இனிய தீபாவாளி வாழ்த்துக்கள். உங்களைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. ஃபோன் ஸ்விட்ச் ஆஃப். நீங்கள் ஒரு கதை எழுதிக் கொண்டிருக்கலாம். அல்லது ’’காவிரி போற்றுதும்’’ பற்றி யோசித்துக்கொண்டிருக்கலாம். அல்லது ஒருவர் மட்டும் அமர்வதான சோஃபாவில் ஏதும் செய்யாமல் அமர்ந்திருக்கலாம். தி.ஜாவை வாசித்துக்கொண்டிருக்கலாம். அம்மாவிடம் தண்ணீர் கொண்டு வரச் சொல்லிக்கொண்டிருக்கலாம். ஒரு மைசூர் பாகு அல்லது அதிரசத்தை சாப்பிட்டுக்கொண்டிருக்கலாம். ஒரு கவிதை எழுதிக்கொண்டிருக்கலாம். இப்படி எதுவானாலும் யாதினும் இனிய அண்ணா, தீபாவளி வாழ்த்துக்கள்.
தீராக் காதலுடன்,
சூரிய நாராயணன்
***
இன்று எனக்கு இந்த கடிதம் வந்திருந்தது. கடிதத்தை எழுதியவன் என் நண்பன். என் உயிர் நண்பன். இலக்கிய வாசிப்பின் மூலம் நாங்கள் அறிமுகமானோம். அறிமுகமான முதல் நாளிலிருந்து எங்கள் பிரியமும் அன்பும் சுக்ல பட்ச நிலவென வளர்ந்து கொண்டேயிருக்கிறது. எனது கவிதைகள் தொகுக்கப்பட்டு தொகுப்பாக வெளிவர வேண்டும் என்று என்னிடம் தொடர்ந்து வற்புறுத்துபவன்.
‘’யாதினும் இனிய அண்ணா’’ என என்னை விளித்திருந்தான். இது கம்பனின் வரி. குகனை ஸ்ரீராமன் ‘’யாதினும் இனிய நண்ப’’ என்று அழைக்கிறான். தம்பியின் விளி என்னை அன்பின் மகிழ்ச்சியின் கணங்களில் நிறுத்தியது.
’’ தம்பி! உன் அன்பால் என்னைக் குழந்தையாக்குகிறாய்.’’ என்று மட்டும் தான் என்னால் உன்னிடம் இப்போது சொல்ல முடியும்.