அரசியல் என்பது பெருமளவு பொருளியல். ஜனநாயக அரசியலில் சாமானியன் மிக அடிப்படையானவனும் மிக முக்கியமானவனும் என்பதால் சாமானியனுக்கு நலம் பயக்கும் செயல்களை ஒரு ஜனநாயக அரசு ஆற்ற வேண்டும். சாமானியனுக்கு நலம் பயக்கும் செயல் உற்று நோக்கினால் யாவர்க்கும் நலம் பயக்கும் செயலும் ஆகும்.
‘’காவிரி போற்றுதும்’’ அமைப்பாளனாக நான் கிராமம் குறித்து கிராமத்தில் நிலவும் வழக்கங்கள் குறித்து எப்போதுமே யோசிப்பேன். என் மனதில் ஒரு பகுதியில் கிராமம் குறித்த எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். ஒரு எண்ணம் தோன்றியதும் அதைக் குறித்து கிராமத்தில் உள்ள நண்பர்களிடம் கேட்பேன். அவர்கள் என் எண்ணம் குறித்து தங்கள் அபிப்ராயங்களையும் வழக்கத்தில் உள்ள நடைமுறைகளையும் கூறுவார்கள். சற்று தள்ளியிருந்து யோசிப்பதால் என்னால் அவர்கள் காணாத நோக்கிலிருந்தும் அவர்கள் அணுகாத கோணத்திலிருந்தும் சில விஷயங்களை அணுகிட முடியும்.
சமீபத்தில் ஒரு விஷயம் யோசித்தேன்.
அதாவது , ஒரு கிராமத்தில் 600 வீடுகள் இருக்கிறது என வைத்துக் கொண்டால் அதில் அதிகபட்சம் 100 வீடுகளில் ஆடு வளர்ப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் அதிகபட்சமாக 6 ஆடுகள் வளர்க்கப்படுகிறது எனக் கொண்டால் மொத்தம் 600 ஆடுகள். இது அதிகபட்ச எண்ணிக்கை. ஒரு கிராமத்தில் சராசரியாக 250 லிருந்து 350 ஆடுகள் இருக்கவே வாய்ப்பு அதிகம். எனினும் நாம் 600 ஆடுகள் என்றே கொள்வோம். இந்த 600 ஆடுகளும் விற்பனை செய்யப்படுவதாகக் கொண்டால் ஒரு ஆட்டின் விலை ரூ.5000 என 600 ஆடுகளால் ரூ. 30,00,000 கிடைக்கும். ஆடுகள் இரண்டு ஆண்டில் விற்பனை செய்யப்பட்டால் ஆண்டுக்கு ரூ. 15,00,000.
ஒரு கிராமத்தில் விளைநிலம் என 600 ஏக்கர் இருக்கும். அந்த 600 ஏக்கர் நிலத்தில் வரப்பின் பரப்பு என 12 ஏக்கர் கிடைக்கும். இந்த வரப்பில் மொச்சை , பயறு ஆகியவை விதைத்தால் 7200 கிலோ கிடைக்கும். இரண்டு போகம் என்று கணக்கிட்டால் 14,400 கிலோ. மொச்சையின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.100 எனில் ஆண்டுக்கு தோராயமாக ரூ. 15,00,000.
ஒரு ஜனநாயக அரசு என்ன செய்ய வேண்டும் ? ஒரு ஜனநாயக அரசு ஆடு வளர்ப்பையும் ஊக்குவிக்க வேண்டும். அதே நேரத்தில் வரப்புகளில் பயறு , பருப்பு வகைகளை வளர்ப்பதையும் ஊக்குவிக்க வேண்டும்.
டெல்டாவில் விவசாயிகள் வரப்புகளில் பயறு வகைகளை முன்னர் பயிரிட்டிருக்கின்றனர். இப்போது பயிரிடுவதில்லை. ஆடுகள் மேய்ந்து விடுகின்றன என்பதே காரணம்.
நமது நாடு பயறு, பருப்பு வகைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. நமது அன்னியச் செலாவணியில் கணிசமான தொகை அதற்கு செலவாகிறது.
டெல்டா கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் ஆடுகள் பயிரை மேயாத வண்ணம் ஒழுங்குபடுத்துமானால் ஆடு வளர்ப்பவர்களும் பயனடைவார்கள். சாமானிய விவசாயக் குடும்பங்கள் அனைத்தும் பலனடையும். இரண்டு வகையிலும் கிராமத்துக்குப் பொருளியல் பலன் கிடைக்கும்.
நான் இவ்வாறனவை அரசியலின் அம்சங்கள் என்றே கருதுகிறேன். ஒரு ஜனநாயக அரசு இவ்வாறான விஷயங்களை உற்று நோக்கி செயல்பட வேண்டும் என்று கருதுகிறேன்.