Monday, 18 December 2023

திருவெள்ளறை

தஞ்சைப் பகுதி விவசாயியான பெரியண்ணன் சென்னைவாசி. ஒரு வார காலம் அவர் சொந்த ஊருக்கு வந்திருப்பதை அலைபேசி உரையாடல் மூலம் அறிந்தேன். திருவெள்ளறை திருத்தலத்திற்குச் செல்ல அவரும் மிகுந்த ஆர்வம் காட்டினார். மதிய உணவு முடித்து தஞ்சை புறப்பட்டேன். பேருந்து நிலையத்தில் என்னை அழைத்துக் கொண்டார். நண்பர் பெரியண்ணனின் காரில் திருச்சி பயணமானோம். 

நண்பர் பெரியண்ணன் ஆலய சிற்பங்கள் குறித்து தனது தன்னார்வத்தின் மூலம் பயின்று சிற்பவியல் குறித்து சிறப்பான ஞானம் கொண்டுள்ளார். ஆலய சிற்பங்கள் குறித்து நிறைய விஷயங்களைக் கூறினார். 

இந்திய சிற்பவியல் என்பது மொழியும் சிற்பமும் இணைந்தது. நம் நாட்டில் முதலில் பெரும் படைப்புகள் உருவாயின. மிகப் பிரம்மாண்டமானவை என்பவை நமது இரண்டு இதிகாசங்களான இராமாயணமும் மகாபாரதமும். அதற்கு முன்பே மொழியில் உருவானவை புராணங்கள். புராணங்களும் இதிகாசங்களும் எழுதப்பட்டு அவை நம் நாடெங்கும் புழக்கத்தில் இருந்த மொழிகளில் மொழி மாற்றம் பெற்று நாட்டு மக்களால் கேட்கப் பெற்றன. இவை நிகழ்ந்து பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னரே பேராலயங்களின் உருவாக்கம் நிகழலாயிற்று. நம் நாட்டில் முதலில் எழுந்தது சொல். அதன் பின்னரே சொல்லின் விளக்கமாக சிற்பம் எழுந்தது. இந்திய சிற்பவியலை பயில விரும்பும் எவரும் இந்திய புராணங்களையும் இந்திய இதிகாசங்களையும் குறைந்தபட்சமாகவேனும் பயில வேண்டும். அப்போதுதான் சிற்பவியல் தனது கதவுகளைத் திறக்கும். 

அன்னப்பறவை பிரம்மனின் வாகனம். வராகம் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று. ஒரு சிற்பத்தில் வராகம் மண்ணைத் தோண்டிக் கொண்டும் அன்னப்பறவையில் அமர்ந்த ஒருவர் வான் நோக்கி பறந்து கொண்டும் இருந்தால் சிவனின் அடி முடி காண பிரம்மனும் விஷ்ணுவும் முயன்ற செயல் என்னும் தொன்மம் நினைவுக்கு வர வேண்டும். அந்த சிற்பத்தை அப்போது மேலும் புரிந்து கொள்ள முடியும். நான் சிற்பவியலுக்குள் மொழியின் மார்க்கத்தில் செல்பவன். அது எனக்கு மிகவும் அணுக்கமான வழி. 

திருச்சி செல்லும் வழியில் துவாக்குடிக்கு அருகில் பல்லவர் கால குடைவரை ஒன்று இருப்பதாகக் கூறிய பெரியண்ணன் அங்கே அழைத்துச் சென்றார். ஒரு குகையைக் குடைந்து ‘’கண் நிறைந்த பெருமாள்’’ என சயனக் கோலத்தில் இருந்த பெருமாளைச் செதுக்கியிருந்தனர். அருகில் ஒரு குகையில் ‘’சப்த கன்னியர்’’ சிற்பம் செதுக்கப்பட்டிருந்தது. 

நமது மண் சாக்தத்தின் தாக்கம் வலுவாக உள்ள மண். இன்றும் எந்த ஊரில் எடுத்துக் கொண்டாலும் சக்தியை வழிபடுபவர்களே அதிகம். எந்த ஊரிலும் மாரியம்மன் கோவிலின் திருவிழாக்களுக்கு கூடும் பக்தர்களே மிக அதிகம். அது அன்னைக்கும் பிள்ளைகளுக்குமான உறவு. எந்த பிள்ளையும் அன்னை தன்னை அறிவாள் என்பதையும் தன் கோரிக்கைகளை நிறைவேற்றுவாள் என்பதையும் உணர்வின் ஆழத்தில் உணர்ந்திருக்கும். சாக்த வழிபாட்டின் ஒரு வழிமுறை ‘’சப்த கன்னியர்’’ வழிபாடு. நாடெங்கும் ‘’சப்த கன்னியர்’’ சிற்பங்கள் உள்ளன. தன் பிள்ளைகளின் உளம் அறிந்து ஓடோடி வருபவள் அன்னை. இங்கே ஏழு அன்னையர். துயர் நீக்கவும் வளம் நிறைக்கவும் ஏழு அன்னையரை காலகாலமாக வணங்குகிறது நம் மக்கள் திரள். 

அங்கிருந்து திருவெள்ளறை சென்று சேர்ந்தோம். மிகப் பெரும் மதில்கள் நிறைந்த பேராலயம் திருவெள்ளறை . ஆலயத்தைச் சுற்றி இருக்கும் வீடுகளில் இருந்து சிறுமிகளும் இளம்பெண்களும் ஆலயத்தில் மாக்கோலம் இட்டுக் கொண்டிருந்தார்கள். அதனைக் காணுகையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த பணியை ஆற்றிய போது ஆலயத்தின் இறைவனிடம் அவர்களுக்கு அந்த செயல் மூலம் உள்ளபூர்வமான உணர்வும் பிணைப்பும் உருவானதைக் காண முடிந்தது. அழகிய கோலங்கள். தாமரையின் வெவ்வேறு வடிவங்களை அவர்கள் கோலத்தில் காண முடிந்தது. அங்கே இறைவனின் நாமம் ‘’செந்தாமரைக் கண்ணன்’’. 

இறைவன் நின்ற திருக்கோலம். சூரியனும் சந்திரனும் சேஷனும் கருடனும் ஒன்றாக கருவறையில் பெருமாளை சூழ்ந்து நின்றார்கள். திருவெள்ளறை தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் சொந்த ஊர். 

எனது உளம் நெகிழ்ந்தும் தத்தளித்துக் கொண்டும் இருந்தது. ஏன் என்று தெரியவில்லை. சோழ தேசத்து திவ்ய தேசங்கள் 40ஐயும் தரிசித்ததால் இருக்கலாம். நடு நாட்டு திவ்ய தேசங்கள் இரண்டையும் முழுமையாக தரிசித்திருக்கிறேன். தொண்டை நாடு மலை நாடு பாண்டிய நாட்டில் எஞ்சியிருக்கும் திவ்ய தேசங்களை சேவிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இந்த மார்கழியில் ஏதேனும் ஒரு நாடாகினும் நிறைவுற்றால் மகிழ்ச்சி. ஈஸ்வர ஹிதம்.