Monday 11 September 2023

அன்புள்ள நண்பனுக்கு

 அன்புள்ள நண்பனுக்கு,

இந்த ஒரு வாரம் என்பது மறக்க இயலாத பயணங்களாலும் உரையாடல்களாலும் இனிய நினைவுகளாலும் ஆனதாக இருந்தது. பழைய தென்னாற்காடு மாவட்டத்தின் நிலப்பரப்புகளில் அதன் நிலக்காட்சிகளைக் கண்டவாறு அலைந்தோம். நாம் கண்ட பகுதிகள் வானம் பார்த்த பூமி. வட கிழக்கு பருவ மழையை மட்டுமே நம்பியிருக்கும் பகுதிகள். அங்குள்ள விவசாயிகள் கடுமையான உழைப்பாளிகள். பொதுவாகவே தண்ணீர் குறைவாக இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையான உடல் உழைப்பை நல்கக் கூடியவர்களாக இருப்பார்கள். கடந்த 20 ஆண்டுகளில் ஆழ்துளை நீர்க்கிணறுகள் மூலம் புவியின் வெகு ஆழத்திலிருந்து தண்ணீரை மேலே எடுக்கிறார்கள். எனவே முழுக்க மழையை நம்பியிருப்பது என்பது அளவில் சற்று குறைந்திருக்கிறது. தமிழகத்தில் மரப்பயிர் செய்யக் கூடிய பிரதேசமும் இதுவே. பலா, சவுக்கு, கொய்யா ஆகிய மரப்பயிர்கள் இங்கே அதிகமாக உள்ளன. மரப்பயிருக்கு தண்ணீர் அதிக அளவில் தேவைப்படாது. இருக்கும் தண்ணீரைக் கொண்டு அதனை சிக்கனமாகப் பயன்படுத்தி மரங்களை வளர்த்து விட முடியும். நூறிலிருந்து நூற்று இருபது நாட்கள் தமிழகத்தில் சராசரியாக மழை பொழியும் நாட்கள். இந்த மழை நீரை சரியான விதத்தில் நிர்வகித்தால் இந்த பிரதேசத்தின் விவசாயப் பிரச்சனையை சமாளித்து விடலாம். 

விவசாயிக்கு விவசாயம் லாபமளிப்பதாக இருக்க வேண்டும். அப்போது தான் அந்த தொழில் தொடர்ந்து நிகழ முடியும். அதுவே இயல்பான செயலாகவும் இருக்க முடியும். ‘’காவிரி போற்றுதும்’’ அதற்காகவே முயல்கிறது. 

ஏழ்மை என்பது அகற்றப்பட வேண்டும். எந்தெந்த வழிகளில் எல்லாம் ஏழ்மை அகற்றப்பட இயலுமோ அத்தனை வழிகளிலும் முயற்சிகள் நடக்க வேண்டும் என்பது எனது விருப்பம். ‘’அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய் போல் போற்றாக் கடை’’ என்கிறார் திருவள்ளுவர். ஏழ்மை சமூகத்தின் பொதுப் பிரச்சனை என்றே நான் கருதுகிறேன். அதனை தீர்க்க வேண்டியது சமூகத்தில் உள்ள அனைவரின் கடமை என்றே நான் எண்ணுகிறேன். 

நண்பா ! இந்த பயணத்தில் நாம் நிகழ்த்திய உரையாடல்கள் நிறைவளித்தன. காணும் ஒரு காட்சியிலிருந்து ஒரு உரையாடல் தொடக்கத்தை நான் நிகழ்த்துவதும் பின்னர் அந்த உரையாடலை கேள்விகள் மூலம் நீ நீட்டித்து முன்னெடுத்துச் செல்வதும் அந்த உரையாடலிலிருந்து அந்த விஷயத்தின் அடுத்த கட்டத்திற்கு செல்வதும் மேலும் அது தொடர்புடைய இன்னொரு விஷயத்துக்குச் செல்வதும் அனைத்தும் நிகழ்ந்து முடிந்த பிறகு நாம் இன்னும் ஒரு சொல் கூட உச்சரிக்கவேயில்லை என எண்ணும்படியான மறுதுவக்கத்துக்கு வந்து சேர்வதும் என மீண்டும் மீண்டும் நிகழ்ந்த செயல்கள் இனியவையாக இருந்தன. 

நான் நம் நாட்டின் மக்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஜீவனுடன் நிலைத்திருக்கும் ஒரு பண்பாட்டின் அங்கங்களாகக் காண்கிறேன். ஒரு வார காலமாக நிகழும் நம் பயணத்தை முகாந்திரமாகக் கொண்டே நாம் இதனை பரிசீலிக்கலாம். நமக்கு வழி சொன்னவர்கள் நம்முடன் உரையாடியவர்கள் நமக்கு சிறு சிறு உதவி செய்தவர்கள் என நாம் சந்தித்த மனிதர்களை நினைவில் மீட்டாலே நாம் அதனை உணர முடியும். பிறரை நேசிக்க பிறர் மீது அன்பு செலுத்த பிறருக்கு உதவ நம் பண்பாடு மக்களைத் தூண்டிக் கொண்டே இருக்கிறது. அது என்றும் இருப்பது. எப்போதும் அழியாதது. எனவே மக்களைச் சந்திப்பது என்பதும் பயணங்கள் செய்வது என்பதும் அந்த உண்மையை அந்த உணர்வை மீண்டும் மீண்டும் அறிந்து என்னை நானே புதுப்பித்துக் கொள்ளும் செயல்பாடுகள் ஆகும். 

நமது பயணத்தின் முதல் கட்டமாக நாம் வடலூர் சத்திய ஞான சபைக்குச் சென்றிருந்தோம். வடலூர் ராமலிங்க சுவாமிகள் ஒரு பெரும் யோகி. ஞானத்தேடலில் அவர் தீவிரமாக ஈடுபட்டு பலவிதமான ஆத்ம சாதனைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இறைமை உணர்வை அடையக் கூடிய எல்லா வழிகளிலும் அவரது முயற்சி இருந்திருக்கிறது. அவர் தில்லை நடராஜப் பிரானை ஆறுமுகக் கடவுளை போற்றிப் பாடிய பாடல்கள் திருவருட்பாவில் உள்ளன. தன் ஆத்ம சாதனையின் பயனாக இறைமையை அவர் ஒளி வடிவம் என உணர்ந்தார். தீபத்தை இறையருளின் வடிவமாகவும் கருணையை இறைமையின் வெளிப்பாடாகவும் கண்டவர் வள்ளலார். நம் நாட்டின் கோடிக்கணக்கான குடும்பங்களில் வீடுகளில் காலைப் பொழுதிலும் மாலை அந்தியிலும்  பெண்மணிகள் தீபம் ஏற்றுவதை தங்கள் தினசரி நடைமுறையாக வைத்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த விஷயத்தை நாம் இன்னும் ஆழமாக யோசித்துப் பார்த்தால் நமக்கு ஒரு விஷயம் புலப்படும். வள்ளலார் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்தவர். அப்போது அச்சு ஊடகம் ஆரம்ப நிலையில் இருந்தது. அச்சிடப்பட்ட கடவுளர் உருவங்கள் மக்கள் வழிபாட்டுக்குள் வந்திருக்க வாய்ப்பில்லை. கடவுளர் சிலைகள் ஆலயங்களில் வழிபடப் பட்டிருக்கும். கிராமங்களில் வினாயகர் சிலைகள் மரத்தடிகளிலும் குளத்தங்கரைகளிலும் இருந்திருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் தீபம் ஏற்றுவதையும் தீபத்தை வழிபடுவதையும் தங்கள் சமய நெறியாக மேற்கொண்டிருப்பார்கள். எங்கள் பகுதிகளில் ‘’அந்தி விளக்கே அழியாச் செல்வமே வீட்டுக்கு வந்த மகாலஷ்மி ... ‘’ எனத் தொடங்கி கூறப்படும் சிறு பாடல் ஒன்றை பலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.  நம் நாட்டின் எல்லா குடும்பங்களும் வழிபட்ட தீப வழிபாட்டையே வள்ளலார் முன்வைத்தார். தீபத்தை அருளாகவும் கருணையாகவும் கண்டது அவரது ஆன்ம தரிசனம். 

தீபச்சுடர் என்பது எப்போது காணும் போதும் நம்பிக்கை அளிப்பது. நாம் இருக்கும் அறைகளில் எப்போதும் ஒரு தீபச்சுடர் ஒளிர்ந்து கொண்டிருப்பது நமக்கு நன்மை பயப்பது என்று கூறப்படுகிறது. தாவர எண்ணெயில் எரியும் தீச்சுடர் தனது ஒளி நிறையும் பரப்பு முழுதுக்கும் ஒரு உயிர்த்தன்மையை அளிக்கிறது என்பதை தீபம் ஏற்றும் எவரும் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும். 

பசித்திருப்பவருக்கு உணவளிப்பதே சிறந்த வழிபாட்டு முறை என ஒட்டு மொத்த மானுடத்துக்கும் அறிவித்தவர் வள்ளலார். வயிற்றில் எரியும் பசித்தீயை மறைகள் ‘’வைஸ்வாநரன்’’ என்கின்றன. அந்த தீயில் அன்னத்தை அவியாக இடுதலை நம் மரபு வேள்விச்செயல் என வகுக்கிறது. 

நாம் வடலூரிலிருந்து உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமம் சென்றோம். சேவையே உன்னதமான அறம் என்பதை முன்வைக்கும் ஸ்ரீராமகிருஷ்ணரின் நெறியின் படி இயங்கும் பள்ளியில் ஸ்ரீராமகிருஷ்ணர், சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் ஆலயத்தில் அவர்களை வணங்கி அவர்கள் முன் சில நிமிடங்கள் கண் மூடி அமர்ந்திருந்தோம். பின் மதியப் பொழுதாகியிருந்தது அப்போது. அங்கே நமக்கு உணவளித்து உபசரித்தார்கள். சகோதரி கிருஸ்டைன் எழுதிய ‘’நான் கண்ட விவேகானந்தர்’’ என்னும் நூலை அங்கிருந்த நூல் விற்பனை மையத்தில் வாங்கினோம். 

உலகில் உள்ள எல்லோருக்குமே புத்தர் மீது பிரியமும் ஈர்ப்பும் இருக்கும். புத்தரை விரும்பாத குழந்தைகள் உண்டா ? புத்தரை விரும்பாத இளைஞர்கள் உண்டா? புத்தரைத் தம் மகவாகக் கருதாத பெண்கள் உண்டா? பாரதி நம் நாட்டை ‘’பூரண ஞானம் பொலிந்த நன்னாடு ; புத்தர்பிரான் அருள் பொங்கிய நாடு’’ என்கிறான்.  சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் பௌத்தம் குறித்து பேசியிருக்கிறார். ஒரு விதத்தில் , தான் ஒரு பௌத்தன் என்று சொல்கிறார். சமணம் உருவாக்கிய சென்றடைந்த இடத்திலிருந்து தனது ஞானப் பயணத்தைத் துவக்கியவர் புத்தர். எனவே மேலும் முன்னகர்ந்தவர். அவரது முன்னகர்வு என்பது எல்லா மானுடருக்கும் துயர் என்பது ஏதும் அற்ற புத்தநிலை சாத்தியம் என்பதை உரைத்தது. புத்தரின் மார்க்கத்தை தனது துவக்கப்புள்ளியாகக் கொண்டு தனக்கான மார்க்கத்தைக் கண்டடைந்தவர் ஆதிசங்கரர். மகாவீரர், புத்தர், ஆதி சங்கரர் ஆகிய மூன்று ஞானிகளும் நம் நாட்டின் பண்பாட்டு அடிப்படைக்கு மிகப் பெரிய பங்களிப்பை அளித்தவர்கள். மக்கள் சமூகங்கள் ஒற்றுமையாலும் நல்லெண்ணத்தின் அடிப்படையாலும் மேலான புரிதலாலும்  இணைக்கப்பட வேண்டியவை என்னும் நம்பிக்கை கொண்டு நம் நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தும் பணியை வெவ்வேறு அறச் செயல்கள் மூலம் 3000 ஆண்டுகளுக்கு மேலாக முன்னெடுக்கும் சமயம் சமணம். உடல் வலிமையால் பிறரை வெற்றி கொள்வது வீரம் என்றால் அகவலிமையால் தன்னை வெல்வதே மகாவீரம் எனவும் அத்தகைய மாவீரத்தின் இயல்பு சக உயிர்களிடம் கருணையுடன் இருத்தல் எனவும் பறைசாற்றி நிறுவியது சமணம். மகாத்மா காந்தி அடிகளிடம் சமணத்தின் தாக்கம் கணிசமாக உண்டு. திருநறுங்குன்றம் குகையில் பார்ஸ்வநாதர் சிலை முன் அமர்ந்திருந்தது ஒரு பெருங்கருணையாளன் முன் அமர்ந்து அவனது கருணையின் ஆசியைப் பெற்றது போல் உணர வைத்தது. 

பேராலயங்கள் நம் லௌகிக எல்லைகளைத் தகர்க்கின்றன ; இயற்கையின் பெருங்கட்டமைப்பின் ஒரு பகுதி என நம்மை உணர வைக்கின்றன. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம் அத்தகைய ஒன்று. அப்பகுதியின் மக்கள் தினமும் ஆலயத்துக்கு வந்து இறைவணக்கம் செலுத்துவதை தங்கள் வழமையாகக் கொண்டிருக்கிறார்கள். 

நமது முதல் நாள் பயணம் வடலூர், உளுந்தூர்பேட்டை, திருநறுங்குன்றம் , விருத்தாசலம் என்பதாக அமைந்தது. அன்றைய தினம் முழுக்கவே பரவசமாக இருந்தது. 

இரண்டு தினங்களுக்குப் பின், நாம் காவிரி பாய்ந்து செழிக்கச் செய்யும் சோழ நாட்டின் மையப் பகுதியில் பயணித்தோம். நம் நாட்டில் ஒரு மரபு இருக்கிறது. காலை எழுந்தவுடன் ஏழு நதிகளின் பெயர்களைக் கூறி வணங்குவார்கள். ‘’கங்கா யமுனா சரஸ்வதி சிந்து காவிரி நர்மதா கோதாவரி’’ எனக் கூறுவார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எத்தனையோ தலைமுறைகளுக்கு நதிகள் உணவளித்து உயிர்த்திருக்கச் செய்திருக்கின்றன. ‘’சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி’’ என கம்பராமாயணத்தில் ஓரிடத்தில் சொல்கிறான் கம்பன். எவ்விதமான தடைகளற்ற நகர்வைக் குறிக்கும் அந்த வரி அறத்தின் பெரும்பெருக்கையும் சுட்டிக் காட்டுகிறது. நதிதீரம் என்பது வானம் போல. எந்நாளும் பார்த்துத் தீராதது. காவிரியின் பெயரால் ‘’காவிரி போற்றுதும்’’ என ஒரு அமைப்பை நடத்தும் வாய்ப்பு அமைந்ததை அன்னை காவிரியின் கருணை என்றே கொள்கிறேன். 

நமது பயணத்தின் மூன்றாம் கட்டமாக ஓரிரு நாளில் மீண்டும் பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் பயணித்தோம். வெங்கடாம்பேட்டை விஷ்ணு ஆலயம். ஸ்ரீராமர் சயனிக்கும் சிற்பம் அகம் கரைக்கும் அழகு கொண்டது. கருவறையில் குழலின் இனிய இசையை எழுப்புகிறான் வேணுகோபாலன். மேலசித்தாமூர் சமண மடத்துக்கும் ஆலயத்துக்கும் சென்றது மிகவும் முக்கியமான அனுபவம். பின்னர் அருகில் இருக்கும் விழுக்கம் சமண ஆலயத்துக்குச் சென்றோம். 

நீ பணிக்குத் திரும்பும் காலம் நெருங்கியது என்னும் நிலையில் எதிர்பாராத வகையில் கம்பர் பிறந்த திருவழுந்தூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 

ஒரு வாரத்தில் மூன்று கட்டமாக மேற்கொண்ட இந்த பயணம் கங்கையை நோக்கி மேலும் ஒரு இரு சக்கர வாகனப் பயணத்தைத் துவக்க வேண்டும் என்னும் ஆவலை ஏற்படுத்தியது. அவ்வாறெனில் அக்டோபர் முதல் வாரம் பயணத்தைத் துவக்க வேண்டும். நவம்பர் டிசம்பரில் நம் நாட்டின் வட பகுதியில் பனிமூட்டம் தொடங்கி விடும். குளிர் அதிகமாக இருக்கும். அக்டோபரில் எனக்கு தொழில் சார்ந்து பணிகள் உள்ளன. அவ்வாறெனில் மார்ச் மாதத்துக்குப் பின்னரே நெடும்பயணத்தைத் துவக்க முடியும். பயணம் செல்ல வேண்டும் என மனத்தில் நினைத்தால் போதும் ; அதற்கான வழியை அந்த நினைவே கண்டடைந்து சொல்லும் என்பது எனது அனுபவம். அவ்வாறே அது நிகழட்டும் என விட்டுவிட்டேன். 

சமண தீர்த்தங்கரர்களை வணங்கியது ஒரு நீண்ட உபவாசத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கியது. மகாத்மா காந்தி உபவாசத்தை ஆன்ம சாதனைக்கான மார்க்கமாகக் காண்கிறார். இந்த விஷயத்தில் இறை விருப்பம் எப்படியோ அப்படி நிகழட்டும். 

உனது வாகனம் மிகவும் விரும்பத்தகுந்ததாக இருந்தது. இனிமையான பயண அனுபவத்தை அளித்தது. நீ வாகனத்தை மிகவும் சிறப்பாக இயக்கினாய். நான்கு சக்கர வாகனம் எத்தனை வசதி கொண்டதாயினும் நீண்ட தூரப் பயணங்களுக்கு இரு சக்கர வாகனமே மேலும் சிறப்பானது. உனது வார விடுமுறை நாட்களில் உனது ஊரிலிருந்து 120 கி.மீ தூரம் உள்ள இடத்துக்கு இரு சக்கர வாகனத்தில் காலை புறப்பட்டுச் சென்று மாலை வீடு திரும்பு. அன்றைய தினம் 240 கி.மீ இரு சக்கர வாகனப் பயணம் நிகழ்த்தியதாயிருக்கும். ஒவ்வொரு வார இறுதியிலும் ஒவ்வொரு திசை என நான்கு வாரங்களுக்கு நான்கு திசையில் அதே முறையில் பயணம் செய். உனது உடலும் மனமும் இரு சக்கர வாகனத்துக்குப் பழகி விடும். அதன் பின் எத்தனை நாள் வேண்டுமானாலும் நாம் சென்று கொண்டேயிருக்க முடியும். 

அன்புடன்,

பிரபு