Tuesday, 27 June 2023

போற்றலும் தூற்றலும்

 இளைஞனாக இருந்த நான் கட்டுமானத் தொழிலுக்கு வந்தேன். கட்டுமான இடத்தில் தொடர்ந்து ஏதேனும் செயல்கள் நடந்து கொண்டே இருக்கும். பலவிதமான ஆட்கள் இருப்பார்கள். பணியில் முழுமையான ஈடுபாட்டை செலுத்திக் கொண்டு பொறுப்பேற்று பணி செய்பவர்கள் , அன்றைய தினத்தின் பாடு என குறைவான ஈடுபாடு கொண்டு வேலை செய்பவர்கள், நேர உணர்வு மிக்கவர்கள், நேர உணர்வே இல்லாதவர்கள், தகவல் தொடர்பு இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்பவர்கள் , தகவல்களைப் பரிமாறிக் கொள்வதன் முக்கியத்துவத்தை உணராதவர்கள், உண்மையை மட்டுமே பேசுபவர்கள், உண்மைக்கு மாறானதையும் அவ்வப்போது பேசுபவர்கள் என பலவிதமான ஆட்கள் இருப்பார்கள். அவர்களுடன் தான் பணி செய்ய நேரும். உண்மையில் சில நாட்களில் எனக்கு இவ்விதமான இயல்புகளை பார்த்ததும் அறியும் தன்மை வந்து விட்டது.  கட்டுமானத் தொழிலில் விரும்பாத குணங்கள் கொண்டவர்கள் இருந்தால் கூட அவர்களை முற்றிலும் விலக்கி விட மாட்டார்கள். அவர்களுக்கு மேலும் மேலும் தங்களைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு தருவார்கள். ஒரு கட்டுமான இடத்தில் பணி புரியும் ஒருவரை குறைந்த பட்சம் அந்த இடத்தில் பணி முடியும் சில மாதங்களுக்காவது பணியிலிருந்து நீக்காமல் இருப்பார்கள். வேலை முழு வீச்சில் நடைபெறும் போது இத்தகைய மனிதக் குறைபாடுகள் அந்த வீச்சின் வேகத்திலேயே மிக மிகச் சிறியதாகி விடும். கட்டுமானத் தொழில் முழு வீச்சில் செயலாற்றுக என்னும் பாடத்தையே எப்போதும் போதிக்கும். நிறைகளைப் பெருக்கி குறைகளை இல்லாமல் ஆக்கிக் கொள்ள ஆகச் சிறந்த வழியும் அதுவே. 

மனிதர்களை அவர்கள் இருக்கும் நிலையில் ஏற்றுக் கொள்வது என்பதும் ஆற்ற நினைக்கும் பணிகளை நோக்கி முழு விசையுடன் முன்னேறிச் செல்வது என்பதும் எனது வழிமுறைகள். உடன் இருப்பவர்கள் உள்ளம் கூட நமக்கு எதிராகத் திரும்பக் கூடும். அதற்கான காரணங்கள் எண்ணற்றவை. அவை ஒவ்வொன்றின் பின்னாலும் சென்று ஆராய்ந்து கொண்டிருப்பது என்பது நேர விரயம் அன்றி வேறல்ல. 

ஒரு மனிதன் உள்ளதைச் சொல்கிறானா உள்ளதை மாற்றிச் சொல்கிறானா என்பதை கட்டுமானத் தொழிலில் இருப்பவர்கள் மிக எளிதில் உய்த்தறிந்து விடுவோம். அது பல வருட அனுபவத்தின் விளைவு. யாரேனும் உள்ளதை மாற்றிச் சொல்லி திட்டமிட்டு ஒரு விஷயத்தை குறிப்பிட்ட சில திசைக்கு நினைத்தால் உள்ளுணர்வில் ஒரு சலனம் ஏற்பட்டு மனதை எச்சரிக்கை செய்து விடும். அத்தகைய தருணங்களைக் கடந்து செல்வதற்கு எளிய மற்றும் உபயோகமான வழி எதுவும் பேசாமல் மௌனமாய் இருந்து விடுவது. 

தந்திரம் மிக்கவர்களிடம் உரையாட நேரும் போது பெரும்பாலும் மௌனமாக இருந்து விடுவது என்பது நல்ல வழிமுறை. அவர்களிடமிருந்து சற்று விலகியிருப்பது  அதனினும் சிறந்த வழிமுறை.

‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து பேசப்படும் போது பேசும் பலருக்கு ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து மாற்று கருத்துக்கள் இருக்கும் ; விமர்சனங்கள் இருக்கும் ; நக்கல் நையாண்டி கூட இருக்கும். அவர்கள் பார்ப்பதை அவர்கள் முன்வைப்பார்கள். நான் மௌனமாக கேட்டுக் கொள்வேன். இவ்வாறெல்லாம் தங்களை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்வது அவர்கள் மகிழ்ச்சி எனின் அவர்கள் அதனை அடைந்து விட்டு போகட்டும் என்றே நான் எண்ணுவேன். 

நாம் பாராட்டப்படும் போது நாம் அதனை ஏற்றுக் கொள்கிறோம் என்னும் போது சிலர் நம்மைத் தூற்றினால் அதனையும் இயல்பாக எடுத்துக் கொள்வதே நன்மை தரும். போற்றலும் நமக்கானதல்ல தூற்றலும் நம்மைச் சேர்வதல்ல என்னும் விவேகம் உண்டாகுமாயின் எத்தகைய சூழலையும் எதிர் கொள்ள அது பேருதவி புரியும். மனிதர்களை இணைக்க விரும்புபவர்களுக்கான நல்வழியும் அதுவே.