இங்கே எனக்கு ஒரு நெருக்கமான நண்பர் இருக்கிறார். அவரது உறவினர் ஒருவர் தஞ்சாவூரில் மனநோய் மருத்துவமனை ஒன்றில் மனநோய்க்கான சிகிச்சை எடுத்து வருகிறார். அவ்வப்போது நண்பர் செல்லும் போது நானும் அவருடன் உடன் செல்வேன். நண்பரின் உறவினரை அவ்வப்போது சந்திப்பது அவருக்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதால் நண்பருடன் செல்வேன். அந்த மருத்துவமனையின் முன்பு ஒரு பூந்தோட்டம் அமைத்திருக்கிறார்கள். அங்கே சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களை ஒரு நாளில் குறிப்பிட்ட நேரம் அந்த பூங்காவில் இருக்கச் செய்வது சிகிச்சையின் ஒரு பகுதி. மலர்கள் மலர்ந்திருக்கும் அந்த பூந்தோட்டம் எவருக்குமே மன அமைதியைத் தரக் கூடியது.
காலை நானும் நண்பரும் தஞ்சாவூர் பயணமானோம். காலை ஏழு மணிக்குக் கிளம்புவதாகத் திட்டம். பத்து நிமிடம் தாமதமாகக் கிளம்பினோம். காலை உணவை குடந்தையில் முடித்து விட்டு தஞ்சாவூர் சென்றடைந்த போது மணி பத்து. நண்பரின் உறவினரை மருத்துவமனை செவிலியர்கள் அறையிலிருந்து அழைத்து வந்தனர். எங்களைக் கண்டதும் மகிழ்ந்து புன்னகைத்தார். அப்போது எனக்கு ஒரு விஷயம் மனதில் தோன்றியது. அதாவது அடுத்த முறை வரும் போது அவரை ஊருக்கு அழைத்து வந்து விடலாம் என்று. சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் தென்படுகிறது.
எனது நண்பர் அவரது உறவினரை தஞ்சை கடைவீதிக்கு அழைத்துச் சென்று சில பொருட்களை வாங்கிக் கொடுக்க விரும்பினார். நான் காத்திருக்கிறேன் ; அவரை அழைத்துச் சென்று வாருங்கள் என்று கூறினேன். இருவரும் புறப்பட்டுச் சென்றனர். நான் பூங்காவில் காத்திருந்தேன்.
நாம் பொருளியல் நலனையே நலன் என நினைக்கிறோம். நிச்சயம் பொருளியல் நலன் நலன் தான். அதில் எந்த ஐயமும் இல்லை. இருப்பினும் ஒவ்வொரு மனிதனுக்கும் உடல்நலனும் மனநலனும் முக்கியம். பொருளியல் நலன் இருந்து உடல்நலன் இல்லாமல் போனாலும் துயரம் தான். நம் சமூகத்துக்கு அவசியம் உடற்பயிற்சிகளும் விளையாட்டுகளும் அவசியம். உடல் என்பது உழைப்புக்கு உரியது. உடல் உழைப்பு கொடுக்காமல் இருப்பது உடலை வீணாக்குவதே அன்றி வேறல்ல. கைகளால் செய்யக் கூடிய கலைகள் மனதுக்கும் உடலுக்கும் மகிழ்ச்சி தரும். ஆரிகமி என்னும் கலை காகிதத்தில் பல உருவங்கள் செய்யும் கலை. களிமண்ணில் பொம்மைகள் செய்வது , குப்பைப் பொருட்களிலிருந்து விளையாட்டுப் பொருட்கள் செய்வது ஆகியவை மனதிற்கு தரும் ஆசுவாசம் மிகப் பெரியது. இந்த விஷயங்கள் ஒவ்வொரு வீட்டிலும் பயிலப் பட வேண்டும். இந்த விஷயங்கள் தொடர்பாக ஏதேனும் செயலை முன்னெடுக்க வேண்டும் என்று சிந்தித்தேன்.
இருவரும் திரும்பி வர மூன்று மணி நேரமானது. நண்பரின் உறவினர் மருத்துவமனை அறையிலேயே மாதக்கணக்காக இருக்க வேண்டியவர் என்பதால் இன்னும் கொஞ்சம் நேரம் கூட இருந்து விட்டு வரட்டும் என எண்ணினேன். பொங்கல் பண்டிகை என்பதால் அங்கே சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களின் உறவினர்கள் பல ஊர்களிலிருது வந்திருந்தனர். ஒவ்வொரும் தங்கள் வீட்டில் சமைத்த உணவைக் கொண்டு வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் தங்கள் உறவினர்களுக்கு அளித்தனர். வந்திருந்தவர்கள் எல்லாருடைய முகத்திலும் நம்பிக்கையின் ஒளியைக் கண்டேன். மனித வாழ்க்கைதான் எத்தனை விதமான உணர்ச்சிகரமான சூழ்நிலைகளைக் கொண்டது என எண்ணிய போது எல்லாவற்றையும் படைத்தவன் குறித்து எண்ணினேன். நண்பரின் உறவினரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினோம்.
அடுத்து ஒரு இரண்டரை மணி நேரப் பயணம். ஊர் வந்து சேர்ந்தோம். நேராக வண்டியை கட்டுமானப் பணியிடத்துக்கு விடச் சொன்னேன். நான்கு பேர் இன்று பூச்சுவேலை செய்து கொண்டிருந்தனர். பணி முன்னேற்றத்தைப் பார்த்து விட்டு வீடு திரும்பினேன்.