமல்லேன் ; தத்துவ ஞானியுமல்லேன் ; ஏழை ; ஏழைகளை நேசிக்கிறேன்; அவ்வளவுதான்’’ என்று.அவர் நாடெங்கும் முழங்கிய செய்தி என்பது மானுட சேவையே இறை வழிபாடு என்பதே. 

‘’காவிரி போற்றுதும்’’ குறைந்தபட்சம் ஒரு கிராமத்துக்காவது ஆகச் சாத்தியமான எல்லா வழிகளிலும் சேவை புரிய வேண்டும் என்று விரும்புகிறது. 

‘’காவிரி போற்றுதும்’’ பணிகளில் ஒருங்கிணைப்பை மட்டுமே அடியேன் மேற்கொள்கிறேன். செயல்கள் நிகழக் காரணம் ’’காவிரி போற்றுதும்’’ பணிகளுக்கு எல்லா விதமான ஆதரவையும் தொடர்ந்து நல்கும் நண்பர்களே. அவர்கள் என் மீது வைக்கும் நம்பிக்கையும் தொடர்ந்து காட்டும் பரிவும் இந்த கணம் என்னைக் கண் கலங்கச் செய்கிறது.  தங்கள் பெயரைக் கூட சொல்லக் கூடாது என்று கூறி அவர்கள் உடனிருக்கிறார்கள். அவர்களுக்கு என்றும் அடியேன் கடன்பட்டவன். அவர்கள் அனைவருக்கும் நன்றி. 

உலகில் வாழும் உயிர்கள் அனைத்தும் அமைதியும் சந்தோஷமும் கொண்டிருக்கும் நிலைக்கு உலகை உயர்த்த வேண்டிய பொறுப்பு மானுடத்துக்கு இருக்கிறது. நாம் இணைந்து அதனை சாதிக்க வேண்டும். 

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த தீபாவளியில் நம் வாழ்வில் இனிமையும் ஒளியும் நிறையட்டும்.