ஜெ.ராம்கி ‘’பத்மநாபா படுகொலை’’ என்ற நூலை எழுதியுள்ளார். சென்னை சூளைமேட்டில் நடந்த இலங்கைத் தமிழர் தலைவர் பத்மநாபா படுகொலை செய்யப்பட்டது குறித்து அவர் படுகொலை செய்யப்பட்டு முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் இந்த நூல் வெளியாகியிருக்கிறது. இன்றும் தமிழக மேடைகளில் உரத்து ஒலிக்கும் இலங்கைப் பிரச்சனை குறித்த பேரோசைகளுக்கு மத்தியில் ஜனநாயகத்தின் மாண்புகளை நம்பிய ஒரு மக்கள் தலைவன் எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதை விளக்குவதுடன் எதற்காக கொல்லப்பட்டான் என்பதையும் விளக்குகிறது.
1989ம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க அரசு பதவியேற்ற பிறகு அதன் ஆசிகளுடன் அனுமதியுடன் எவ்விதம் தமிழகம் விடுதலைப்புலிகளுக்கு திறந்து விடப்பட்டிருந்தது என்பதன் சித்திரத்தை ஜெ. ராம்கி தன் நூலில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். ஆட்சி அமைந்து 50 நாட்களுக்குள் தி.மு.க வின் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த வை.கோபால்சாமி இலங்கைக்கு அரசாங்க அனுமதி இல்லாமல் சென்றது ; அன்றைய இந்தியப் பிரதமர் சந்திரசேகர் சென்னைக்கு தில்லியிலிருந்து தெரிவிக்கப்படும் எந்த ஒரு தகவலும் யாழ்ப்பாணத்தை எட்டி விடுகிறது எனக் கூறியது ; பத்மநாபா படுகொலை செய்யப்பட்ட போது தமிழக அரசு இதில் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்பில்லை எனச் சொல்ல அப்போது தில்லியிலிருந்த அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி இதில் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்பிருக்கக் கூடும் என்று கூறியதால் வெளிப்பட்ட மாநில அரசின் இரு வேறு நிலைகள் என பல விஷயங்களை நூல் முழுதும் சுட்டிக் காட்டிய வண்ணம் செல்கிறார்.
விடுதலைப் புலிகள் தமிழகத்தில் எவ்வாறு கள்ளக்கடத்தல் தொடர்புவலையை உருவாக்கி வைத்திருந்தார்கள் என்பதையும் தங்கள் பரப்புரை நோக்கங்களை எவ்விதம் நிறைவேற்றிக் கொண்டார்கள் என்பதையும் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஜெ.ராம்கி.
இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் விளைவான வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு எவ்விதம் இலங்கைப் பிரச்சனைக்கான ஓர் உபயோகமான தீர்வாக அமைந்திருக்கும் என்பதற்கு பல காரணங்களை இந்நூல் எடுத்துரைக்கிறது.
தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் பத்மநாபா படுகொலைக்குப் பின் நிகழ்ந்த பத்மநாபாவின் இரங்கல் கூட்டத்தில் ஆற்றிய உரையின் பெரும் பகுதி இந்நூலில் அச்சாகி உள்ளது. ஜெயகாந்தன் விடுதலைப் புலிகளைக் குறித்தும் அவர்களின் சர்வாதிகார மனோபாவம் குறித்தும் பேசிய வார்த்தைகளை காலம் உண்மையென நிரூபித்தது.
ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்ட ஒரு மனிதரின் படுகொலை குறித்து முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட இந்நூல் பத்மநாபாவுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலியும் கூட.
நூல் : பத்மநாபா படுகொலை ஆசிரியர் : ஜெ. ராம்கி பக்கம் : 136 விலை : ரூ.160 பதிப்பகம் : சுவாசம் பதிப்பகம், 52/2, பி.எஸ் மஹால் அருகில், பொன்மார், சென்னை - 127. swasambookart (dot) com