மந்த்ராலயம் சென்றிருந்த போது அங்கே சுவாமி ஸ்ரீராகவேந்திரர் 12 ஆண்டுகள் தவமியற்றிய பஞ்சமுக ஆஞ்சநேயர் குகைக்குச் சென்றிருந்தேன். அந்த குகையில் ஒரு பஞ்சமுக ஆஞ்சநேயர் சிற்பம் உள்ளது. ஆஞ்சநேயர், கருடன், வராகர், ஹயக்ரீவர், நரசிம்மர் என ஐந்து ரூபங்கள் இணைந்திருக்கும் சொரூபம் அது.
யோக மரபு மானுடனின் ஆற்றல்களைக் கூராக்கிக் கொள்ள பிராணிகளின் உடல்மொழியை பயன்படுத்திக் கொள்கிறது. ஆசனங்கள் என்பவை பிராணிகளின் உடல்மொழியைக் கருவாய்க் கொண்டு வடிவமைக்கப்பட்டவையே.
ஹயக்ரீவர் குதிரைமுகம் கொண்டவர். ஞானத்தை அருளுபவர். ஒன்றிலிருந்து இன்னொன்று என விரையும் மன ஆற்ற்லின் மீது ஆளுமை செலுத்தக் கூடியவர். நேற்று திருவஹீந்திரபுரம் தேவநாத பெருமாளைச் சேவிக்க சென்றிருந்தேன். தீபாவளிக்கு முதல் நாள் என்பதால் ஆலயத்தில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
ஆலயத்தில் அதிக நேரம் இருக்க வாய்ப்பு கிடைத்தது. ஆலயங்களில் குறைந்தது இரண்டு மணி நேரமாவது இருக்க வேண்டும் என நான் விரும்புவேன்.
ஆலயத்தில் ஒரு ராமர் சன்னிதி. ‘’நடையில் நின்றுயர் நாயகன்’’ என கம்பன் சொன்ன ராமன். கன்னங்கரு கல்லில் கருமை அடர்ந்து மின்னிக் கொண்டிருந்தான் ஸ்ரீராமன்.
தேவநாத சுவாமி சன்னிதிக்கு எதிர்ப்பக்கம் ஒரு சிறு குன்றின் மேலே ஹயக்ரீவ சுவாமிக்கு சன்னிதி உள்ளது. அங்கும் சேவித்தேன். இரவு ஊர் திரும்பும் போது மணி 11.45 ஆகி விட்டது.