எனக்கு கே.எஸ் என ஒரு நண்பன் இருக்கிறான். வட இந்தியாவில் பணி புரிகிறான். அலுவலகத்தில் அவனுக்கு 15 நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு சிதம்பரத்தில் உள்ள அவனது உறவுக்காரர் ஒருவரின் வீட்டுக்கு வந்திருக்கிறான். அவர்கள் வீட்டில் ஒரு கார் இருக்கிறது. அதனை எடுத்துக் கொண்டு பழைய தென்னாற்காடு மாவட்ட பகுதிகளைச் சுற்றி வருவோம் என்று சொன்னான். எங்காவது பயணம் செல்லலாம் என எவர் அழைத்தாலும் உடனே கிளம்பக் கூடியவன் நான். பயணம் செய்கையில் எனக்கு புதிதாக எண்ணங்கள் தோன்றும். புரியாத பிடிபடாத விஷயங்கள் புரியும் ; பிடிபடும். நூற்றுக்கணக்கான மனித முகங்களைக் காணும் போது உண்டாகும் மகிழ்ச்சி இணை கூற இயலாதது.
இன்று காலை பேருந்தில் சிதம்பரம் சென்று நண்பனை அலைபேசியில் அழைத்தேன். பேருந்து நிலையம் வந்து நண்பன் அழைத்துச் சென்றான். நண்பரின் உறவினர் வீட்டில் காலைச் சிற்றுண்டி தயார் செய்து வைத்திருந்தார்கள். பூரியும் இட்லியும். கோதுமை அல்வா தயாரித்திருந்தார்கள். பிரியத்துடன் அவர்கள் அளித்த உணவை உண்டு விட்டு எங்கள் பயணத்தைத் துவங்கினோம்.
நண்பன் இப்போதுதான் கார் ஓட்டப் பழகியிருக்கிறான் என்றாலும் காரை மிகச் சிறப்பாகக் கையாள்கிறான். ஒருவர் வாகனத்தை எப்படி இயக்கக் கூடிய்வர் என்பது சில நூறு மீட்டர்கள் அவர் வாகனத்தை நகர்த்திச் செல்கையிலேயே தெரிந்து விடும். நண்பன் சிறந்த வாகன சாரதி என்பதைப் புரிந்து கொண்டேன்.
வண்டியை வடலூர் சத்திய ஞான சபைக்கு விடச் சொன்னேன். தினமும் காலை 11.30 மணியிலிருந்து 12 மணி வரை அங்கே ஜோதியை தரிசிக்க முடியும். மீண்டும் இரவு 7.30 மணியிலிருந்து 8 மணி வரை. நாங்கள் 11.30 மணிக்கு அங்கிருந்தோம்.
ஜோதி தரிசனம் கண்டோம். பாரதி ஜோதியை ‘’எழு பசும் பொற்சுடர்’’ என்கிறான். நம் உடலின் வெப்பமாக விளங்கும் தீ. நாம் உண்ணும் உணவை உடலாக மாற்றும் தீ. நம் சுவாசத்தில் உயிராக உயிர்க்கும் தீ. ஜோதி என்பது நம் உயிரே தான். எல்லா உயிரின் எல்லாவற்றின் சிறு வடிவே ஜோதி. இறைமை அருளின் வடிவம் என ஜோதியை உணர்ந்தார் இராமலிங்க அடிகள். சிறு தீச்சுடரில் ஒளிரும் தெய்வ சைதன்யத்தை உணரும் படி ஒட்டு மொத்த மானுடத்தின் முன் கூறினார் இராமலிங்க அடிகள். நூறு ஆண்டுகளாக சுடர்ந்து கொண்டிருக்கும் வள்ளலார் ஏற்றிய தீபத்தின் முன் அகம் கரைய நின்றோம். முப்பது நிமிடங்களுக்கு மேலாக ஜோதியை வழிபட்டோம். அருட்பிரசாதமாக வெல்லம் தந்தார்கள்.
நாங்கள் அடுத்து சென்ற இடம் உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமம். அங்கே பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் திருக்கோவில் உள்ளது. அங்கு சென்று சில நிமிடங்கள் தியானத்தில் அமர்ந்திருந்தோம். அங்கிருக்கும் நூலகத்தில் சுவாமி விவேகானந்தர் நூல்கள் சிலவற்றை வாங்கினோம். ஆஸ்ரமத்தில் மதிய உணவருந்தச் சொன்னார்கள். உணவருந்தினோம். அங்கிருந்த துறவியரை வணங்கி விட்டு புறப்பட்டோம்.
உளுந்தூர்பேட்டையிலிருந்து 15 கி.மீ தொலைவில் திருநறுங்குன்றம் என்ற சமணத்தலம் உள்ளது. பகவான் பார்ஸ்வநாதர் எழுந்தருளியிருக்கும் திருத்தலம். ஒரு குகையில் புடைப்புச் சிற்பமாக பகவான் இருக்கிறார். ஆலய நடை மாலை 4 மணிக்குத் திறந்தது. வழக்கமாக காலை 6 மணியிலிருந்து மதியம் 12 மணி வரைதான் ஆலயம் திறந்திருக்கும் என்றும் இன்று அரிதாக மாலையில் திறந்துள்ளது என்று அங்கே இருந்த சிப்பந்திகள் கூறினார்கள். அந்த சமயத்தில் நெய்வேலியிருந்து ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியரும் அவரது மனைவியும் வந்திருந்தார்கள். நண்பன் அவர்களிடம் சமணம் குறித்து ஆர்வமாக உரையாடிக் கொண்டிருந்தான். அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. எங்களுக்கும் மகிழ்ச்சி. பார்ஸ்வநாதர் முன் சில நிமிடங்கள் தியானத்தில் அமர்ந்தோம்.
திருநறுங்குன்றத்திலிருந்து மாலை 6.15க்கு கிளம்பினோம். அங்கிருந்து விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம் வந்தோம். தமிழகத்தின் பேராலயங்களில் ஒன்று விருத்தாசலம். பெரிய பெரிய கோபுரங்களும் மண்டபங்களும் நிறைந்திருந்த ஆலயத்தின் இறைவன் முன் சில நிமிடங்கள் அமர்ந்தோம்.
இரவு 9 மணி அளவில் சிதம்பரம் வந்தோம்.
நான் அங்கிருந்து பயணித்து 10 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.
நாளையும் நாளை மறுநாளும் இதைப்போல் வேறு வேறு இடங்களுக்குப் பயணிப்போம் என்று கே.எஸ் கூறினான்.