இரண்டு நாட்களுக்கு முன்பு வரை இங்கே நல்ல மழை. நண்பர் ஒருவரைக் காண சீர்காழி சென்றிருந்தேன். வைத்தீஸ்வரன் கோவிலுக்கு இப்போது ஒரு சுற்றுச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலை மயிலாடுதுறை சீர்காழி சாலையுடன் இணையும் இடம் ஒரே சேறாக இருந்தது. திரும்பி வரும் போது, அங்கே ஒரு காட்சியைப் பார்த்தேன். அதாவது ஒரு இளைஞனின் வாகனம் சேறில் முழுமையாக சிக்கி விட்டது. அப்போது பெரிய தூறல் பெய்து கொண்டிருந்தது. இன்னும் சில நிமிடங்களில் பெருமழை பெய்யத் தொடங்கி விடும் என்னும் நிலை. அந்த இளைஞன் கை காட்டி உதவி கேட்டான். நான் எனது வண்டியை சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைத்து விட்டு அவன் இருக்கும் இடத்துக்குச் சென்றேன். அவனது வாகனம் 150சி.சி வாகனம். அளவிலும் எடையிலும் பெரியது. நாங்கள் இருவரும் நகர்த்த முயற்சி செய்தோம். அந்த வாகனம் அசைந்து கொடுக்கவில்லை. எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
அப்போது ஒரு வயோதிகர் இரு சக்கர வாகனத்தில் வந்தார். நாங்கள் சேற்றில் இருந்த வாகனத்தை வெளியே கொண்டு வர மேற்கொள்ளும் முயற்சியில் அவரும் இணைந்து கொண்டார். எங்கள் இருவருக்கும் அவர் குறிப்புகள் கொடுத்தார். அதனை நாங்கள் பின்பற்றினோம். அவரும் தனது உடல் வலிமையால் முயன்றார். அவர் அளித்த குறிப்புகள் பின்பற்றப்பட்டதால் வாகனத்தை சேற்றிலிருந்து சாலைக்கு கொண்டு வந்து விட்டோம்.
எங்கள் இருவருக்கும் எப்படி வயோதிகர் இவ்வளவு எளிதில் திட்டமிட்டு வண்டியை மீட்டு விட்டார் என்று ஆச்சரியம். எங்கள் வியப்பைத் தெரியப்படுத்தினோம்.
‘’நான் எக்ஸ் மிலிட்டரி தம்பி ‘’ என்றார்.
நான் ‘’இன்ஃபேண்டரியா சார் ! எந்த ரெஜிமெண்ட் ?’’ என்று கேட்டேன்.
‘’ஆமாம் தம்பி ! பிரிகேட்ஸ் ஆஃப் கார்ட்ஸ் ‘’ என்றார்.