Wednesday 21 December 2022

சிறுதுளிகள் - பெருவெள்ளம்

 “உன் படைக்கலம் உனது மூன்றாவது கரமும் இரண்டாவது மனமும் முதல்தெய்வமும் ஆகட்டும்.’’ - வெண்முரசு 

அறிவு அற்றம் காக்கும் கருவி என்கிறார் திருவள்ளுவர். கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பெரும் படைப்பாளிகள் இயங்கிய உயர்தனிச்செம்மொழியான தமிழ் இன்று தனது மக்கள்தொகையில் கொண்டிருக்கும் இலக்கிய வாசகர்களின் எண்ணிக்கை என்பது பெரியது அல்ல; போதுமானதும் அல்ல. தமிழில் வாசிப்புச் சூழல் என்பது பெரிதாக மேம்பட வேண்டும். சாத்தியமுள்ள வழிகளில் எல்லாம் வாசிப்பும் வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும்.  

தமிழ்நாட்டின் கல்வி அமைப்பில் நூல் வாசிப்புக்கு இடம் இல்லை. எனவே கல்வியின் ஒரு பகுதியாக நூல்களை வாசிக்கும் வாய்ப்பு தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வாய்ப்பதில்லை. மிக தற்செயலாகவே மிகச் சிலர் நூல்களை நோக்கியும் வாசிப்பை நோக்கியும் வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் நூல்களையும் நூல் வாசிப்பையும் முன்வைத்து பல்வேறு பண்பாட்டு முன்னெடுப்புகள் நிகழ வேண்டியது மிகவும் அவசியமானது. 

சில ஆண்டுகளுக்கு முன், தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரும் காந்தியவாதியுமான எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் முன்னெடுத்த ‘’ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்’’ மிக முக்கியமான ஒன்று. அந்த முன்னெடுப்பு தொடர்ந்து நிகழ வேண்டும். அது குறியீட்டுரீதியானது என்பதால் அதன் பயனும் விளைவுகளும் உடன் பிரத்யட்சமாகத் தெரியாது எனினும் அவற்றின் நெடுங்கால விளைவுகளை நம்மால் அனுமானிக்க முடியும். 

சுனில் தனது முதல் முயற்சியில் வலுவான ஒரு நல்ல துவக்கத்தை உருவாக்கினார். அது ஒரு நல்விதை. அதனை விருட்சமாக இப்போது மேலும் பல அம்சங்களுடன் வளர்த்தெடுக்க முடியும். திரு. சுனில் கிருஷ்ணன் பரிசீலனைக்கு சில விஷயங்களை முன்வைக்கிறேன். 

’’ஒன்று கூடி சிந்தியுங்கள் ; சேர்ந்து அமர்ந்து விவாதம் செய்யுங்கள். உங்கள் மனம் ஒன்றாகட்டும் ‘’ என்பது மறைமுடிபின் பிராத்தனை. 

பலரும் ஆயிரம் மணி நேர வாசிப்பை எட்ட உதவும் சில யோசனைகள் : 

1. ஆயிரம் மணி நேர வாசிப்பு என்பது ஓர் இலக்கிய வாசகனுக்கு பெரும் கொண்டாட்டம். எந்த இலக்கிய வாசகனும் அந்த சவாலை ஏற்க வேண்டும் என்பதையும் தானும் வாசிக்க வேண்டும் என்பதையும் விரும்புவான். எனவே ஆக சாத்தியாமான எல்லா வாசகர்களையும் பங்கெடுக்க வைக்கும் விதமாக செயல்பாட்டின் வடிவமைப்பு உருவாக்கப்பட வேண்டும்

2. 2023ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் துவங்க இருக்கிறது. இந்த காலகட்டத்தில் பலரும் ஒரு புதிய ஆண்டில் தங்களுக்கு நலம் பயக்கும் நற்செயல்கள் பலவற்றைத் துவங்க விரும்புவார்கள். அவர்களுக்கு இந்த ஆயிரம் மணி நேர வாசிப்பு என்பது வரப்பிரசாதமாக அமையும். ஒரு ஆண்டு - ஆயிரம் மணி நேர வாசிப்பு என்பது எவராலும் விரும்பப்படும் ஒன்றாக அமையும். எனவே வாசிப்பு சவால் ஒரு ஆண்டில் ஆயிரம் மணி நேர வாசிப்பு என்பதாக அமைந்தால் சிறப்பாக இருக்கும். 

3. ஒருவர் நூல்களை வாசிக்கும் முறையும் அவரது வாசிப்பு நேரத்தில் தாக்கம் ஏற்படுத்தும். நூல் வாசிப்பு நமது உணர்ச்சிநிலையையுடனும் மனநிலையையுடனும் நேரடியாகத் தொடர்பு கொண்டது என்பதால் அதில் எவ்விதம் ஒரு சமநிலையைப் பேணுவது என்பதற்கான எளிய வழிகாட்டல்கள் பங்கு பெறும் வாசகர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆண்டு முழுதும் எல்லா பங்கேற்பாளர்களும் விடுபடல் இன்றி பங்கேற்பதை அது உறுதி செய்யும். 

4. நூல் பரிந்துரைகள் வாசகர் கவனத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இந்த நூல் பரிந்துரைகள் சவாலில் பங்கேற்கும் வாசகர்களுக்கு மட்டும் இன்றி எல்லா வாசகர்களுக்குமே பயன் விளைவிக்கும். சங்க இலக்கியம், கம்பராமாயணம், நாலாயிர திவ்யப் பிரபந்தம், பன்னிரு திருமுறைகள், குமரகுருபரர், தாயுமானவர், உ.வே.சாமிநாத ஐயர், அயோத்திதாசர் படைப்புகள்,  பாரதி படைப்புகள், நவீன தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் முழுத் தொகுப்புகள், எழுத்தாளர் ஜெயமோகன் ‘’கண்ணீரைப் பின் தொடர்தல்’’ நூலில் குறிப்பிட்டுள்ள தேசிய புத்தக நிறுவனம் மற்றும் சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ள நூல்கள், கார்ல் மார்க்ஸ்ஸின் ‘’மூலதனம்’’, தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதியுள்ள நூல்கள், சுவாமி சித்பவானந்தரின் நூல்கள்,  ஜெயமோகன் தனது இணைய தளத்தில் இந்திய வரலாறு குறித்து வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியலாக அளித்த ‘’வரலாற்றை வாசிக்க’’ என்ற தலைப்பில் அளித்த பட்டியலில் உள்ள நூல்கள், அறிஞர் தரம்பாலின் நூல்கள், மகாத்மா காந்தி முழுத் தொகுப்பு, ராகுல் சாங்கிருத்யாயனின் நூல்கள், ருஷ்ய நாவல்கள், அமெரிக்க நாவல்கள், ஐரோப்பிய நாவல்கள், பொருளியல் நூல்கள், சூழியல் நூல்கள், தன்வரலாறுகள், சரிதங்கள் என வெவ்வேறு விதமான தன்மை கொண்ட நூல்களின் பட்டியல் சவால் துவங்கும் முன் பிரசுரிக்கப்படும் எனில் அந்த பட்டியலின் வசீகரம் பலரை ஈர்க்கக்கூடும். அந்த ஈர்ப்பு பலரை இந்த சவாலின் உள்ளே கொண்டு வரும். 

5. இந்த பெரும் பட்டியலில் தனக்கு உவப்பானதாக இருக்கும் ஒரு தொகுப்பை வாசகன் மனதில் உருவாக்கிக் கொண்டு அந்த நூல்களை வாசகன் வாசிக்கத் தொடங்குவான். அவனுடைய செல்திசையைத் தேர்ந்தெடுக்க அந்த பட்டியல் உதவும். 

6. 365 நாட்களில் ஆயிரம் மணி நேர வாசிப்பு என்பது சற்று முயன்றால் சாத்தியம்தான் என்ற எண்ணத்தை அனைவரிடமும் உண்டாக்கும். அது உண்மையும் கூட. 

7. இந்த 365 நாட்களில் 365 நாட்களும் வாசிப்பு நிகழ வேண்டும் என்பதை ஒரு முக்கிய விதியாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் பங்கேற்பாளர்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது வாசிக்க வேண்டும் என்ற விதியையையும் அதில் இணைத்துக் கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத வாழ்க்கைச் சூழ்நிலைகளால் ஏதேனும் சில நாட்கள் தவறி விடுமாயின் அதனை ஈடு செய்ய தவற விட்ட ஒரு மணி நேரத்துக்கு ஈடு வாசிப்பாக இரண்டு மணி நேர வாசிப்பை மேற்கொள்ள வேண்டும். 

உதாரணத்துக்கு ஒருவரால் 365 நாளில் 25 நாள் வாசிக்க முடியாமல் போய்விட்டால் ஈடு வாசிப்பு என்ற கணக்கில் 50 மணி நேரம் வாசிக்க வேண்டும் என அமைத்துக் கொள்ளலாம். 

மேலும் ஈடு வாசிப்பை முன்கூட்டியே கூட நிகழ்த்தி வரவில் வைத்துக் கொள்ளலாம். 

8. விருப்பம் உள்ள வாசகர்கள் ஒரு நாளில் மூன்று மணி நேரம் வாசிக்கிறார்கள் என்றால் அதற்கும் ஒரு தனி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.  எல்லா வாசகர்களும் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் என்ற உறுதியை மேற்கொண்டிருப்பது போல இந்த வாசகர்கள் ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம் என்ற உறுதியை மேற்கொண்டவர்கள். இவர்கள் வாசிப்பில் சில நாட்களைத் தவற விட்டால் அவர்களின் ஈடு வாசிப்பு மூன்று மணி நேரத்துக்கு ஆறு மணி நேரம். 

9. ஒவ்வொருவரும் எத்தனை மணி நேரம் வாசிக்கிறார்கள் என்பதை நிகழ்வின் அமைப்பாளர்கள் மட்டும் அறிந்தால் போதுமானது. அனைத்து பங்கேற்பாளர்களும் ஆண்டு முழுவதும் உற்சாகமாகப் பங்கு பெற அது உதவும். சவால் நிறைவு பெற்றதும் ஒவ்வொருவரும் எவ்வளவு நேரம் வாசித்திருக்கிறார்கள் என்பதை அறிவித்தால் போதுமானது. 

10. வாசிப்பு சவாலின் பொது வாசிப்பு நேரமாக ஒரு நேரத்தை நிர்ணயம் செய்து கொள்ளலாம். உதாரணத்துக்கு காலை 5.30 லிருந்து 7 மணி வரை மேலும் இரவு 8 மணியிலிருந்து 9.30 மணி வரை என்னும் நேரத்தை வாசிப்பு சவாலின் பொது வாசிப்பு நேரமாக அறிவிக்கலாம். பங்கேற்பாளர்கள் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் அவரவர் இடத்தில் இருந்த படி மானசீகமாக பலருடன் இணையும் வாய்ப்பை இந்த பொது நேரம் வழங்கும். இந்த நேரத்தில் தான் வாசிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. அவரவர்க்கு வசதியான நேரத்தில் வாசிக்கலாம். 

11. மாதத்தில் ஏதேனும் இரு தினங்களை முழு வாசிப்புக்கான தினங்களாக அறிவிக்கலாம். அந்த தினத்தில் 12 மணி நேர வாசிப்பை நிகழ்த்திக் கொள்ளலாம். காலை 5 மணியிலிருந்து 8 மணி வரை. காலை 10 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை. மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணி வரை. மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை. 

12. இந்த சவால் ஒரு கூட்டுமுயற்சியாக மேற்கொள்ளப்பட வேண்டியது. பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் துணையாயிருந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து அனைவரும் சேர்ந்து ஒரு பெரும் இலக்கை எட்டும் வகையிலானது. பங்கேற்பாளர் முழு வருடமும் வருடத்தின் ஒவ்வொரு நாளும் இந்த வாசிப்பு நிகழ்வில் பங்கு கொள்வது என்பதே இந்த வடிவமைப்பின் சிறப்பு. ஒரே நோக்கம் நோக்கி ப்லரும் முன்னேறுகையில் இந்த விஷயம் மேலும் அடர்த்தியும் தீவிரமும் கொண்டதாகிறது. 

வாசகர்கள் பலருக்கு வெண்முரசை வாசிக்கத் துவங்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். வெண்முரசு வாசகர்கள் பலருக்கு வெண்முரசை மீள்வாசிப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கம்பன் பாடல்களை வாசிக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள் இருப்பார்கள். ‘’ஸ்ரீமஹாபாரத பர்வங்கள்’’ ஐயும் அரசனின் மொழிபெயர்ப்பான மகாபாரதத்தையும் வாசித்து பூர்த்தி செய்ய சிலர் விரும்புவார்கள். ‘’மூலதனம்’’ முழுமையாக வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஒரு துவக்கத்துக்காகக் காத்திருப்பார்கள். ஓராண்டில் மகாத்மா காந்தியின் முழுத் தொகுப்பையும் வாசிக்கத் துவங்கினால் நிறைவு செய்ய முடியுமே என்ற நம்பிக்கையுடன் இருப்பவர்கள் பலர் இருக்கக் கூடும். 

இந்த எண்ணங்களும் விதிமுறைகளும் நிலவைச் சுட்டும் விரல் மட்டுமே. ஓராண்டில் பல வாசகர்களுக்கு ஆயிரம் மணி நேரம் வாசிப்பை சாத்தியமாக்க வேண்டும் என்பதே இதன் இலக்கு.