Friday, 11 August 2023

நிலமும் மொழியும்

எழுத்தாளர் ஜெயமோகன் இந்திய நிலத்தில் பெரும் பயணம் மேற்கொள்ள விரும்புவர்களுக்கு ஒரு விஷயத்தைப் பரிந்துரைப்பதுண்டு. அதாவது, எந்த நிலம் நோக்கி நாம் செல்ல விரும்புகிறோமோ அந்த நிலத்தின் இலக்கியம் ஒன்றை வாசிக்க வேண்டும். ஒரு படைப்பாளியின் மொழியில் வெளிப்படும் நிலம் நம் அகத்தில் நிறைந்ததன் பின் அந்த நிலத்துக்கு நாம் செல்வோமோயின் அந்த அனுபவம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்பதுடன் அந்த நிலம் நம் நிலம் என்னும் உணர்வை உருவாக்கித் தரும்.  

நான் இந்திய நிலத்தில் கணிசமான பகுதிகளில் பயணித்திருக்கிறேன். என் பயணத்திற்கு முன் பெரும்பாலான இந்திய நாவல்களை வாசித்திருந்தேன். ‘’கண்ணீரைப் பின்தொடர்தல்’’ நூலில் ஜெயமோகன் அளித்த பட்டியலில் உள்ள கணிசமான நாவல்களை வாசித்திருந்தது எனது இந்தியப் பயணத்துக்கு பெரும் துணை புரிந்தது. 

கேரள நிலம் எனில் தகழியின் ‘’செம்மீன்’’ அல்லது கோவிலனின் ‘’தட்டகம்’’ , கர்நாடகப் பிராந்தியம் என்றால் சிவராம காரந்தின் ‘’மண்ணும் மனிதரும்’’ பைரப்பாவின் ‘’ஒரு குடும்பம் சிதைகிறது’’. மராட்டியத்துக்கு வெங்கடேஷ் மாட்கூல்கர் ( பன்கர்வாடி நாவல்) . ராஜஸ்தான் , உத்திரப் பிரதேசம் என்றால் சதுரங்கக் குதிரைகள் நாவலின் கிரிராஜ் கிஷோர் சொற்கள் வழியாகவே அவை நினைவில் பதியும். உத்திரப் பிரதேசத்தின் மைய நிலத்துக்கு குர் அதுல் ஐன் ஹைதரின் சொற்கள்.  தமிழ் எழுத்தாளர் அஜிதனின் மொழியில் ’’மைத்ரி’’ வாசித்து விட்டு உத்தரகண்ட் செல்வோமெனில் அது அளிக்கும் உணர்வே தனி. 

இந்த நிலங்களுக்கு நான் சென்ற போது அந்த மொழியில் நான் வாசித்த ஆசிரியர்களின் சொற்களில் தீட்டப்பட்டிருந்த கிராமங்களும் நகரங்களும் யதார்த்தத்தில் கண் முன் எழுந்து வந்தன. அவ்வாறு எழுந்து வந்த போது இந்த ஊர்கள் எனக்கு மிகவும் பரிச்சயமானவை ; நான் எப்போதோ வசித்த ஊர்கள் என்ற எண்ணம் உருவானது அந்த நிலங்களை அகத்தில் மிக அணுக்கம் கொண்ட ஒன்றாக உணர வைத்தது. 

சமீபத்தில் நண்பர் ஒருவருடன் இந்த விஷயம் குறித்து  பேசிக் கொண்டிருந்தேன். நண்பரிடம் ஒரு திருஷ்டாந்தம் சொன்னேன். 

’’நண்பரே ! தமிழகம் காண பஞ்சாபிலிருந்தோ ஹிமாச்சல் பிரதேசத்திலிருந்தோ ஒருவர் வருகிறார். தமிழகம் காண அவர் வாசிக்க வேண்டிய நாவல் அல்லது நாவல்கள் என எவற்றை அவருக்குப் பரிந்துரைக்க வேண்டும்’’ என்ற வினாவை எழுப்பினேன். 

நண்பர் அமைதியாக யோசித்தார். 

‘’இது ஒரு திருஷ்டாந்தம்தான் எனவே இன்று வரை ஹிந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ மொழிபெயர்க்கப்படவில்லை என்றாலும் எதிர்காலத்தில் நிகழும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் உங்கள் தெரிவுகளைத் தெரிவியுங்கள் ‘’ என்று நண்பரிடம் சொன்னேன். 

நண்பரின் மௌனம் கலையவில்லை. 

என் மனம் அதற்குள் சர சர என யோசித்திருந்தது. நான் முதலில் சொன்னேன். 

’’தமிழ் நிலமும் தமிழ் அகமும் அறிய எவரும் முதலில் வாசிக்க வேண்டிய நாவல் கொற்றவை. அதன் பின் விஷ்ணுபுரம். அதற்குப் பின்னால் வெண்முரசு’’

இந்த மூன்று நாவல்களை வாசித்து விட்டு ஒருவர் தமிழகத்தில் பயணிப்பார் எனில் அவரால் தமிழ் அகத்தையும் தமிழகத்தையும் அணுகி நெருக்கமாக அறிய முடியும். 

நான் கூறியவை நண்பர் மனத்தில் பல்வேறு விஷயங்களை கிளறி எழச் செய்திருக்கின்றன என்பதை அறிந்து கொண்டேன். நண்பரிடம் இந்த பட்டியலில் ஜெயமோகன் அல்லாத மற்ற படைப்பாளிகளின் நூல்கள் எவை எவை சேரக் கூடும் என்று கேட்டேன். 

பின்னர் நான் இரண்டு நூல்களைக் கூறினேன். கி. ராஜநாராயணனின் ‘’கோபல்ல கிராமம்’’ மற்றும் சுந்தர ராமசாமியின் ‘’ஒரு புளியமரத்தின் கதை’’