இந்தியர்கள் ராமனை மகனாக சகோதரனாக குடிகளின் பிரியத்துக்குரிய இளவரசனாக குடிகளின் தந்தையாக விளங்கும் அரசனாகக் காண்கிறார்கள். விண்ணுருவன் மண் திகழ்ந்த வடிவம் என்றே அவனை இன்றும் கொண்டாடுகிறார்கள். ராமன் எத்தனை ராமன் என்னும் தீராவியப்பு இன்றும் இருந்து கொண்டே இருக்கிறது. ராமன் எண்ணற்ற வகைகளில் அணுகப்பட்டுக் கொண்டே இருக்கிறான்.
இத்தனை சிறப்புகள் இருந்தும் ராமன் மேலும் மேலும் என பரிமாணம் பெற்று மானுடத்துக்கு வெவ்வேறு வகைகளில் வழிகாட்டுகிறான். மகாத்மா காந்தி உலகில் ‘’ராம ராஜ்யம்’’ அமைய வேண்டும் என விரும்பினார். ராஜ்யத்தின் பிரஜைகளை தனது குழந்தைகளாக எண்ணும் அறத்தை முதன்மையாக முன்னிறுத்தும் அரசாட்சியையே மகாத்மா ‘’ராம ராஜ்யம்’’ என்றார்.
சமூகங்களின் வாழ்வு மாற்றமடைந்து முன்னேற்றம் காணும் ஒவ்வொரு காலசந்தியிலும் இராமனுடைய வாழ்வு சமூகத்துக்கு ஒவ்வொரு விதத்தில் வழிகாட்டுகிறது.
இராமன் அரசன் மட்டுமல்ல ; சாதாரண வனவாசியும் தான். தனது வாழ்வில் 14 ஆண்டுகள் ஒரு வனவாசியாக ஒரு சாதாரண பிரஜையாக வாழ்ந்திருக்கிறான். அவ்வாறு ஒரு சாதாரண மனிதனாக வாழ்ந்த காலத்தில் பெரும் துயர்களை எதிர்கொள்கிறான். எந்த மானுடனுக்கும் மிகக் கடினமான துயர்கள் அவனுக்கு நேர்கின்றன. அவற்றைத் தன் விடாமுயற்சியின் மூலம் தகர்க்கிறான். சொல்லொணாப் பெருந்துயர் அவனைச் சூழ்ந்திருக்கும் நிலையிலும் ஜடாயுவிற்கு ஈமக்கிரியைகளைச் செய்கிறான் ; சுக்ரீவனை அரசனாக்குகிறான். இலங்கையை தகுதி வாய்ந்த வீடணனுக்கு அளிக்கிறான். அவனது வாழ்வின் அரிய நிகழ்வுகளான இவற்றை நிகழ்த்தும் போது அவன் ஒரு சாதாரணக் குடிமகனே. அவ்வகையில் அவனது வாழ்வு சாமானியர்களுக்கு தங்கள் செல்திசையை உணர்த்தக் கூடியது.
ஜனநாயகம் பிரதானமாக இருக்கும் ஒரு சூழலில் ஜனநாயக நாட்டின் குடிகள் தங்கள் கடமைகளை உணர்வதற்கு இராமனின் வாழ்வு வழிகாட்டக் கூடியது.
இராமகதை எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் அனுமன் இருப்பார் என்பது இந்தியர்களின் தொன்மம். சிரஞ்சீவியான அவர் இராமகதை எவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக மக்களுக்கு வழிகாட்டுகிறது என்பதை வியந்து நோக்கிக் கொண்டிருக்கலாம்.