Wednesday, 28 June 2023

உள்ளும் புறமும்

 என்னுடைய வாழ்நிலமாகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் கிராமங்களில் பேரூராட்சிகளில் நகரப் பகுதிகளில் அரசியல் கட்சியினர் அனேகம் பேர் இருப்பார்கள். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். வீதிகளில் கொடிக் கம்பம் அமைத்து கொடி ஏற்றுபவர்கள், சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள், மாநாடு என்றால் வாகனம் ஏற்பாடு செய்து ஆதரவாளர்களை அழைத்துச் செல்பவர்கள், தேர்தல் காலங்களில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பவர்கள் என பலவிதமான பணிகளை அவர்கள் மேற்கொள்வார்கள். இவர்களில் கட்சி உறுப்பினர் அட்டை பெற்றிருப்பவர்கள் உண்டு. உறுப்பினர் அட்டை என்பது கட்சி அரசியலின் நுழைவு என அறியாதவர்களும் உண்டு. இவர்கள் அனைவருமே பெரும்பாலும் சாமானியர்கள். கட்சியிலோ அதிகாரத்திலோ எந்த பொறுப்பிலும் இல்லாதவர்களாக இருப்பார்கள். எனினும் இவர்கள் அனைவருக்குமே மானசீகமாக அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். 

ஒரு கிராமத்தின் மக்கள்தொகை 4000 என இருக்கிறது என வைத்துக் கொள்வோம். டெல்டா மாவட்டங்களில் ஒரு கிராமத்தில் 5 அல்லது 6 கட்சிகள் இருக்கும். ஒவ்வொரு கட்சியுமே அந்த கிராமத்தில் 15 லிருந்து 20 பேரை மட்டுமே உறுப்பினர்களாக வைத்திருப்பார்கள். இந்த எண்ணிக்கையையும் பரவலாக இருக்கும் 6 கட்சிகளில் 3 கட்சிக்கு மட்டுமே இருக்கும். மற்ற மூன்று கட்சிகளில் அந்த எண்ணிக்கையும் குறையும். இந்த 15 லிருந்து 20 பேரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் இரண்டு அல்லது மூன்று தனித்தனி குழுக்களாக இருப்பார்கள். ஒரே கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் இணக்கத்தை விட விலக்கமே மிகுந்திருக்கும். 

மகாத்மா காந்தி காங்கிரஸை வழிநடத்திய போது கட்சியில் ஒவ்வொரு கிராமத்திலும் மிக அதிக எண்ணிக்கையில் சாமானிய மக்களை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என விரும்பினார். கட்சி உறுப்பினர்களின் ஆண்டு சந்தாவாக ‘’நாலணா’’ ( 25 பைசா) வை நிர்ணயம் செய்தார். கட்சியின் சாமானிய உறுப்பினனுக்கும் ஜனநாயகமும் சமூக நெறிகளும் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என விரும்பினார். குடிகள் சமூகங்களாக ஒருங்கிணைவதற்கான பயிற்சியை கட்சி தன் தொண்டர்கள் அளவில் முதல் கட்டமாக பயிற்றுவிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்தார்.