Monday 10 April 2023

நூறு நாட்கள்

 ஜனவரி 31 பிப்ரவரி 28 மார்ச் 31 இப்போது ஏப்ரலில் 10 தேதி என ‘’1111 மணி நேர வாசிப்பு ‘’ நூறு நாட்களை எட்டியுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணி நேரம் வாசித்திருக்கிறேன். நூறு நாட்களிலும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் வாசிக்க வேண்டிய ஒரு மணி நேரம் என்ற இலக்கை விடுபடல் இன்றி வாசித்திருக்கிறேன். சில நாட்களில் அதிகபட்சமாக ஒன்பது மணி நேரம் வரை வாசிப்பு நீண்டிருக்கிறது. 

ஒரு தமிழ் வாசகனுக்கு தமிழ் இரண்டாயிரம் ஆண்டு தொன்மையான பிரதியிலிருந்து இன்று எழுதப்படும் பிரதி வரை என மிக நீண்ட காலபரப்பை வழங்குகிறது. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு ; ஒவ்வொரு தனித்தன்மை. சமஸ்கிருதம் தமிழ் அளவுக்கே தொன்மையான மொழி. இந்திய நிலத்தின் எல்லா மொழிகளுடனும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் உரையாடலில் உள்ள மொழி. ஆங்கில மொழி அறிந்த வாசகனுக்கு உலகின் எல்லா மொழிகளிலும் எழுதப்பட்ட நூல்களை ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அறிவுச் செயல்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் எந்த மொழி மீதும் துவேஷம் கொள்ள மாட்டார்கள். 

இந்த நூறு நாட்கள் எனக்கு என்னுடைய பால பருவத்தின் வாசிப்பை நினைவில் கொண்டு வந்தன. என்னுடைய ஐந்து வயதில் நான் ‘’தினமணி’’ செய்தித்தாளை எழுத்துக் கூட்டி வாசிப்பேன். மாலை பள்ளி சென்று வீடு திரும்பிய பின் செய்தித்தாளை சோஃபாவில் அமர்ந்து வாசிப்பேன். வீட்டுக்கு வரும் உறவினர்கள் அதனை ஆர்வத்துடன் பார்ப்பது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. வீட்டில் பூந்தளிர் கோகுலம் ஆகிய குழந்தைகள் இதழ்கள் வாங்குவார்கள். அவற்றை முழுமையாக வாசிப்பேன். வாசித்த பழைய இதழ்களை மீண்டும் மீண்டும் வாசிப்பேன். ‘’வாண்டு மாமா’’வின் எழுத்துக்களை மிகவும் விரும்புவேன். பல முக மன்னன் ஜோ, கபீஷ் ஆகிய சித்திரக் கதைகளும் அதன் கதாபாத்திரங்களும் என்னால் மிக அணுக்கமாக உணரப்பட்டன.

என்னுடைய பத்து வயதில் ‘’பொன்னியின் செல்வன்’’ வாசித்தேன். பைண்டு செய்யப்பட்ட நூலின் ஐந்து பாகங்களும் ஒருசேர என் கைக்கு வந்தன. கல்கியில் தொடராக வந்ததை ஒவ்வொரு வாரமும் எடுத்து வைத்து பைண்டு செய்யப்பட்ட தொகுப்பு. ‘’ஆதி அந்தமில்லாத காலவெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி பயணிக்குமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்’’ என்னும் அழைப்புடன் கல்கி தனது நாவலைத் துவக்கியிருப்பார். சிறுவனான நான் அந்த அழைப்பை ஏற்று கல்கியின் பிரதிக்குள் நுழைந்தேன். சோழர் ஆட்சி செய்த மண், காவிரியும் அரசலாறும், வங்கக் கடல், குழகர் கோவில், கோடிக்கரை கலங்கரை விளக்கம் என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சென்று வாழ்ந்து கொண்டிருந்தேன். வந்தியத்தேவனும் அவன் குதிரையும் மறக்க இயலாமல் மனதில் நிறைந்தார்கள். அந்த பைண்டு தொகுப்பு என்னிடம் நீண்ட நாட்கள் இருந்தது. பதினைந்து வயதுக்குள் ‘’பொன்னியின் செல்வனை’’  15 முறையாவது முழுமையாக வாசித்திருக்கிறேன். எல்லா காலாண்டு அரையாண்டு முழு ஆண்டு விடுமுறையிலும் ஒருமுறை வாசிப்பேன். சாதாரண நாட்களுலும் வாசிப்பது உண்டு. அந்த காலகட்டத்தில் பலவிதமான நூல்களை வாசிக்கத் தொடங்கினேன். 

பிரதியின் மீது மனம் முழுமையாக ஈடுபடுவதே நல்வாசிப்பு. அவ்வாறு வாசிக்கும் மனம் எப்போதும் இளமையுடன் இருக்கிறது. 

இந்த காலகட்டம் கடுமையான பணிச்சுமையால் நிறைந்திருக்கிறது. தொழில் சார்ந்த பணிகள் நேரத்தை மிக அதிகமாக எடுத்துக் கொள்கின்றன. ஒரு நாளின் லௌகிகப் பணிகளுக்கான பொழுது என்பது காலை 10 மணிக்குத் துவங்கி மாலை 6 மணி வரையே. தொழில் சார்ந்த பணிகள் அந்த நேரத்துக்கு உட்பட்டவையே. வாசிப்பை காலை பொழுது புலர்ந்ததிலிருந்து இரண்டு மணி நேரமும் இரவு உறங்குவதற்கு முன் இரண்டு மணி நேரமும் என வகுத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் புத்தக வாசிப்புக்குக் கொடுக்க முடியும். 

நூறு நாட்கள் நிறைவளிக்கின்றன. மூன்றில் இரு பகுதி இன்னும் மீதம் இருக்கிறது. அவற்றை மேலும் நிறைவான விதத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்பது என் விருப்பம்.