Friday, 21 July 2023

நூறு எலுமிச்சைகள்

இரண்டு நாட்களுக்கு முன்னால் வெளியூரில் வேலை பார்க்கும் எனது பள்ளித் தோழர் ஊருக்கு வந்திருந்தார். அவரை தற்செயலாக சந்தித்தேன். சில வாரங்களுக்கு முன்னால் அவரது தந்தை 90 வயதில் இயற்கை எய்தினார். அவர் இறந்த சில மணி நேரங்களில் எனக்கு செய்தி வந்தது.  நண்பரின் தந்தை மிகவும் இனிய மனிதர். பல விஷயங்களில் தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்டவர். நண்பர் தந்தையின் மறைவால் மனவருத்தத்துடன் இருந்தார். 90 வயது என்பது நிறை ஆயுள் என்பதால் வருத்தம் கொள்ளாதீர்கள் என்று ஆறுதல் சொன்னேன். 

உரையாடிப் பிரியும் நேரம் வந்த போது நண்பரிடம் அவரது தந்தையின் நினைவாக நூறு மரக்கன்றுகள் நடுவோமா என்று கேட்டேன். நண்பர் மிகவும் உற்சாகமாகி விட்டார். எவ்வளவு தொகை செலவாகும் என்று கேட்டார். ரூ. 1500 ஆகும் என்று சொன்னேன். அடுத்த நாள் என் கணக்குக்கு பணம் அனுப்புவதாகக் கூறி எனது வங்கிக் கணக்கு எண்ணை வாங்கிக் கொண்டார். 

செயல் புரியும் கிராமத்துக்கு ஃபோன் செய்து நூறு மரக்கன்றுகள் நட ஊரில் எந்த இடம் பொருத்தமாக இருக்கும் ; என்ன மரக்கன்றுகள் பொருத்தமாக இருக்கும் என்று வினவினேன். ஒரு விவசாயி தனது நண்பரின் களம் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கே நூறு எலுமிச்சைகளை நடலாம் என்று சொன்னார். அந்த விவசாயிடம் தகவல் கூறி அவருடைய விருப்பத்தைக் கேட்டு என்னிடம் கூறுங்கள் என்று சொன்னேன். 

நேற்று நண்பர் தொகையை என்னுடைய கணக்குக்கு அனுப்பியதன் குறுஞ்செய்தி வந்தது. நண்பருக்கு நன்றி தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பி விட்டு 100 எலுமிச்சை மரக்கன்றுகளை வாங்க காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். நர்சரிக்கு சென்றதும் ‘’என்ன சார் ! ரொம்ப நாளாக உங்களைப் பார்க்க முடியவில்லை’’ என்றார்கள். சமீபத்தில் தானே நெல்லிக்கன்றுகள் வாங்கிச் சென்றேன் என ஞாபகப்படுத்தினேன். ’’காவிரி போற்றுதும்’’ மீண்டும் மீண்டும் வர வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். மானசீகமாக உடன் இருக்கிறார்கள். அவர்களிடம் நிகழும் நடவடிக்கைகள் குறித்து கூறி விட்டு மரக்கன்றுகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு விடை பெற்றேன். 

ஊர் எல்லையை அடைந்ததும் விவசாயிக்கு ஃபோன் செய்தேன். அவர் மோட்டார்சைக்கிளில் வந்து தனது வயலுக்கு அழைத்துச் சென்றார். இளைஞர். ஆர்வத்துடன் விவசாயம் செய்கிறார். வயலின் ஒரு பகுதியில் தேக்கு பயிரிடுமாறு ஆலோசனை சொன்னேன். அது நான் எப்போதும் சொல்வது. அவரை ஐ.டி நிறுவன ஊழியரின் தேக்கு வயலுக்கு அழைத்துச் சென்று காட்டுவதாகக் கூறினேன். 

‘’காவிரி போற்றுதும்’’ அணுகுமுறை என்பது கிராமத்தில் விவசாயிகளின் சொந்த இடத்தில் அவர்கள் நெல் விவசாயம் செய்தது போக மீதி உள்ள இடங்களில் எத்தனை மரங்களை வளர்க்க முடியுமோ அத்தனை மரங்களை வளர்க்கச் செய்ய வேண்டும் என்பதே. வேலி அமைக்க வசதி இல்லை என நினைப்பவர்கள் நந்தியாவட்டை , அரளி ஆகிய ஆடு மேயாத மரக்கன்றுகளை வளர்க்கலாம். மா, பலா, நெல்லி,கொய்யா, பப்பாளி, நாவல் ஆகிய பழமரங்களை நடலாம். ஒரு கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஆக சாத்தியமான மரங்கள் நடப்பட வேண்டும் என்பதே ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பம். 

மரம் நடுதல் என்பது உணர்வுபூர்வமான செயல். உண்மையில் மரம் நடக்கூடிய ஒருவர் தன் ஆழ்மனத்தால் எப்போதும் தான் நட்ட ம்ரத்தின் வளர்ச்சியை கவனித்துக் கொண்டே இருக்கிறார். அது அந்த மரத்துடன் உணர்ச்சிகரமான ஒரு தொடர்பை உண்டாக்குகிறது. மனதில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொண்டு வருகிறது. அவ்விதமாக உணர்வுபூர்வமாக மரங்களுடன் தன்னை பிணைத்துக் கொண்டவர்களின் சூழல் பிரக்ஞை சிறப்பானதாக இருக்கும். அவர்கள் வாழும் கிராமம் சுற்றுச்சூழலுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை அளிப்பதாய் மாறும். ‘’காவிரி போற்றுதும்’’ அதனால் தான் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை அளிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. 

விவசாயி நண்பர் நாளை தனது களத்தில் நூறு எலுமிச்சை மரங்களை நட உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்தார். நடும் போது உடனிருக்குமாறு கேட்டுக் கொண்டார்.